மகாராஷ்டிர அரசு 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வீணடித்து விட்டது: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு
மகாராஷ்டிர மாநில அரசு 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வீணடித்துவிட்டது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி மகாராஷ்டிர அரசிடம் தற்போது 23 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் உள்ளன என்றார். இவற்றை வைத்து அடுத்த 5 முதல் 6 நாள்களுக்குப் பயன்படுத்த முடியும் என்று கூறிய அவர், தடுப்பூசிகளை உரிய முறையில் திட்டமிட்டு பயன்படுத்தாததால் 5 லட்சம் பேருக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகள் வீணாகியுள்ளன என்றார்.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, மகாராஷ்டிரத்துக்குத் தான் அதிக அளவில் கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். ஒரு கொரோனா தடுப்பூசி மருந்து பாட்டிலில் உள்ள மருந்தை 10 பேருக்கு செலுத்த முடியும். ஆனால், அந்த பாட்டிலை ஒருமுறை திறந்துவிட்டால் 4 மணி நேரத்தில் அதனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அதில் உள்ள தடுப்பூசி முற்றிலுமாக வீணாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments