சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு..! 15க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சத்தீஸ்கரில் பிஜப்பூர் - சுக்மா மாவட்ட எல்லையில் பாதுகாப்புப் படையினர், நக்ஸலைட்டுகளைத் தேடி வந்தனர். அப்போது வனப்பகுதிக்குள் மறைந்திருந்த 400க்கும் மேற்பட்ட நக்ஸல்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு பிரிவினருக்கும் இடையே பல மணி நேரத்துக்கு மேல் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது.
இதில் நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் வைத்து நக்ஸலைட்டுகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. மோதல் நிகழ்ந்த பகுதிகளில் இருந்து பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 31 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சண்டையின்போது உணவு தண்ணீர் அடங்கிய பைகளைப் பாதுகாப்புப் படையினர் விட்டுவிட்டுக் காயமடைந்தோரைத் தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. காட்டுப் பகுதியில் அதிக வெப்பம் நிலவிய நிலையில் தண்ணீர் கிடைக்காதால் காயமடைந்த வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
சண்டைக்குப் பின் வீரர்களிடம் இருந்த இருபதுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளை மாவோயிஸ்ட்கள் பறித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் உள்துறை செயலாளர் அஜய் பல்லா, உளவுத்துறை இயக்குநர் அரவிந்த் குமார் மற்றும் மத்திய ரிசர்வ் படையின் உயரதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மாவோயிஸ்ட்டுகளை எதிர்த்துப் போராடிய பாதுகாப்புப் படையினர் இறந்தது ஆழ்ந்த வேதனையைத் தருவதாகக் குறிப்பிட்டுள்ளார். வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாவோயிஸ்ட்டுகளுடன் சண்டையிட்ட வீரர்களின் குடும்பத்தாருடன் வேதனையைப் பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். துணிச்சல்மிக்க தியாகிகளின் தியாகம் ஒருபோதும் வீணாகாது என்று குறிப்பிட்டுள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் பதிவிட்டுள்ளார்.
துணிச்சலான வீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குவதாகக் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். வீரர்களின் மரணத்திற்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments