FDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்..! சூறையாடப்பட்ட திரையரங்கு

0 60270

முதல் நாள் முதல் காட்சியில் தங்கள் அபிமான நடிகரின் படத்தை திரையிடுவதில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் அந்த திரையரங்கை சல்லி சல்லியாக நொறுக்கிய விபரீதம் தெலங்கானாவில் அரங்கேறி இருக்கின்றது.

ஆந்திராவில் எந்த ஒரு திரையுலகவிழாவிலும் தன் பெயரை சொன்னால் அரங்கம் அதிரவைக்கும் ரசிகர்களை நம்பி ஜன சேனா என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்து பெரும் காயம்பட்டவர் பவன் கல்யான்..! அரசியல் ஆட்டத்தில் தரையில் ஜோலிக்காத பவன் கல்யாண் திரையில் இன்னும் பவர்புல் ஸ்டாராக உள்ளார்.

தமிழில் அஜீத்  நடித்த நேர் கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான, பவன் கல்யாணின் வக்கீல் சாப் என்ற படத்தின் முன்னோட்ட காட்சிகள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானாலும் திரையரங்கில் பார்ப்பதற்காக முண்டியடித்த முரட்டு ரசிகர்கள் திரையரங்க வாசல் கண்ணாடி கதவுகளை சல்லி சல்லியாக நொறுக்கினர்.

இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வாலில் உள்ள தியேட்டரில் வக்கீல் சாப் படம் வெளியான முதல் நாள் முதல் காட்சி பார்க்க சென்ற ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பவன் கல்யாண் நடிப்பில் 2 வருடம் கழித்து வெளியாகும் படம் என்பதால் பலத்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். வழக்கமான படம் போல இல்லாமல் இந்த படத்தில் நாயகன் தோன்றும் காட்சி தாமதமானது.

நாயகன் பவன் கல்யாண் அறிமுகமாகும் காட்சிக்கு முன்னதாகவே தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் நிறுத்தப்பட்டது. அவ்வளவு தான் அடுத்த நொடியே திரையரங்கின் இருக்கைகளையும் , கதவுகளையும் ரசிகர்கள் அடித்து  நொறுக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து திரையரங்க நிர்வாகம் ரசிகர்களை ஒருவழியாக வெளியே அனுப்பி இரும்பு கேட்டை இழுத்து பூட்டியது, ஆனாலும் ஆவேசம் குறையாத முரட்டு ரசிகர்கள் பட்டாசுகளை கொளுத்தி திரையரங்கிற்குள் வீசினர்.

கற்களை சரமாரியாக வீசி திரையரங்கின் முன்பக்க ஜன்னல் கண்ணாடிகளை சல்லி சல்லியாக நொறுக்கினர்.

தமிழகத்தை போலவே முதல் நாள் முதல் காட்சிக்காக வெறி பிடித்த ரசிகர் கூட்டத்தை முண்டியடிக்க வைத்து லட்சங்களை வசூலிக்கும் திரையரங்க உரிமையாளர்களின் ராஜதந்திரம் தெலங்கானாவிலும் உள்ளது. அப்படிப்பட்ட முரட்டு ரசிகர்கள் கூட்டம் உணர்ச்சி வசப்பட்டதால் அந்த திரையரங்கமே அலங்கோலமானது ..!

திரையரங்கை முறையாக பராமரிக்காமல் பணத்தை மட்டும் வசூலித்துக் கொண்டு முழுமையாக படம் திரையிடாவிட்டால் திரையரங்குகளுக்கு என்ன மாதிரியான விபரீதம் அரங்கேறும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments