மாஸ்க்காவது... தடுப்பூசியாவது... கொரோனாவை கொத்துப் போடும் அம்பானி மகன்!

0 59059
அன்மோல் அம்பானி

நாடு முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா நோய் பரவலின் இரண்டாவது அலை ஒட்டு மொத்த இந்தியாவையும் அலற விட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் மூத்த மகன் அன்மோல் அம்பானியோ, "கொரோனா என்பது இன்றைய புதிய மத வழிபாட்டு முறை" என்றும், ஊரடங்கெல்லாம் தேவையில்லை என்றும் ட்வீட் செய்திருப்பது பரவலான எதிர்ப்புகளையும் ஆதரவையும் பெற்றுள்ளது.

29 வயதாகும் அன்மோல் அம்பானி, ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். பிரபலமான பிசினஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், ஊடக வெளிச்சம் தன் மீது படாத அளவுக்கு ஒதுங்கியே இருக்கக்கூடிய கூச்ச சுபாவம் கொண்டவர். ஆனால், கொரோனா பரவலை முன்வைத்து மகாராஷ்டிரா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.

அதன் காரணமாகவே, தனது வழக்கமான சுபாவத்தை ஒதுக்கி வைத்து விட்டு, கொரோனாவை காரணம் காட்டி பிறக்கப்படும் ஊரடங்குக்கு எதிரான கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"கொரோனா என்பது இன்றைய புதிய மத வழிபாட்டு முறை ஆகிவிட்டது. இது ஒரு சர்வதேச சதி. நடிகர், நடிகைகள் தங்களது நடிப்புத் தொழிலைத் தொடரலாம். கிரிக்கெட் வீரர்கள் இரவில் கூட தங்களது கிரிக்கெட் விளையாட்டை விளையாடலாம்.

image

அரசியல்வாதிகள், பெருவாரியான மக்கள் கூட்டத்தைக் கூட்டி பொதுக்கூட்டங்களை நடத்தலாம். ஆனால், தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில்களைச் செய்வதும், பணியாளர்கள் தங்களது வேலையைச் செய்வது மட்டும் கூடாதா?" என அவர் அதில் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், அரசின் ஊரடங்கு முயற்சியை ஒரு தீய நோக்கமுடைய திட்டம் என்றும் சாடி உள்ள அவர், இந்திய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஒரு ஆய்வில், தொற்றுநோயைச் சமாளிக்க ஊரடங்கை அமல்படுத்துவதை விட, கோவிட் -19 சோதனையை அதிகப்படுத்துவதே அதிகமான நன்மையை ஏற்படுத்தும் என்றும், பொருளாதார ரீதியாகவும் இது மிகவும் சாத்தியமானது என்றும் கூறியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

image

அத்துடன் முகக்கவசம் அணிவது மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவற்றுக்கு எதிராக உலக அளவில் முக்கியமான பிரபலங்கள் சிலர் பதிவிட்ட ட்விட்டர் பதிவுகளையும் அவர் ரீ ட்விட் செய்துள்ளார்.

அன்மோல் அம்பானியின் இந்த கருத்து பொறுப்பில்லாதது என ட்விட்டரில் பலர் கண்டனம் தெரிவித்தாலும், கணிசமானோர் அவரது கருத்தை வரவேற்றும் பதிவிட்டுள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments