தமிழ்நாடு தேர்தல் திருவிழா... விறுவிறுப்பான வாக்குப்பதிவு
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, அறிவிக்கப்பட்ட நேரத்திற்குள், விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடைபெற்று முடிந்தது.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக இன்று செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதோடு சேர்ந்து, கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும், இடைத்தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 3998 வேட்பாளர்கள் களம் கண்டனர். தேர்தல் ஆணையம் அறிவித்தவாறு, காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 7 மணி வரை நடைபெற்று முடிந்தது.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதால், பெருந்தொற்று தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைகளுடன், மிகுந்த பாதுகாப்பு, மற்றும் முன்னெச்செரிக்கை உணர்வுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத வகையிலும், வெயிலின் தாக்கம் காரணமாகவும், வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்திருந்த வாக்காளர்கள், ஜனநாயக கடமையாற்றினர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது.
இம்முறை, முதல் தலைமுறை வாக்காளர்களும், இளம் தலைமுறை வாக்காளர்களும், அதிகளவில் வந்திருந்து, முகக்கவசம் அணிந்து காத்திருந்து, மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்துச் சென்றனர். இளையோர் மட்டுமின்றி, நடுத்தர வயதினரும், பெரியவர்களும் பேரார்வத்துடன் வந்திருந்து, வாக்கு செலுத்தினர்.
மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், ஏற்கனவே வாக்களிக்க வந்து, இயல்பை விட கூடுதலான உடல் வெப்பத்தால் தடுக்கப்பட்டவர்களும், முழு உடல் கவச உடை அணிந்து வாக்கு செலுத்தினர். கொரோனா நோயாளிகள் சொற்ப அளவிலேயே பதிவு செய்திருந்ததால், எஞ்சிய வாக்காளர்களும், இரவு 7 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
234 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தமாக 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 88,937 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. இறுதி வேட்பாளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 பேர் ஆகும். 1,29,165 வாக்களிக்கும் எந்திரங்களும், 91,180 கட்டுப்பாட்டு எந்திரங்களும் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டன.
தமிழ்நாடு முழுவதும், வாக்குப்பதிவு மையங்களில், மத்திய துணை இராணுவப்படையினர் உட்பட ஒரு லட்சத்து 58 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும், விவிபேட் இயந்திரங்களும், வாக்குப்பதிவு மையங்களுக்கு ஒன்று என்ற அளவில் பயன்படுத்தப்பட்டன. இதன்மூலம், முழு பாதுகாப்புடன் 12 மணி நேரம், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
Comments