வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவி பேட் எந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரம்

0 2679

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு கருவிகள், அடையாள மை உள்ளிட்டவற்றை, 234 தொகுதிகளிலும் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப் பதிவிற்காக 1 லட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அவற்றிற்கான  1,14,205 கட்டுப்பாடு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு வழங்கும் 1,20,807 விவிபேட் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குசாவடிகள் உள்ள நிலையில், 607 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் 7 ஆயிரத்து 98 வாக்குப்பதிவு எந்திரங்களும், 7 ஆயிரத்து 454 விவிபேட் எந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

சென்னையில், கொளத்தூரில் அதிகமான வாக்குப்பதிவு எந்திரங்களும், தியாகராயநகர் தொகுதியில் குறைவான வாக்குப்பதிவு எந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டிருந்த இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்போடு அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் உரிய வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

சாலை வசதி இல்லாத மலைக் கிராமங்களுக்கு செல்லும் வாக்கு எந்திரங்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள போதமலை மலைக்கிராம பகுதியில் மேலூர், கீழூர், கெடமலை என 3 குக்கிராமங்கள் உள்ளன. அங்கு சுமார் ஆயிரத்து 224 வாக்காளர்களும், 2 வாக்குச் சாவடிகளும் உள்ளன. இந்த மலைக் கிராமங்களுக்கு கரடுமுரடான பாதை மட்டுமே உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாது.

எனவே, வாக்குப்திவு எந்திரங்கள் உள்ளிட்ட வாக்குச் சாவடிக்கு தேவையான அனைத்தையும் சுமந்து கொண்டு, தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போதமலைக்கு நடந்தே சென்றனர். சாலை வசதி இல்லாததால், 50 ஆண்டுக்கும் மேலாகவே இந்தநிலை தொடர்கிறது.

மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகள், 3856 வாக்குச்சாவடிகள் 

மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில், 3 ஆயிரத்து 856 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், ஒப்புகைச் சீட்டு வழங்கும் விவிபேட் கருவிகள், வெப்பநிலை கண்டறியும் தெர்மல் ஸ்கேனர், கையுறை உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளன. மதுரை மாநகராட்சி பில்லர் ஹாலிருந்து இருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பும் பணிகள் நடைபெற்றன.

வாக்குப்பதிவு மைய அலுவலர்களுக்கு இறுதி கட்ட பயிற்சிகள்

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு இறுதி கட்ட பயிற்சிகளும் நடைபெற்றன. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் முறை, வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கும் முறை என்பன உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பொதி சுமக்கும் குதிரைகள் மூலம் கொண்டுசெல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்

கொடைக்கானல் அருகே, சாலை வசதி இல்லாத வெள்ளக்கெவி கிராமத்திற்கு பொதி சுமக்கும் குதிரைகள் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள்  கொண்டுசெல்லப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானல் மலைப் பகுதியில் வெள்ளக்கெவி கிராமம் உள்ளது. வனப் பகுதியின் நடுவே அமைந்துள்ள இந்த கிராமத்தில் 290 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், பழனியில் இருந்து  வாக்கு பதிவு எந்திரங்கள் வாகனங்கள் மூலம் வட்டக்கானல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வெள்ளக்கெவி கிராமத்திற்கு, பொதி சுமக்கும் குதிரைகள் மூலம் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. 8 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 3 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன்  வாக்குப்பதிவு எந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் கொண்டுசெல்லப்பட்டன.

வாக்குச் சாவடிகளில்  பணிபுரிய உள்ளவர்களுக்கு தேர்தல் பணி ஆணைகள்

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்கு சாவடிகளில்  பணிபுரிய உள்ள தேர்தல் அலுவலர்கள், வாக்கு சாவடி அதிகாரி , வாக்கு சாவடி உதவியாளர் என அனைவருக்கும் தேர்தல் பணி ஆணைகள் வழங்கப்பட்டன. சென்னையில், தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 355 வாக்கு சாவடிகளுக்கு,  1732 பணி ஆணைகள் வழங்கப்பட்டன. சட்டமன்றத் தொகுதி தலைமை தேர்தல் அதிகாரி, உதவி அதிகாரி முன்னிலையில் இந்த பணி ஆணைகள் வழங்கபப்பட்டன. இதேபோல, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும், தேர்தல் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

குதிரைகள் மூலமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் குரங்கணி அருகே சாலைவசதி இல்லாத மலைக் கிராமத்திற்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் குதிரைகள் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டன. குரங்கணியை அடுத்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில், சாலைவசதி இல்லாத மலைக் கிராமமான சென்ரல் அமைந்துள்ளது. குதிரைகளில் வாக்குப்பதிவு எந்திரங்களை ஏற்றிக்கொண்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்குசாவடி அலுவலர்கள் உள்ளிட்ட குழுவினர்,  நடந்தே வாக்குபதிவு மையத்திற்கு சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments