பொள்ளாச்சி : தமிழகத்தில் சொந்தமாக நிலம் வாங்கி மருத்துவக்கழிவுகளை கொட்டும் கேரளக்காரர்கள்!

0 37253
பிடிபட்ட லாரிகள்

கேரள மாநிலத்திலிருந்து மருத்துவ கழிவுகளை தமிழக பகுதியிலுள்ள விவசாய தோட்டத்துக்குள் கொட்ட வந்த 3 டிப்பர் லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை தமிழக விவசாயிகள் சிறைபிடித்தனர்.

பொள்ளாச்சி அருகே தமிழக கேரள எல்லைப் பகுதியான செமனாம்பதி அருகேயுள்ள இரட்டைமடை தோட்டம் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த சஞ்சய் ஆண்டனி என்பவருக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திலுள்ள தோட்டத்தில் சில வருடங்களாக இரவு நேரங்களில் கேரளாவிலிருந்து லாரிகள் வந்து நிற்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில். நேற்றிரவு 3 லாரிகள் கேரளாவிலிருந்து சஞ்சய் ஆண்டனியின் தோட்டத்துக்கு வந்தன. இதனால், விவசாயிகள் சந்தேகமடைந்து தோட்டத்தை கண்காணித்தனர். சஞ்சய் ஆண்டனியின் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த 3 டிப்பர் லாரிகளில் மருத்துவ கழிவுகள் இருப்பதை கண்டு அதிர்ந்தனர். மருத்துவக்கழிவுகளை குழி தோண்டி புதைக்க ஜேசிபி இயந்திரமும் தோட்டத்துக்குள் இருந்தது. இதையடுத்து, தோட்டத்துக்குள் புகுந்த விவசாயிகள் லாரிகள், ஜே.சிபி. இயந்திரத்தை அதிரடியாக சிறைப்பிடித்தனர்.

விவசாயிகள் அதிரடியால் லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட 10 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். தொடர்ந்து, வருவாய் துறை அதிகாரிகளுக்கும் ஆனைமலை காவல் துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகளும் வருவாய்த்துறை அதிகாரிகளும் தற்போது விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். விசாரணையில் திருச்சூரில் இருந்து மருத்துவக்கழிவுகள் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. கேரளக்காரர்கள் தமிழகத்தில் நிலம் வாங்கி அதில் மருத்துக்கழிவுகளை கொட்டி வந்தது பொள்ளாச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments