பழிகளாலும் சூழ்ச்சிகளாலும் மறைக்கப்பட்ட வெண்தாடி விஞ்ஞானி... யார் இந்த 'ராக்கெட்ரி' நம்பி நாராயணன்!
உலகம் போற்றிய ஆராய்ச்சியாளராகவும், குற்றம் சுமத்தப்பட்ட கைதியாகவும் இருந்த நம்பி நாராயணன் 1941ஆம் ஆண்டு திருவிதாங்கூரில் பிறந்தார்
இவர் தனது பள்ளி பருவத்தை திருநெல்வேலி அருகே உள்ள வள்ளியூரிலும், பொறியியல் படிப்பை மதுரை தியாகராஜர் கல்லூரியிலும் முடித்தார்.
அவரின் பொறியியல் அறிவு வியக்கும் வகையில் வளர்ச்சிப்பெற்றது. அதன் விளைவாக அமெரிக்காவின், நியூ ஜெர்ஸி பகுதியிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மேற் படிப்பு படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
தன் திறமையின் பொருட்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசவில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தும், அங்கிருந்து அறிவை மட்டும் பெற்றுக்கொண்டு 1966ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார்.
அது இஸ்ரோவின் குழந்தைப் பருவம், அப்துல் கலாம் உட்பட வெறும் 25 பொறியாளர்கள் மட்டும் பணியாற்றிய காலம், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் வளர்ச்சியை உறுதிசெய்யும் பொருட்டு இரவு, பகலாய் நம்பி உட்பட அனைவரும் உழைக்கவேண்டியிருந்தது.
1992-ம் ஆண்டு கிரயோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பம் பெறுவது தொடர்பாக இந்தியாவும், ரஷ்யாவும் கையொப்பமிட்டன. அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் இந்தியாவுக்கு கிரயோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தை தரக்கூடாது என்று ரஷ்யாவுக்கு நிர்பந்தித்தன. நெருக்கடி காரணமாக ரஷ்யா ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
புதிய ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. அதன்படி, கிரயோஜெனிக் இன்ஜின்களின் 4 மாதிரிகள் மட்டுமே இந்தியாவுக்கு தந்தது. தொழில்நுட்பம் தரப்படவில்லை.
கிரயோஜெனிக் இன்ஜினுக்கான திரவ எரிபொருள் கண்டுபிடிப்பதுதான் சவால் நிறைந்தது. இந்தப் பணிக்குத்தான் விஞ்ஞானி நம்பி நாராயணன் பொறுப்பேற்று இருந்தார்.
இதே தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுக்கு வழங்கினார் என்பதுதான் நம்பி நாராயணன் மீது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு. இதனையடுத்து 50 நாட்கள் சிறைவாசத்தில் பல சித்ரவதைகளையும், துன்புறுத்தல்களையும் அனுபவித்த நம்பி நாராயணன் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். பொய் வழக்கிற்காக அவருக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டது.
ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கு குறித்து 'Orbit of memories' என்கிற தன் சுயசரிதைப் புத்தகத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் எழுதியுள்ளார்.
மேலும் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முன்னேற்றம் காண்பதற்குத் தடை ஏற்படுத்த முனைப்புக் காட்டியது அமெரிக்கா .
இதனால், அமெரிக்கா சி.ஐ.ஏ-வை ஏவிவிட்டது. அடுத்தவர்களை அழிப்பதில் வல்லமை படைத்த சி.ஐ.ஏ தனக்கு மசிந்த இந்திய போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளை ஜோடித்து என்னைக் கைது செய்ய வைத்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு, மத்திய அரசு, நம்பி நாராயணனுக்கு பத்மபூசன் விருது வழங்கி கவுரவித்தது.
இந்த நிலையில் , இந்திய விஞ்ஞானியான நம்பி நாராயணின் வாழ்க்கை மையப்படுத்தி 'ராக்கெட்ரி' என்ற படத்தை இயக்கி தயாரித்து, அதில்
நம்பி நாராயணனாகவே தோன்றியுள்ளார் நடிகர் மாதவன்.
இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானியான நம்பி நாராயணனை அழிக்க அவருக்கு தேச துரோகி என பட்டம் கட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ள நாவல் ஒன்றை தழுவி இந்த படத்தை இயக்கியுள்ளார் மாதவன்.
இந்நிலையில் அண்மையில் வெளியான 'ராக்கெட்ரி' டிரெய்லர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்தில் பிரதமர் மோடியை, விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் இணைந்து தான் சந்தித்தாக தனது வலைத்தள பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகர் மாதவன். இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, விஞ்ஞானி நம்பி நாராயணன் குறித்த இந்த ராக்கெட்ரி திரைப்படம்.
பழிகளும் சூழ்ச்சிகளும் சூழ்ந்து தாக்கினாலும், உண்மை கேடயமாய் காத்து வெற்றித் தரும் என்பதற்கு சாட்சியாய் நிற்கிறார் இந்த வெண்தாடி விஞ்ஞானி.
Comments