லஞ்சமாக வாங்கிய ரசாயனம் தடவிய 5 லட்சத்தை எரித்த தாசில்தார்... ஆத்திரத்தின் உச்சத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!
தெலுங்கானாவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவதை அறிந்து 5 லட்ச ரூபாய் பணத்தை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள எல்பி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட கவுடு. இவர் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். வெங்கட கவுடுவிடம் கடந்த ஜனவரி மாதம் அப்பகுதியில் உள்ள குவாரி அனுமதி வேண்டி ஒருவர் விண்ணப்பித்துள்ளார். அவரிடம் 6 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு அழைக்களித்துள்ளார் வெங்கட கவுடு.
இதுகுறித்து அனுமதி வேண்டி விண்ணப்பித்த அந்த நபர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து புகாரினை பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த நபரிடம் 5 லட்ச ரூபாய் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபரும் தாசில்தார் வீட்டுக்கு கொண்டு சென்று அவரிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு வெளியே காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டுக்குள் நுழைய முயன்றனர்.
வசமாக சிக்கி கொண்டதை அறிந்த தாசில்தார் உடனடியாக சமையலறைக்கு சென்று வாங்கிய பணம் முழுவதையும் உடனடியாக தீவைத்து எரிக்க முயன்றுள்ளார். அதற்குள் அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் சமையலறையில் பாதி எரிந்த நிலையில் இருந்த பணத்தை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வெங்கட கவுடுவை கைது செய்து அழைத்து வரும் பொழுது இதனை அறிந்த பொது மக்களும் அவரை தாக்க முயன்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
Comments