கொரோனா தடுப்பூசி போடும் முன்னர் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க... கவனிக்கப்பட வேண்டிய 4 விஷயங்கள்!

0 55573

கொரோனா பரவல் நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் மிகவும் அக்கறை காண்பிக்கத் தொடங்கி உள்ளனர். தற்போது 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்னர் செய்ய வேண்டியது என்ன, போட்டுக்கொண்ட பின்னர் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து மருத்துவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்னர் செய்ய வேண்டியது என்ன?

கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்னர் கொரோனா பாதித்திருந்தாலோ அல்லது ரத்த பிளாஸ்மா சிகிச்சை எடுத்திருந்தாலோ, அத்தகையவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளக்கூடாது. அதேபோன்று எந்த ஒரு குறிப்பிட்ட மருந்துக்கும் ஒவ்வாமை  உள்ளவர்கள், கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்னர் மருத்துவரிடம் முன் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இதுவரை எந்த ஒரு கோவிட் தடுப்பூசி மருத்துவ பரிசோதனையிலும் பங்கேற்காததால், அவர்களும் கோவிட் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளக் கூடாது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்னர் தேவையான அளவு உணவு உட்கொண்டுவிட்டு, நிதானமாக செல்வது நல்லது.

image

கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் செய்ய வேண்டியது என்ன?

கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர், பயனாளி தடுப்பூசி மையத்திலேயே சுமார் 30 நிமிடங்களுக்கு தங்க வைக்கப்பட்டு, ஏதாவது பக்க விளைவு ஏற்படுகிறதா என மருத்துவரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்.

ஒருவேளை தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு காய்ச்சலோ, ஊசி போட்ட இடத்தில் வலி மற்றும் சோர்வு போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படலாம், அதனால் பீதி அடைய  தேவை இல்லை. இந்த பக்க விளைவுகள் சில நாட்களுக்குள் மறைந்து விடும்.

ஒருவேளை தொடர்ந்து அசெளகரியமாக உணர்ந்தால், பயனாளி அருகிலுள்ள சுகாதார மையத்துக்குச் சென்று மருத்துவரிடம் காண்பிக்கலாம். அல்லது தடுப்பூசி போட்ட பின்னர் அனுப்பப்படும் Co-WIN எஸ்எம்எஸ்-ல் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணைத் தொடர்புகொண்டு, சுகாதார பணியாளரை அழைக்கலாம்.

இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர், உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாக இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை ஆகலாம். எனவே, அதுவரை தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட முன் தடுப்பு நடவடிக்கைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

image

தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் மது அருந்தலாமா?

பொதுவாக மது அருந்துதல் உடல் நலத்துக்கு தீங்கானதுதான் என்றாலும், சிலருக்கு அந்த பழக்கத்தை கைவிட முடியாது. இந்த நிலையில், கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர், மது அருந்துவதால் பிரச்சனை ஏதும் இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மது அருந்துவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாவது எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என சர்வதேச நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

கோவிட் தடுப்பூசி சான்றிதழை எவ்வாறு பெறுவது?

முதல் கட்ட தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பின்னர் தற்காலிக தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். சான்றிதழில் பெயர், பிறந்த தேதி, பயனாளியின் அடையாள அட்டை, புகைப்படம், தடுப்பூசியின் பெயர், மருத்துவமனையின் பெயர், தேதி மற்றும் பிற விவரங்கள் இருக்கும். தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை cowin.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது ஆரோக்யா சேது செயலியிலிருந்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 இரண்டாவது கட்ட தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பின்னர், தடுப்பூசியை நிறைவு செய்வதற்கான எஸ்எம்எஸ் தகவல் அனுப்பப்படும். அதில் சான்றிதழை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு இடம்பெற்றிருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments