வாக்களிக்க மறவாதீர்..! காலை 7 மணிக்குத் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு..!
தமிழக சட்டப்பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை இடைவிடாமல் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து இன்று பொதுத்தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தமிழகத்தில் 6 கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். இதில் 3 கோடியே 09 லட்சம் ஆண்களும், 3 கோடியே 19 லட்சம் பெண்களும், 7 ஆயிரத்து 200 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் வாக்களிக்க எல்லாம் ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
234 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.தேர்தல் நடைபெறுவதையொட்டி, தமிழகத்தில் மொத்தமுள்ள 88,937 வாக்குப்பதிவு மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை எடுத்து செல்லப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் பாதுகாப்பாக வந்து வாக்களிக்க சவுக்கு கட்டைகள், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஒரு லட்சத்து 58 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படை வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் வாக்குச்சாவடி மையங்களில் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்காளர்கள் மாஸ்க் அணிந்துதான் வாக்குச்சாவடி மையங்களுக்கு ஓட்டு போட வர வேண்டும். வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்களுக்கு வெப்பநிலை சோதனை, சானிடைசர் உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும். வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி மையத்தில் ஒரு கையுறை வழங்கப்படும். வாக்குச்சாவடிக்கு செல்லும் போது செல்போன் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
11 வகையான ஆவணங்களில் ஒன்றையும், மறக்காமல் பதிவேட்டில் கையெழுத்திடுவதற்கு பேனாவையும் வாக்காளர்கள் எடுத்துச் செல்ல வேண்டும். ஒரே பேனாவை ஒன்றுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
கொரோனா நோயாளிகள் மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கலாம். அவர்கள் பிபிஇ கிட் உடை அணிந்து வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Comments