தந்தத்துக்காக யானை வேட்டை.. சிபிஐ விசாரணையில் தகவல்..!
தமிழகத்தில் யானைகள் உயிரிழப்புத் தொடர்பாக சிபிஐ 3 வழக்குகள் பதிந்து விசாரித்ததில், யானைத் தந்தங்கள் கடத்தி விற்பனை செய்த இடைத்தரகரின் டைரியில், தொழிலதிபர்கள் பலருக்குத் தந்தங்களையும் சிலைகளையும் விற்ற தகவல்கள் தெரியவந்துள்ளன.
தமிழகத்தில் யானைகள் உயிரிழப்பு தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்துக் கோவை மாவட்டம் போளுவம்பட்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆகிய பகுதிகளில் யானைகள் உயிரிழந்தது தொடர்பாக 3 வழக்குகளை சிபிஐ பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இதில் ஆண் யானைகளே அதிகம் உயிரிழந்ததும், உடல்கள் கண்டெடுக்கப்படும் முன்பு தந்தங்கள் வெட்டப்பட்டதும் தெரியவந்தது. யானைத் தந்தங்களைக் கடத்தி விற்கும் தரகரான கேரளத்தைச் சேர்ந்த ஈகிள் ராஜன் என்பவரிடம் இருந்து சிபிஐ போலீசார் டைரியைக் கைப்பற்றியுள்ளனர். அதில் 1995ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை சென்னை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தொழிலதிபர்களுக்குத் தந்தங்களையும் தந்தங்களால் செய்த சிலைகளையும் விற்றது தெரியவந்துள்ளது.
சென்னை அடையாறைச் சேர்ந்த தொழிலதிபருக்கு நூறு கிலோ எடைகொண்ட 4 தந்தங்களைக் கொடுத்து அவரின் வீட்டிலேயே கைவினைஞர்கள் தங்கிச் சிலையைச் செய்துகொடுத்ததும் தெரியவந்துள்ளது.
Comments