பிளஸ்டூ தேர்வுக்கு வழிகாட்டு நெறிமுறை அறிவிப்பு..!
தமிழகத்தில் பிளஸ்டூ செய்முறை தேர்வை பாதுகாப்பாக நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 16-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற உள்ளது.இந்த தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், செய்முறை தேர்வு தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்ததற்கு பிறகும் அனைத்து சாதனங்களையும்இடங்களையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், தேர்வுக்கு வரும் மாணவர்களை சமூக இடைவெளி விட்டு அமரச் செய்ய வேண்டும், மாணவர்களுக்கு 4 சதுர மீட்டர் தூரத்துக்குள் தேவையான சாதனங்கள் வைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஹேன்ட் சானிடைசர் தீப்பற்றும் தன்மை கொண்டது என்பதால், எரியக்கூடிய சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும், சானிடைசர் பயன்படுத்திய மாணவர்கள் எரிந்து கொண்டிருக்கும் எந்த சாதனத்தையும் உடனடியாக தொடக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவது, சமூக இடைவெளிகளை பின்பற்றுவதை கடைபிடிக்க வேண்டும்,செய்முறை தேர்வு நடக்கும்போது கதவு, ஜன்னல்களை கண்டிப்பாக திறந்து வைத்திருக்க வேண்டும், உரிய காற்று வசதிகள் இருக்க வேண்டும், அனைத்து மாணவர்கள் ஊழியர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவரும் தேர்வு தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்ததற்கு பிறகும் கண்டிப்பாக கைகளை சுத்தம் செய்ய வேண்டும், ஆய்வுக்கூடத்தில் உள்ள எந்த ஒரு பொருளையும், வினாத்தாளையும் தொடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், மாணவர்கள் காத்திருக்க உரிய ஓய்வு அறைகளை ஏற்பாடு செய்ய வேண்டும்,ஓய்வு அறைகளையும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும், பாதுகாப்பான குடிநீர் தேர்வு மையத்திலும், ஓய்வு அறையிலும் வைத்து இருக்க வேண்டும்.யாருக்காவது கொரோனா பாதிப்பு இருந்தால் மறு தேர்வு நடத்தப்படும். காய்ச்சல், சளி, ஜலதோஷம் இருந்தால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
அவர்களுக்கும் வேறு தேதியில் தேர்வு நடத்தப்படும், நோய் பாதிப்பு மண்டலத்தில் பள்ளிகள் அமைந்து இருந்தால் அந்த மாணவர்களுக்கு வேறு ஒரு பள்ளியில் தேர்வு நடத்தப்படும்.
வேதியியல் செய்முறைத் தேர்வில் பிப்பெட் உபகரணத்தை பயன்படுத்தக்கூடாது, தாவரவியல் மற்றும் உயிரியல் செய்முறைத்தேர்வில் மைக்ரோஸ்கோப் பயன்படுத்த கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments