'அந்த கேள்வி என்னை உறுத்தியது'!- சிறுமி ஆசையை நிறைவேற்றிய அண்ணாமலை
கரூரில் சிறுமி ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரின் வீட்டில் இரவில் தங்கி உணவருந்தி கிராம மக்களின் குறைகளை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அண்ணாமலை கேட்டறிந்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வேட்பாளராக பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளவர் அண்ணாமலை. விருப்ப ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியான இவர் முனைப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அரவக்குறிச்சி தொகுதி கிராமங்கள் நிறைந்த தொகுதி. கடந்த 2 தினங்களுக்கு முன்பு கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேட்டமங்கள் காலணியில் வாக்கு சேகரிக்க அண்ணாமலை சென்றிருந்தார்.
இந்த பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அப்போது, பாலுசாமி என்பரின் மகள் கார்த்திகா என்ற சிறுமி அண்ணாமலையிடத்தில்' நீங்கள்ளாம் எங்கள் வீட்டில் தங்குவீர்களா' என்று அப்பாவியாக கேட்டுள்ளார். இந்த கேள்வி அண்ணாமலையை உறுத்தியுள்ளது. இதையடுத்து, சிறுமியிடத்தில் கண்டிப்பாக உன் வீட்டுக்கு ஒருநாள் வருவேன். உங்களுடன் தங்கியிருந்து சாப்பிட்டு செல்வேன் என்று அண்ணாமலை வாக்குறுதி அளித்தார்.
இதற்கிடையே , தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையிலும் சிறுமியின் வாக்குறுதியை நிறைவேற்ற அண்ணாமலை முடிவு செய்தார். இதையடுத்து நேற்றிரவு 11.30 மணியளவில் தன் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அண்ணாமலை வேட்டமங்களம் காலணியில் உள்ள பாலுசாமி வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த பெண்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். பின்னர், இரவு உணவாக அவருக்கு பூரி, மசாலா வழங்கினார். இரவு உணவு அங்கேயே சாப்பிட்டு விட்டு அந்த வீட்டிலேயே அண்ணாமலை உறங்கினார். பின்னர், காலை எழுந்த அண்ணாமலை கிராம மக்களிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மக்களின் குறைகள் அனைத்தும் தான் வெற்றி பெற்றவுடன் களையப்படும் என்று அண்ணாமலை வாக்குறுதியும் அளித்தார். பாலுசாமி வீட்டினர் காலையில் கொடுத்த டீயை அருந்தி விட்டு வேட்டமங்களம் கிராமத்திலிருந்து அண்ணாமலை புறப்பட்டு சென்றார்.
தன்னுடையே வேண்டுகோளை ஏற்று அண்ணாமைலை தங்கள் வீட்டில் தங்கியது தன்னை நெகிழ செய்ததாக சிறுமி கார்த்திகா கூறினார்.
Comments