50 சதவீத இருக்கை அனுமதி ஊரடங்கை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் கர்ணன் டீம்..! ரசிகர்களை கண்டா வரச்சொல்லுங்க..!
திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் தனுஷின் கர்ணன் படம் திரைக்கு வந்துள்ளது. கர்ணன் டீமுக்கு காத்திருக்கும் சவால்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
கொரோனா ஊரடங்கு தளர்வடைந்த பின்னரும் சினிமா ரசிகர்களை கண்டா தியேட்டர் பக்கம் வரச்சொல்லுங்க... என்ற நிலையே நீடித்து வருகின்றது.
தமிழ் திரையுலகில் முதன் முதலாக ஓடிடி க்கு சென்ற சூர்யாவை மிரட்டி பணியவைக்கும் முயற்சியாக அவரது குடும்பத்தினர் நடித்து திரைக்கு வரும் படங்களையும் திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்று விருந்துக்கு போன மாப்பிள்ளை போல அடம் பிடித்த திரையரங்கு உரிமையாளர்கள், சத்தமில்லாமல் சமரசம் செய்து கொண்டு கார்த்தியின் சுல்தான் படத்தை வெளியிட்டனர்.
திரையரங்குகளை மறந்த ரசிகர்களால் சுமாரான வரவேற்பை கூட சுல்தான் பெறாத நிலையில், சிலம்பத்தில் ஜெயித்த புல்லட் பாண்டி போல சக்சஸ் மீட் நடத்தியது சுல்தான் டீம்..!
ஏப்ரல் 9 ந்தேதி கர்ணன் விஜயம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 10ந்தேதி முதல் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளருக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டதால் தனுஷ் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாத படத்தின் தயாரிப்பாளர் தாணுவோ, ஏற்கனவே அறிவித்தபடி கர்ணன் திரரையரங்குகளில் வெளியாகும் என்று நம்பிக்கையுடன் டுவீட் அடித்தார்
பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜின் படம் என்பதால் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தப்பட்டது. கர்ணன் படத்தின் முன்பதிவு தொடங்கி முழுமையாக 3 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் சென்னையில் கர்ணன் திரைப்படத்திற்காண முன்பதிவு மந்தமாக உள்ளது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் சென்னையில் உள்ள திரையரங்குகளில் எந்த ஒரு காட்சியுமே முன்பதிவில் ஹவுஸ் புல் ஆகவில்லை என்றால் கொரோனா அச்சம் மக்களை எந்த அளவிற்கு அச்சுறுத்தியுள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
கர்ணன் படத்திற்கு முதல் நாள் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க திரையரங்குகள் தயாராக இருந்தாலும், திரையரங்கிற்கு சென்று படம் பார்க்க ரசிகர்கள் தயாராக இல்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றது.
இருந்தாலும் துணிச்சலுடன் கர்ணனை திரையரங்குகளுக்கு கூட்டி வந்திருக்கிறார் தயாரிப்பாளர் தாணு, அவரது இந்த அசாத்திய துணிச்சலுக்கு பின்னணி யில் பெரும் நம்பிக்கையாக இருப்பது சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் என்று திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.
பட்ஜெட் படமான கர்ணனுக்கு, திரையரங்குகளில் வரும் வசூலைவிட சாட்டிலைட் உரிமம், மற்றும் 2 வாரம் கழித்து ஓடிடிக்கு விற்பதன் மூலம் இரு மடங்கு லாபம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.
இதே போல தான் சுல்தான் படத்தின் சக்ஸஸ் மீட்டுக்கும் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமம் தான் காரணம் என்று சுட்டிக்கட்டுகின்றனர் திரையுலக சிற்பிகள்..!
மொத்தத்தில் கொரோனாவும் அதனால் அமலாகும் ஊரடங்கும், ஒரு காலத்தில் பாப்கார்ன் விற்ற பணத்தில் கொழித்த திரையரங்கு உரிமையாளர்களை கடுமையாக சோதித்து வருகின்றது என்பதே நிதர்சனமான உண்மை..!
Comments