வேளச்சேரியில் இருச்சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது முழுக்க முழுக்க விதி மீறல்- தலைமைத் தேர்தல் அதிகாரி
சென்னை வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்கூட்டரில் வைத்து எடுத்துச் செல்லப்பட்டது முழுக்க முழுக்க விதிமீறல் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 6 ஆம் தேதி வேளச்சேரியில் 2 விவிபேட் இயந்திரம் மற்றும் ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தை பைக்கில் எடுத்துச் செல்ல முயன்ற தேர்தல் பணி ஊழியர்கள் 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அதில், ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகவும், மற்றவை கையிருப்பாக வைத்திருந்ததாகவும் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்திருந்தார்.
ஆனால், விசாரணையில் பைக்கில் கொண்டு செல்லப்பட்ட விவிபேட் இயந்திரம் 50 நிமிடம் பயன்படுத்தப்பட்டு, அதில் 15 வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறிய சத்ய பிரதா சாஹு, குறிப்பிட்ட வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். அந்த வாக்குப்பதிவு இயந்திரம் வேளச்சேரி தொகுதியில் அக்சயா பள்ளியில் அமைக்கப்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments