கோடை காலம் தொடக்கம்; தேனியில் பறவைகளுக்காக மரங்களில் அம்மா உணவகம்!
தேனியில் கோடை காலம் தொடங்கியுள்ளதால், பறவைகளுக்கு மரங்களின் மீது உணவு மற்றும் தண்ணீர் வைத்து பாதுகாக்கும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 40 டிகிரி வரை கொளுத்தும் இந்த கடும் வெயிலில் இருந்து பறவைகளை பாதுகாக்கும் வகையிலும், இளைஞர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணிகளுக்காக இளைஞர்கள் ஒரு குழுவாக இணைந்து தேனி என்.ஆர்.டி. நகர், கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலைய பூங்கா, தொழிற்பேட்டை, கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளிட்ட 50 - க்கும் மேற்பட்ட பறவைகள் அதிகம் கூடும் இடங்களில் உணவு மற்றும் தண்ணீர் வைக்கும் பணியில் அர்ப்பணித்து கொண்டுள்ளனர். மரங்கள் மற்றும் கட்டடங்களின் சுவர்களில் பறவைகளுக்கு தண்ணீர், இரை வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்காக சல்லடை போன்ற மின்விசிறி மூடியில் தண்ணீர் பாட்டிலை கட்டி அதற்குள் தண்ணீர் ஊற்றியும், பிளாஸ்டிக் டப்பாவில் கம்பு, சோளம் போன்ற உணவையும் வைக்கின்றனர். நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீரை மாற்றி விடுகின்றனர். பிளாஸ்டிக் டப்பாவில் உணவையும் நிரப்பி வைத்து விடுகின்றனர். இவற்றை, பறவைகள், அணில்கள் உண்டு பசியாறி வருகின்றன.
கோடையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி பறவைகள் உற்சாகமாக குளியலிட்டும் மகிழ்கின்றன. இந்த பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் கூறுகையில், " பறவைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கல்லூரி மாணவர்கள், பட்டதாரி இளைஞர்கள் இணைந்து இந்த களப்பணியை தொடங்கி உள்ளோம். கடந்த ஆண்டு தேனியில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கோடை காலம் முழுவதும் பறவைகளுக்கு தண்ணீர், இரை வைத்தோம். இந்த ஆண்டும் இந்த பணியை மேற்கொள்கிறோம். இந்த பணி மனநிறைவை கொடுக்கிறது. பிற நகரங்களில் வசிக்கும் இளைஞர்களும் இந்த பணியை மேற்கொண்டால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம் " என்கின்றனர்.
Comments