வாக்குப்பதிவு முடியும் வரை கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்..!

0 3624
வாக்குப்பதிவு முடியும் வரை கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்..!

ஏப்ரல் 4ஆம் நாள் மாலை 7 மணிக்குப் பின் மின்னணு ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்றும், தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் நாள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் ஏப்ரல் 4 மாலை 7 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தேர்தல் பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் நடத்தக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளது.

திரைப்படம், தொலைக்காட்சி, பண்பலை வானொலி, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் ஆகியவற்றிலும், செல்பேசிக் குறுஞ்சேதி வாயிலாகவும் பிரச்சாரம் செய்யக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளது. இசைநிகழ்ச்சி, பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்றும், விதிகளை மீறினால் இரண்டாண்டு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

தொகுதிக்கு வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளும் ஏப்ரல் 4 மாலை 7 மணிக்குமேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகியவற்றில் வெளியாட்கள் தங்கியுள்ளனரா எனக் கண்டறிய ஆய்வு செய்யப்படும் என்றும், வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், ஏப்ரல் 4 மாலை 7 மணி முதல் செல்லாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாடகைக்கு வாகனத்தை அமர்த்த அனுமதி இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது. வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டர் தொலைவுக்கு வெளியே வேட்பாளர்களின், அரசியல் கட்சிகளின் தற்காலிக அலுவலகங்கள் இருவரை மட்டுமே கொண்டு அமைக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments