தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பரப்புரை ஓய்வு.! தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு.!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் இரவு 7 மணியோடு நிறைவு பெற்றுள்ளது. வாக்குப்பதிவுக்கு 36 மணி நேரமே உள்ளதால், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே, தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன.
7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த நிலையில், 3998 பேரது மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டு, தேர்தலில் களம் கண்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம், இந்தாண்டு தொடக்கம் முதலே தீவிரமான நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, கூட்டணிகள் இறுதியாகி, தொகுதி பங்கீடு நிறைவடைந்தபோது, உச்சக்கட்டத்தை அடைந்தது.
தமிழ்நாட்டில் களைகட்டி காணப்பட்ட தேர்தல் பிரச்சாரம், இரவு 7 மணியோடு ஓய்ந்தது.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் தீவிர பரப்புரையை முன்னெடுத்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துவிட்டதால், மாநிலம் முழுவதையும், தனது முழுக்கட்டுப்பாட்டிற்குள் தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ளது.
பிரச்சாரம் முடிவடைந்திருப்பதால், தொகுதியை சாராத, வெளியூர்களைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், தலைவர்கள் உடனடியாக வெளியேறுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, லாட்ஜூகள், ஹோட்டல்கள், இன்னும்பிற தங்கும் விடுதிகளை கண்காணித்து, வெளியூர் ஆட்களை வெளியேற்றும் பணியில் காவல்துறையினருடன் இணைந்து தேர்தல் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பிரச்சாரம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், பொதுமக்களை வீடு, வீடாகச் சென்று சந்திக்க கூடாது என்றும், சிறியளவில் கூட கூட்டங்களை கூட்டக் கூடாது என்றும், வேட்பாளர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பணப்பட்டுவாடாவைத் தடுக்கவும், அவற்றை கண்காணிக்கவும், பறக்கும்படையினரோடு, நிலையான கண்காணிப்புக் குழுவையும் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.
மின்விநியோகத்தில் திடீர் தடையை ஏற்படுத்தி பணப்பட்டுவாடா நடப்பதாக, அண்மையில் அரசியல் கட்சிகள் புகார் கூறிய நிலையில், அந்த விவகாரத்தையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. டிரோன்கள் மூலமும் கண்காணிக்க திட்டமிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முக்கியச் சாலைகளில், ஆங்காங்கே, சோதனைச் சாவடிகளை அமைத்து, வாகனத் தணிக்கையை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் காவல்துறையினர் 24 மணி நேரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Comments