வலி ‘மை ‘அஜீத்..! எளி ‘மை’ விஜய்..! செல்பி புள்ளைங்க மகிழ்ச்சி

0 16386

நடிகர் அஜீத் வாக்களிக்க வந்த போது ரசிகர்கள் ஆர்வகோளாறில் முண்டியடித்து வலிமையை நிரூபித்த நிலையில், நீண்ட நேரம் காத்திருந்த தனது ரசிகர்களை மகிழ்விக்க எளிமையாக சைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் விஜய். 

ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் ஜனநாயக கடைமை ஆற்றுவதில் நடிகர் அஜீத்தின் வழி தனி வழி தான். வரிசையில் காத்திருந்து வாக்களிப்பதை கொள்கையாக வைத்திருந்த அஜீத்துக்கு ரசிகர்களின் அன்புத் தொல்லையால் விரைவாக வாக்களித்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகின்றது.

இந்த தேர்தலில் வாக்களிக்க திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் இருந்து மனைவி ஷாலினியுடன் காரில் புறப்பட்ட அஜீத், வாக்கு பதிவு துவங்குவதற்கு 20 நிமிடம் முன்பாகவே வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். வழக்கம் போல வரிசையில் நின்ற அஜீத்துடன் செல்பி எடுக்க முண்டியடித்த ரசிகர்களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குசாவடி கேட்டை இழுத்து பூட்டிய போலீசார் ரசிகர்களை வெளியேற்றி அஜீத் மற்றும் ஷாலினியை விரைவாக வாக்களித்து செல்ல உள்ளே அழைத்துச்சென்றனர்.

அதுவரை பொறுமை காத்த அஜீத்தை ஒரு ரசிகர் செல்பி எடுப்பது போல தொடர்ந்து உரசிக் கொண்டு முண்டியடித்ததால், பொறுமையிழந்த அஜீத், அவரது செல்போனை பறித்து வைத்துக் கொண்டு பின்னர் எச்சரித்து கொடுத்து அனுப்பினார்.

தொடந்து முதல் ஆளாக வாக்களித்து விட்டு வெளியே வந்த அஜீத்தையும் ஷாலினியையும் பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைப்பதற்குள் போலீசார் படாத பாடுபட்டனர். ரசிகர்களும் செல்பி எடுப்பதாக கூறி இருவரையும் விரட்டி விரட்டி தொல்லை செய்தனர்.

அதே நேரத்தில் நீலாங்காரையில் உள்ள வீட்டில் இருந்து வாக்களிக்க தனது காரில் புறப்பட இருந்த விஜய், பிறகு வீட்டிற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் நள்ளிரவு முதலே காத்திருக்கும் தகவல் அறிந்து அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு சைக்கிளில் செல்ல முடிவெடுத்தார். அவரது வீட்டில் இருந்து ரசிகர்கள் புடை சூழ வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் புறப்பட்டார்.

தங்கள் தளபதியை நெருக்கத்தில் பார்த்த உற்சாகத்தில் அவரது ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்தனர். இரு சக்கரவாகனத்தில் உடன் வந்த ரசிகர்களுக்கு ஈடு கொடுத்து விஜய் வேகமாக சைக்கிள் ஓட்டினார்..!

தொடர்ந்து வாக்கு சாவடிக்குள் சென்று விரைவாக வாக்கு செலுத்தி விட்டு வெளியே வந்த விஜய்யை காண பெரும் ரசிகர் பட்டாளம் திரண்டு இருந்தது. மீண்டும் சைக்கிளில் சென்றால் ரசிகர்கள் முண்டியடிப்பார்கள் என்று அவரது கார் தயாராக நின்றாலும் அவர், ரசிகர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தில் ஏறி மிதமான வேகத்தில் தனது வீட்டுக்கு திரும்பினார்.

அப்போதும் ஆர்வக்கோளாறில் சில ரசிகர்கள் செல்பி எடுக்க அவரது சட்டையையும் தோள்பட்டையையும் பிடித்து இழுத்த போதும், சிலர் முத்தம் கொடுக்க முயன்ற போதும் அமைதி காத்த விஜய் வாகனம் ஓட்டிய ரசிகரின் தோளில் கைவைத்தபடி வீடு வந்து சேர்ந்தார். முன்னதாக வாக்கு சாவடிக்கி வெளியே முண்டியடித்த ரசிகர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டினர்.

அஜீத் ரசிகர்கள் செல்பியால் வலிமை காட்டிய நிலையில், விஜய் எளிமையாக சைக்கிளில் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தததால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments