கார்ல ஏறுங்க ஓட்டு போட போலாம்.... ஃப்ரீ ஆஃபர் தர முன்வந்த ஊபர்!

0 3434

80வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தங்களது இல்லத்திலிருந்து வாக்களிக்கும் வாக்குச்சாவடிக்குச் சென்று மீண்டும் வீடு திரும்புவதற்கு இலவச சவாரி சேவையைத் தர ஊபர் நிறுவனம், இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளது

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைப்பெறவிருக்கிறது. இதனையடுத்து தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 7 மணியோடு ஓய்ந்தது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்படுகின்றன. அன்றே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.

இந்தத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்குப் பதிவு செய்யலாம் என முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும், தபால் வாக்கு செலுத்தாமல் நேரடியாக வாக்குச்சாவடிக்குச் செல்ல விரும்பும் வாக்காளர்கள் தங்கள் இல்லத்திலிருந்து வாக்குச்சாவடிக்குச் சென்றுவர ஊபர் நிறுவனம் இலவச சேவை வழங்குவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

“தங்களது ஜனநாயக உரிமையை மக்கள் நிறைவேற்றுவதற்கும் ஜனநாயகக் கடமையைச் செயல்படுவத்துவதற்கும் ஏதுவாக 80வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தங்களது இல்லத்திலிருந்து வாக்களிக்கும் வாக்குச்சாவடிக்குச் சென்று மீண்டும் வீடு திரும்புவதற்கு இலவச சவாரி சேவையைத் தர ஊபர் நிறுவனம், இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளது.

எனவே, வருகின்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் 2021-ல் மேற்படி இலவச சவாரி சேவையை சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் ஊபர் நிறுவனம் வழங்க உள்ளது.

மேற்கண்ட வாக்காளர்களுக்கு அவர்களது வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்குச் சென்று திரும்பும் வகையில், இலவச சவாரியானது, குறைந்தபட்சம் 5 கி.மீ. தூரத்திற்குட்பட்டு பயணக் கட்டண அளவில் ரூ.200 வரை 100 சதவீதக் கட்டணத் தள்ளுபடியுடன் அளிக்கப்படும்.

சவாரி செய்வோர் கைப்பேசியின் மூலம் "ஊபர்" செயலி (Uber App) வழியாக இலவச சவாரிக்கு முன்பதிவு செய்ய வேண்டும். எனவே, 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விருப்பத்தின்பேரில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments