99 வயது வரை இளவரசர்தான்... பிலிப் மன்னர் என்று அழைக்கப்படாதது ஏன்?

0 133571
ராணியுடன் இளவரசர் பிலிப்

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மனம் கவர்ந்த காதல் கணவராக இளவரசர் பிலிப் திகழ்ந்தபோதிலும், கடைசி வரை 'மன்னர்' என அழைக்கப்படவே இல்லை. அதற்கான காரணம் என்ன..? வாருங்கள் தெரிந்து கொள்வோம்...

இங்கிலாந்து ராணி எலிசபெத், கடந்த 1942 ஆம் ஆண்டில் 21 வயதாக இருந்த போது இளவரசர் பிலிப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராணிக்கு, இளவரசர் பிலிப்பை 13 வயதிலிருந்தே தெரியும். இருவருக்குமிடையேயான இனம் புரியாத நட்பு, திருமணத்தில் முடிந்தது.

காதலர்களாக இருந்த போது இளவரசர் பிலிப்புக்கு ராணி எலிசபெத் காதல் சொட்ட சொட்ட கடிதங்கள் எழுதி இருந்தார். அதில் ஒரு கடிதம், சில ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 14,400  பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு ஏலம் விடப்பட்ட போது, உலகமே அதனை வியந்து பார்த்தது. அதில், இளவரசர் பிலிப்புடன் நடந்த சந்திப்புகள், கேளிக்கை விருந்துகளில் பங்கேற்றது மற்றும் சுவாரஸ்யமான உரையாடல்கள் இடம் பெற்றிருந்தன.

அந்த அளவுக்கு இருவருக்கும் இடையே நெருக்கமான காதல் உறவு இருந்தது. அதே சமயம் 68 ஆண்டுகளுக்கு முன்பு, அரியணை ஏறிய இளவரசி எலிசபெத் மகாராணியான நிலையில், அவரது கணவரான இளவரசர் பிலிப் மட்டும் கடைசி காலம் வரை 'இளவரசர் பிலிப்' என்றும், எடின்பர்க் கோமகன் என்றும் அழைக்கப்பட்டாரே தவிர, 'மன்னர்' என ஒரு போதும் அழைக்கப்படவில்லை.

வருங்காலத்தில் இளவரசர் வில்லியம் 'மன்னர்' ஆகலாம். அவரது மனைவி மனைவி கேத்தரைனும் 'மகாராணி' என அழைக்கப்படலாம். அப்படி இருக்க பிலிப் மட்டும் ஏன் 'மன்னர்' என அழைக்கப்படவே இல்லை? என்பதற்கான விடையைச் சொல்கிறது இங்கிலாந்து நாடாளுமன்ற சட்ட விதிமுறைகள்.

இந்த சட்டத்தின்படி, இங்கிலாந்து அரச குடும்பத்தின் அடுத்த மன்னர் அல்லது ராணியாக யார் வரவேண்டும் என்பதை ரத்த உறவுதான் தீர்மானிக்குமே தவிர, பாலினம் அல்ல. அதாவது அரச குடும்பத்தினரின் வாழ்க்கைத் துணைவர்களைப் பொறுத்தவரை ஆணுக்கு ஒரு விதி, பெண்ணுக்கு ஒரு விதி என வெவ்வேறாக வகுக்கப்பட்டுள்ளது.

அரச குடும்ப ரத்த உறவு உள்ள ஒரு ஆண், எந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாலும், அவரது மனைவி, கணவர் இளவரசராக இருக்கும்போது 'இளவரசி' என்றும், கணவர் 'மன்னர்' ஆகி விட்டால், 'ராணி' என்றும் அழைக்கப்படுவார். இதன்படி, நாளை வில்லியம் 'மன்னர்' என அழைக்கப்படும்போது, அவரது மனைவி கேத்தரைனும் 'ராணி' என்றே அழைக்கப்படுவார்.

அதே சமயம், அரச குடும்ப ரத்த உறவு உள்ள ஒரு பெண், அரச குடும்பம் அல்லாத அல்லது அரச குடும்பத்தைத் துறந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அவரது கணவர்,  இளவரசர் என்றோ மன்னர் என்றோ அழைக்கப்பட மாட்டார்.

அந்த அடிப்படையிலேயே பிலிப், எலிசபெத்தை 1947 ஆம் ஆண்டில் மணந்தபோது அவருக்கு 'இளவரசர்' என்ற பட்டப் பெயர் வழங்கப்படவில்லை.

இருப்பினும் தனது அரச குடும்ப அதிகாரத்தைப் பயன்படுத்தி, 1957 ஆம் ஆண்டு, கணவர் பிலிப்புக்கு 'இளவரசர்' என்ற பட்டத்தை வழங்கினார் எலிசபெத். அதன் காரணமாகவே, கடைசி வரை 'மன்னர்' என அழைக்கப்படாமலேயே மறைந்தும் போனார் பிலிப்.

இத்தனைக்கும் இளவரசர் பிலிப், கிரேக்க மற்றும் டேனிஷ் அரச குடும்பத்தினருக்கு இளவரசனாகப் பிறந்தவர். ஆனால் எலிசபெத்தை திருமணம் செய்வதற்காக அரச குடும்பத்தைத் துறந்தார். அதற்கு பரிசாகவே, அவருக்கு 'எடின்பர்க் கோமகன்' என்ற பட்டத்தை ராணி எலிசபெத் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments