சில மணி நேரத்தில் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்..! வேட்பாளர்கள் அனல் பறக்க வாக்குசேகரிப்பு

0 3116
இன்று மாலை 7 மணியுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்..! வேட்பாளர்கள் அனல் பறக்க வாக்குசேகரிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரச்சாரம் இன்று மாலை 7 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும், வேட்பாளர்களும் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி திமுக வேட்பாளர் உதயநிதியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் வீதியாக நடந்து சென்று வாக்குசேகரிப்பு

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன், அதிகாலை முதல் வீதி வீதியாக நடந்து சென்று வாக்குசேகரித்தார். கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து நடைபயணமாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தொடங்கிய அவர், வாகனம் மற்றும் பேருந்தில் பயணத்த மக்களிடம் வாக்குசேகரித்தார். தொடர்ந்து ஜக்கரியா காலனிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற டாக்டர் எழிலன், வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கி உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குசேகரித்தார்.

அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீடுவீடாக சென்று தீவிர பிரச்சாரம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தனது சொந்த ஊரான குள்ளம்பாளையத்தில் ஒவ்வொரு வீதியாக நடந்து சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்த அவருடன், அக்கட்சியின் ஆதரவாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கோவை தெற்கு தொகுதியில் கமலுக்கு ஆதரவாக நடிகை அக்சரா ஹாசன் மற்றும் சுஹாசினி வீதியில் நடனமாடி வாக்குசேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சார்பில் போட்டியிடும், அக்கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக அவரது மகள் அக்சரா ஹாசன் நடனமாடி வாக்குசேகரித்தார். அம்மன் குளம், காந்திபுரம் ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கமல்ஹாசனின் அண்ணன் மகள் சுகாசினி மற்றும் கமலின் மகள் அக்சரா பிரச்சாரம் செய்தனர். அப்போது பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க நடனமாடி வாக்குசேகரித்தனர்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம்

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சைதை துரைசாமியை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார். ஆலந்தூர் சாலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுமென பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆதரவாளர்களுடன் இறுதிகட்ட பிரச்சாரம்

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைத்து தரப்படும், திமுக ஆட்சி அமைத்தவுடன் நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும், சின்னகாங்கியனூர் கிராமத்தில் பால் உற்பத்தி அதிகமாக இருப்பதால் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் வாக்குறுதி கொடுத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

திருவாரூர் தொகுதியில் வீடு வீடாக சென்று திண்ணையில் அமர்ந்து பெண்கள் முதியவர்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். தொகுதிக்குப்பட்ட முருகம்பாளையம், மேட்டுப்பாளையம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று திண்ணையில் அமர்ந்து பெண்கள் முதியவர்களிடம் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டு, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். பின்னர் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடமும் சென்று வாக்கு சேகரித்தார்.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயத்தில் வாக்கு சேகரித்த ராசிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சரோஜா

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சரோஜா. தேவாலயத்திற்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஈஸ்டர் பண்டிகையையொட்டி தூய லூர்து அன்னை ஆலயத்திற்கு சென்ற அவர், ஆலயத்திலிருந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனக்கு ஆதரவு திரட்டினார். மேலும் அதிமுக தேர்தல் அறிக்கையின் துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் அவர் வாக்கு சேகரித்தார்.

ஆயிரம் விளக்கு பாஜக வேட்பாளர் குஷ்பூ திறந்த வெளி வாகனத்தில் வீதி வீதியாக சென்று இறுதிக்கட்ட பிரச்சாரம்

சென்னை ஆயிரம் விளக்கு பாஜக வேட்பாளர் குஷ்பு திறந்த வெளி வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்குசேகரித்தார். வள்ளுவர் கோட்டத்திலிருந்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தொடங்கிய அவர், கோடம்பாக்கம் , சூளைமேடு , தி நகர் , தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அரவக்குறிச்சி தொகுதி பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலை தொகுதிக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரச்சாரம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரை ஆதரித்து நடன இயக்குநர் கலாவும் வாக்கு சேகரித்தார். அப்போது, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அண்ணாமலை, காவல்துறையில் பணியாற்றியது போலவே எம்.எல்.ஏ.பணியும் மேற்கொள்வேன் என உறுதியளித்து, தமிழகத்தில் மே 2-ஆம் தேதி தாமரை மலரும் என சூளுரைத்தார். 

தஞ்சை அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று பிரச்சாரம்

தஞ்சை தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி, ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வாக்கு திரட்டினார். கரந்தையிலிருந்து- தஞ்சை அண்ணா சிலை வரை பேரணியாக சென்ற அவர், அதிமுக அரசின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருதிருத்துறைப்பூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு தேர்தல் நிதியாக உண்டியலில் சேமித்த பணத்தை வேட்பாளரிடம் வழங்கிய சிறுமி

திருவாரூர் மாவட்டம், திருதிருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிடும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, சிங்களாந்தி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் தேர்தல் நிதியாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த ஆயிரத்து 7 ரூபாய் பணத்தை வழங்கினார். அவருக்கு வேட்பாளர் மாரிமுத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அங்கிருந்து தொகுதிக்குப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆதரவு திரட்டிய வேட்பாளரிடம், சிலர் தங்களால் முடிந்த பணத்தை தேர்தல் நிதியாக வழங்கினர்.

இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்த ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ஜெயக்குமார், இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்தார். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார், அங்குள்ள பூங்காவில் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். பேட்டிங் செய்த அமைச்சர் ஜெயக்குமார்  இளைஞர்களை உற்சாகப்படுத்தி வாக்கு சேகரித்தார்.

கோபிசெட்டிபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் மணிமாறன் திறந்தவெளி வாகனத்தில் வீதி வீதியாக சென்று இறுதிக்கட்ட பிரச்சாரம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் மணிமாறன், வீதி வீதியாக சென்று வாக்குசேகரித்தார். வேலுமணி நகர், திருநகர், திருமால்நகர், வெங்கட்ராமன் வீதி, பாரதிவீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்தவெளி வாகனத்தில் சென்ற அவர், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி பிரச்சாரம் மேர்கொண்டார்.

திருவொற்றியூரில் போட்டியிடும் சீமான் இளைஞர்களுடன் வாலிபால் விளையாடி ஆதரவு சேகரிப்பு 

திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இளைஞர்களுடன் வாலிபால் விளையாடி வாக்கு சேகரித்தார். திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட பூந்தோட்டம் பள்ளியின் விளையாட்டு திடலுக்கு ஆதரவாளர்களுடன் சென்ற சீமான், நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் ஆதரவு திரட்டினார். தொடர்ந்து, இளைஞர்களுடன் இறகுப் பந்து மற்றும் கைப்பந்து விளையாடிய அவர், அங்கிருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் மகேஷ்குமார் பட்டு நூலை காய வைத்து வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மகேஷ்குமார் பட்டு நூலை காய வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட பிள்ளையார் பாளையம், நடுத்தெரு, கிருஷ்ணன் தெரு, மடம் தெரு ஆகிய பகுதிகளுக்கு சென்ற வேட்பாளர் மகேஷ்குமாரை ஆதரித்து, அதிமுக காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனையடுத்து, நெசவாளர்கள் வசிக்கும் பிள்ளையார் பாளையம் பகுதிக்கு சென்ற வேட்பாளர், பட்டு நூல் காய வைத்தவர்களிடம் ஆதரவு திரட்டினார். 

பெரியகுளம் அதிமுக வேட்பாளர் முருகனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம்

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முருகனை ஆதரித்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டி என பெண்களுக்காகவும், பெண்களுக்கான முன்னேற்றத்திற்காகவும் அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து, ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் லோகி ராஜனை ஆதரித்தும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

புதுமையை விரும்பும் மக்கள் தங்களுக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள் - சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி அமமுக வேட்பாளர் ராஜேந்திரன்

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி அமமுக வேட்பாளர் ராஜேந்திரன், வீடு வீடாக சென்று இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ், டாக்டர் பெசண்ட் சாலை, நம்மாழ்வார் தெரு, பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆதரவாளர்களுடன் சென்ற அவர், துண்டு பிரசுரங்களை வழங்கி குக்கர் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

கம்பம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனீஸ் பாத்திமா உறுதிமொழி எடுத்து, ஈழத்தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி தேர்தல் பிரச்சாரம்

தேனி மாவட்டம், கம்பம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனீஸ் பாத்திமா தனது ஆதரவாளர்களுடன், உறுதிமொழி எடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட அணைப்பட்டி, ராயப்பன்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, தேவாரம் ஆகிய பகுதிகளுக்கு பிரச்சார வாகனத்தில் சென்ற அவர், விவசாயி சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

குடியாத்தம் அதிமுக வேட்பாளர் ஃபரிதா தேவாலயத்தில் பிரார்த்தனையில் பங்கேற்று, வாக்கு சேகரிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அதிமுக வேட்பாளர் ஃபரிதா, தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனையில் பங்கேற்று கிறிஸ்தவ பாடல் பாடி வாக்கு சேகரித்தார். குடியாத்தம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த ஃபரிதா, அங்குள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையில் பங்கேற்றார். பின்னர், கிறிஸ்தவ பாடல் ஒன்றை பாடியும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

விழுப்புரம் அதிமுக வேட்பாளர் அமைச்சர் சி.வி.சண்முகம் தேவாலயத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் சி.வி.சண்முகம் தேவாலயத்தில் வாக்கு சேகரித்தார். ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பிரார்த்தனை முடிந்து வந்த கிறிஸ்தவர்களிடம் துண்டுபிரசுரங்கள் கொடுத்து, அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை எடுத்துரைத்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மநீம கட்சி வேட்பாளர் கோபிநாத் பேருந்தில் ஏறி பயணிகளிடம் வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கோபிநாத் பேருந்தில் ஏறி பயணிகளிடம் தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். தொகுதிக்குட்பட்ட மூங்கில் மண்டபம் முதல், காந்தி சாலை வரை கட்சி தொண்டர்களுடன் மனித சங்கிலியாக கைகோர்த்து நின்று டார்ச் லைட் சின்னத்திற்கு ஆதரவு திரட்டிa அவர், தேர்தலில் வெற்று பெற்றவுடன் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என வாக்குறுதி அளித்தார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டி பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்ற காங்கிரஸ் கட்சியினர்

சென்னையிலுள்ள கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக வேண்டி காங்கிரஸ் கட்சி சார்பில் பால்குடம் எடுத்து அபிஷேகம் நடத்தப்பட்டது. பேப்பர் மில்ஸ் சாலையிலுள்ள பஜனைக் கோவிலிலிருந்து பால்குடங்களோடு புறப்பட்ட காங்கிரஸார், ஊர்வலமாக சென்று தீட்டி தோட்டத்திலுள்ள விநாயகர் கோவிலில் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

தேர்தல் கருத்து கணிப்புகள் கருத்து திணிப்பு தான் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தேர்தல் முடிவுகள் குறித்து வெளியாகும் கருத்து கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்பு தான் என உள்ளாட்சித்துறை அமைச்சரும், தொண்டாமுத்தூர் அதிமுக வேடபாளருமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கோவை மாநகரம் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்டார். திமுகவினர் தொடர்புடைய இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

தியாகராய நகர் தொகுதி திமுக வேட்பாளர் கருணாநிதி இறுதிக்கட்ட பிரச்சாரம்

சென்னை தியாகராய நகர் தொகுதி திமுக வேட்பாளர் கருணாநிதி, இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கோடம்பாக்கம் , மேற்கு மாம்பலம், பிருந்தவனம் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்தவெளி வாகனத்தில் சென்ற அவர், உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி கிராமம் கிராமமாக சென்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட டோல்கேட் பகுதிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற அவர், ஒரு வாய்ப்பளித்து வெற்றி பெற செய்தால் தொகுதி வளர்ச்சிக்கு பாடுவேன் என்று கூறி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

வேளச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்கை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம்

சென்னை வேளச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளார் அசோக்கை ஆதரித்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், நடிகையுமான விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுகவின் சாதனைகளை எடுத்துக் கூறி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

உசிலம்பட்டி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் கதிரவன் தேவாலயங்களில் மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பு

உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் கதிரவன், ஈஸ்டர் பண்டிக்கையையொட்டி தேவாலயங்களில் வாக்கு சேகரித்தார். உசிலம்பட்டியில் திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வாட் பிளாக்  கட்சி சார்பில் கதிரவன் களமிறங்குகிறார். இந்நிலையில் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள  7க்கும் மேற்பட்ட தேவாலயங்களுக்கு ஆதரவாளர்களுடன் சென்று அவர், உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

மதுரை மத்திய தொகுதி ம.நீ.ம வேட்பாளர் மணி பொதுமக்கள், வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்குசேகரிப்பு

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மணி, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்குசேகரித்தார். கைலாசபுரம், பாத்திமா கல்லூரி, அருள்தாஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்த அவர், நேர்மையான ஆட்சி தொடர வேண்டும் என்றால் டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் குப்புராமு அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டு இறுதிக்கட்ட பிரச்சாரம்

ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் குப்புராமு, ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். மண்டபம் அகதிகள் முகாம், முனைகாடு, தோணித்துறை, வேதாளை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்த அவர், மத்திய அரசின் சாதனைகள் மற்றும் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டு தாமரை சின்னத்துக்கு வாக்குசேகரித்தார்.

கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணியும்படி வீரபாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் தருண் வாக்குச் சேகரிப்பு

சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளர் தருண் இறுதிக் கட்டப் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரித்தார். திறந்த ஜீப்பில் வீரபாண்டி, பூலாவரி ஆகிய பகுதிகளுக்குச் சென்ற தருண், உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் அனைவரும் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட மருத்துவர் தருண், பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி வாக்குச் சேகரித்தார்.

ஈஸ்டர் திருநாளில் தேவாலயத்துக்குச் சென்று தேமுதிக வேட்பாளர் பிரேமலதா வாக்கு சேகரிப்பு 

விருத்தாசலம் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா ஈஸ்டர் திருநாளையொட்டித் தேவாலயத்துக்குச் சென்று கிறித்தவர்களிடம் வாக்குச் சேகரித்தார். விருத்தாசலம் அருகே கோனான்குப்பம் புனித பெரியநாயகி அன்னை திருத்தலத்தில் ஈஸ்டர் திருநாளையொட்டி நடந்த சிறப்புத் திருப்பலியில் கிறித்தவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது அங்குச் சென்ற தேமுதிக வேட்பாளர் பிரேமலதா, பெரியநாயகி அன்னையை வழிபட்டு மெழுகுத்திரி விளக்கேற்றி கேக் வெட்டியதுடன் அங்கிருந்தோருக்கு ஊட்டி விட்டார். முரசு சின்னத்தில் வாக்களித்துத் தன்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தாராபுரம் தொகுதி பா.ஜ.க.வேட்பாளர் எல்.முருகன் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து வாக்கு சேகரிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பா.ஜ.க.வேட்பாளர் எல்.முருகன், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேருநகர், சிவசக்தி நகர், ஜவுளிகடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் சென்று, தாமரை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். தான் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வான பின், தாராபுரம் பகுதி மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து வாக்கு சேகரித்தார். 

மாரியம்மன் கோவிலில் அமர்ந்து, பெண்களிடம் ஆதரவு திரட்டிய சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் ராஜேந்திரன்

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், எம்.எல்.ஏ.வுமான வழக்கறிஞர் ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோரிமேடு பகுதிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற அவர், அங்குள்ள மாரியம்மன் கோவிலில் அமர்ந்து, அப்பகுதி பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை பட்டியலிட்டு உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

ஜெயின் ஆலயத்தில் மக்களிடையே வாக்கு சேகரித்த எழும்பூர் தொகுதிம திமுக வேட்பாளர் பரந்தாமன்

எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் ஜெயின் சமூகத்தவர்களின் ஆன்மிக விழாவில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். ஆதிநாத பகவானின் பிறந்தநாளை முன்னிட்டு சூளையில் உள்ள ஜெயின் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற சொற்பொழிவில் கலந்து கொண்ட திமுக வேட்பாளர் பரந்தாமன், அங்கிருந்தவர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

நலத் திட்டங்கள் தொடர அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி குமாரபாளையம் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம்

மக்கள் நலத் திட்டங்கள் தடைபடாமல் தொடர அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு கூறி அமைச்சர் தங்கமணி ஆதரவு திரட்டினார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கமணி, கடைசிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குடிமராத்து, தாலிக்கு தங்கம், அம்மா ஸ்கூட்டர் உள்ளிட்ட திட்டங்களை எடுத்துரைத்த அவர், ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம், வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு இலவசம், கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட புதிய திட்டங்களையும் சுட்டிக்காட்டி வாக்கு சேகரித்தார்.

டீக்கடையில் டீ போட்டு மக்களிடையே ஆதரவு திரட்டிய விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தி டீக்கடையில் டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார். தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த அவர், மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கொண்டார். அப்போது, டீக்கடையில் தொண்டர் ஒருவருக்கு டீ போட்டுக்கொடுத்து அவர் ஆதரவு திரட்டினார்.

குமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் நிச்சயம் வராது என திட்டவட்டம் - கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் கடைசிநாளான இன்று மீனவ கிராமங்களான பெரியகாடு, மணக்குடி, கீழமணக்குடி சொத்தவிளை, கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் வரவே வராது என திட்டவட்டமாக உறுதியளித்தார்.

மேளதாளங்கள் முழங்க தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று பாமக வேட்பாளர் பழனிசாமி வாக்கு சேகரிப்பு

நாகை மாவட்டம், மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பழனிச்சாமி மேளதாளங்கள் முழங்க தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்ற அவர், தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை வழங்கி மாம்பழம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு தண்டையார்பேட்டையில் உள்ள மாதா கோவிலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஃபாசில் பிரச்சாரம்

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஃபாசில் மாதா கோவிலில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு ஏராளமான மக்கள் தண்டையார்பேட்டையில் உள்ள மாதா கோவிலில் திரண்டிருந்தனர். அதையொட்டி, ஆதரவாளர்களுடன் அங்கு சென்ற மக்கள் நீதி மய்யம்
ஃபாசில், டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி ஆதரவு திரட்டினார்.

கும்பகோணத்தில் மு.மு.க.வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

கும்பகோணத்தில் அதிமுகவுடனான கூட்டணியில் முவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சோழபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

கரூர் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  நடந்து சென்று வாக்கு சேகரிப்பு

கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் திரளான தொண்டர்களுடன் நடந்து சென்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாங்கப்பாளையத்தில் தொடங்கி, வெங்கமேடு, புகழூர் சாலை, ஏ.ஒன் திரையரங்கம் வரை தொணர்களுடன் பேரணியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

கடலூர் தொகுதியில் அமைச்சர் எம்.சி சம்பத்  திறந்த வாகனத்தில் சென்றபடி தீவிரப் பிரச்சாரம்

கடலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் எம்.சி.சம்பத், நல்லாத்தூர், ரெட்டிச்சாவடி, மஞ்சகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் மேற்கொண்டார். அதிமுக அரசின் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றப் பாடுபடுவதாக அவர் உறுதி அளித்தார்.

பவானி அதிமுக வேட்பாளர், கே.சி கருப்பணன் ஊர் ஊராக வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பு

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.சி.கருப்பணன், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இறுதிக் கட்ட தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தளவாய்பேட்டை, ஜம்பை, பெரிய மோளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்றும் நடந்து சென்றும் அவர் வாக்கு சேகரித்தார்.

காரைக்குடியில், காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார். உஞ்சனை, பூசலாகுடி , சித்தானூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்றபடி வாக்கு சேகரித்த அவர் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த உடன் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றார்.

திருநள்ளாறு தொகுதி பாஜக வேட்பாளர் ராஜசேகரனை ஆதரித்து ஜே.பி.நட்டா தேர்தல் பிரச்சாரம்

புதுச்சேரி திருநள்ளாறு தொகுதி பாஜக வேட்பாளர் ராஜசேகரனை ஆதரித்து, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா பிரச்சாரம் மேற்கொண்டார். பேட்டை ரோடு சந்திப்பில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக வந்து தேரடி வீதியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தவர் பிரதமர் மோடி எனக் குறிப்பிட்ட நட்டா, கடந்த 5 ஆண்டுகாலமாக மத்திய அரசைக் குறைகூறி, மாநில வளர்ச்சிக்கு எந்த திட்டங்களையும் நாராயணசாமி கொண்டு வரவில்லை என குற்றம்சாட்டினார்.

மதுரை மேற்குத் அதிமுக வேட்பாளர் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம்

மதுரை மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான செல்லூர் ராஜு, தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பழங்காநத்தம் சொக்கநாதர் தெரு பொன்மேனி பாண்டியன் நகர், துரைசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டணிக் கட்சியினருடன் வாகனத்தில் சென்று அவர் வாக்கு சேகரித்தார். 

ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சேவூர் ராமசந்திரன் வாக்குசேகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான சேவூர் ராமசந்திரன், ஈஸ்டர் பண்டிகையையொட்டி, தேவாலயங்களில் வாக்கு சேகரித்தார் தசராப்பேட்டை, ஆரணி டவுண், சூரியகுளம், ஆற்றுப்பாலம், கார்த்திகேயன் சாலை உள்ளிட்ட இடங்களிலுள்ள தேவாலயங்களுக்கு சென்ற அவர், பாதிரியார்களிடம் ஆசிப்பெற்றும், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் கொடுத்தும் வாக்குசேகரித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments