புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்... மிகுந்த விறுவிறுப்பு.!
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு, மிகுந்த விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இரவு 7 மணி நிலவரப்படி, 81 புள்ளி 24 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. 635 இடங்களில் 1,558 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குபதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதல் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
புதுச்சேரியில் 23 தொகுதிகளுக்கும், காரைக்கால் பகுதியில் 5 தொகுதிகளுக்கும், கேரளாவில் உள்ள மாஹே தொகுதிக்கும், ஆந்திராவில் உள்ள ஏனாம் தொகுதிக்கும் வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் அதிகளவில் வாக்குகள் பதிவாகின. அனுமதிக்கப்பட்ட நேரமான மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 510 பேர் வாக்களித்தனர்.
முன்னதாக, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட புதுச்சேரி தலைவர்கள் ஜனநாயக கடமையாற்றினர். வாக்கு எந்திரங்கள், யாருக்கும் வாக்களித்தோம் என அறிய உதவும் விவிபேட் இயந்திரங்கள் உள்ளிட்டவை சீல் வைக்கப்பட்டு, லாஸ்பேட்டை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. மே 2 ஆம் தேதி அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Comments