3 அடுக்கு பாதுகாப்பில் வாக்குப்பதிவு எந்திரங்கள்

0 2513

தமிழகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழக சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்கள், அந்தந்த மாவட்டங்களின், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் 16 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி மற்றும் மெரினா கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரி ஆகிய 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

அங்கு மூன்று வேலை நேரங்களாக சுழற்சி அடிப்படையில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று மையங்களிலும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் அனைத்து கட்சிகளின் நம்பக தன்மைக்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை சிசிடிவி வேலை செய்கிறதா என தேர்தல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அறையின் முன்பாக மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரும், நுழைவு வாயிலில் சட்டம் ஒழுங்கு காவல் துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு கட்சியில் 3 முகவர் வீதம் அனைத்து கட்சியினருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் அவர்கள் பணியில் ஈடுபடுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.மாவட்ட தேர்தல் அதிகாரி முன்னிலையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையானது சீல் வைக்கபட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments