நாளை நிறைவடையும் தேர்தல் பிரச்சாரம்.... தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்!

0 3996
நாளை நிறைவடையும் தேர்தல் பிரச்சாரம்.... தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரச்சாரம் நாளை நிறைவடைய உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும், வேட்பாளர்களும் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ராயபுரம் தொகுதியில் இளநீர் வெட்டிக் கொடுத்து வாக்கு சேகரித்த அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார், இளநீர் வெட்டிக் கொடுத்து வாக்கு சேகரித்தார். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆதரவாளர்களுடன் சைக்கிள் ரிக் ஷாவில் அமர்ந்து வீதி வீதியாக சென்று அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு திரட்டினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், வருமான வரித்துறைக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே திமுகவினர் வீடுகளில் சோதனை நடந்ததாக குறிப்பிட்டார். அதிமுகவினர் வீடுகளிலும் சோதனை நடந்ததாகவும், ஆனால் அதற்கெல்லாம் அதிமுகவினர் அஞ்சவில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

”தமிழ் மொழி பழமையானது, தமிழகம் புண்ணிய பூமி” -ஜே.பி.நட்டா பிரச்சாரம்

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை வெளிநாட்டிற்கு கொண்டு செல்லும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக குறிப்பிட்டார். நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்ற ஜே.பி.நட்டா, தமிழகத்திற்கு புதிதாக 11 மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதாக சுட்டிக்காட்டினார். தமிழ் மொழி பழமையானது, தமிழகம் புண்ணிய பூமி என புகழாரம் சூட்டிய ஜே.பி.நட்டா, அதிமுக - பா.ஜ.க. கூட்டணி வெற்றிக் கூட்டணி என பெருமிதம் தெரிவித்தார்.

திட்டக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கணேசனை ஆதரித்து வி.சி.க தலைவர் திருமாவளவன் பிரச்சாரம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கணேசனை ஆதரித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார். அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெரியசாமி டெபாசிட் கூட வாங்க மாட்டார் எனப் பேசிய திருமாவளவன், திமுக வேட்பாளரின் வெற்றி உறுதியாகி இருப்பதாகக் கூறினார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை விளக்கிக் கூறிய திருமாவளவன், திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கோவை தெற்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பிரச்சாரம்

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், உக்கடம், டவுன்ஹால் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார். உக்கடம் லக்ஷ்மி நரசிம்மர் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், தொடர்ந்து கெம்பட்டி காலனி, வைசியாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி உள்ளிட்ட இடங்களில் பாஜக தொண்டர்களுடன் வீதி ,வீதியாகச் சென்று ஆதரவு திரட்டினார்.  மத்திய மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தாராபுரம் பாஜக வேட்பாளர் எல்.முருகன் தேர்தல் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக கூட்டணியில் இத்தொகுதியில் போட்டியிடும் அவர் வீராட்சிமங்கலம், காட்டூர், சீராம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த அவருடன், கூட்டணிக் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி முதியவர்கள் காலில் விழுந்து ஆதரவு திரட்டினார் 

கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி முதியவர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்கு உட்பட்ட வெங்கமேடு, கொங்கு நகர், புகழூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற அவர் மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் செய்தார். அப்போது முதியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்ற அவர், உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.லட்சுமணன் மாட்டு வண்டி ஓட்டிச் சென்று வாக்கு சேகரித்தார்

விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆர்.லட்சுமணன் மாட்டு வண்டி ஓட்டிச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனாங்கூர் கிராமத்தில் மாட்டு வண்டியில் சென்று அவர் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் வேட்பாளருடன் அக்கட்சி ஆதரவாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு வாக்கு சேகரிப்பு

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளரும், அக்கட்சியின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அண்ணாநகர், தென்னூர் உழவர் சந்தை மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். திமுகவின் வாக்குறுதிகளை பட்டியலிட்ட அவர் அனைத்து வாக்குறுதிகளும் 100சதவீதம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். 

ஐ.ஜே.கே வேட்பாளர் செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடியும், டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்தும் ஆதரவு திரட்டினார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் போட்டியிடும் ஐ.ஜே.கே வேட்பாளர் செந்தில்குமார் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்தார். திருக்கோவிலூர் விளையாட்டு மைதானத்திற்கு ஆதரவாளர்களுடன் சென்ற அவர் இளைஞர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆதரவு திரட்டினார்.
மேலும், மணம்பூண்டி நான்கு சாலை சந்திப்பில் உள்ள டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்தும் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி அதிமுக வேட்பாளர் எஸ்.சந்திரன் வாக்கு சேகரிப்பு

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.சந்திரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட காளப்ப நாயக்கன்பட்டி  பகுதியில் உள்ள தேர் புளியமரம், இச்சிகுட்டை, நஞ்சுண்டாபுரம், ராசாகவுண்டனூர் உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது வயல்வெளிக்கு சென்ற அவர், அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். 

செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செங்கல்பட்டு, அண்ணாநகர், அழகேசநகர், குண்டூர் ஆகிய பகுதிகளுக்கு தனது ஆதரவாளர்களுடன் பிரச்சார வாகனத்தில் சென்ற அவர், தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை சிறுமியின் வேண்டுகோளை ஏற்று கிராமத்து வீட்டில் தங்கி வாக்கு சேகரிப்பு 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற போது ஒரு சிறுமி அண்ணாமலையை தனது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்த நிலையில், பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு சிறுமியின் வீட்டிற்கு சென்ற அண்ணாமலை, இரவு உணவு சாப்பிட்டு அங்கேயே தங்கினார். பின்னர் காலையில் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி வாக்கு சேகரித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுதாயிக்கு ஆதரவாக நடிகை ரோகினி பிரசாரம் 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுத்தாயை ஆதரித்து நடிகை ரோகினி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்கு உட்பட்ட நாகமலை புதுக்கோட்டையில் மக்களிடையே வாக்கு சேகரித்த அவர்,  திமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டினார். மேலும், மக்களைவை தேர்தலை போல் சட்டமன்ற தேர்தலிலும் திமுகவிற்கு ஆதரவளிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

அமமுக, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் தேர்தல் பரப்புரை 

கடலூரில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஞானபண்டிதன் மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதி அமமுக வேட்பாளர் வசந்தகுமார் ஆகியோரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார்‍. வாக்காளர்களை நோக்கி வணங்கியும், முரசு சின்னம் மற்றும் கைகளால் வெற்றிக்குறியை காட்டியும் வேட்பாளர்களுக்கு விஜயகாந்த் ஆதரவு திரட்டினார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஜே.பி.நட்டா தேர்தல் பிரச்சாரம்

கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ஜெயசீலன் ஆகியோரை ஆதரித்து, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பேரணி நடைபெற்றது. அருமனை - திற்பரப்பு சாலையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், கட்சித் தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். காரைக்குடியிலிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வந்த நட்டா, திறந்தவெளி வாகனத்தில் சென்றவாறு வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

வாக்காளர்களுக்கு சால்வை அணிவித்து ஆதரவு திரட்டிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வரகனேரி முஸ்லீம் தெருவில் பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார். வாக்காள பெருமக்களுக்கு சால்வை அணிவித்து அவர் வாக்கு சேகரித்தார். அரசின் திட்டங்களை செயல்படுத்த மீண்டும் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்ட அவர், இஸ்லாமிய மக்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன் எனவும் உறுதி கூறினார்.

கயிறு தொழிற்சாலைக்கு சென்று கயிறு திரித்து அதிமுக கூட்டணி வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‍.தென்னை நார் தொழிற்சாலைக்கு சென்று கயிறு திரித்தும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தும், அவர் ஆதரவு திரட்டினார்‍.

தாமரை சின்னம் பொருத்திய ஹெல்மட்டை அணிந்து பிரசாரம்

குளச்சல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ் ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தாமரை சின்னம் பொருத்திய ஹெல்மட்டை அணிந்து தொகுதிக்கு உட்பட்ட குறும்பனை, கோடிமுனை, குளச்சல், முட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேரணியாக சென்ற அவர் மக்களிடையே ஆதரவு திரட்டினார்.

முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி படிக்க உதவி- வி.சி.க வேட்பாளர் பனையூர் பாபு வாக்குறுதி

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் களமிறங்கி உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பனையூர் பாபு, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சித்தாமூர் பகுதியில் வீதி, வீதியாக சென்று, வாக்காளர்களை சந்தித்து, ஆதரவு திரட்டிய பனையூர் பாபு, செய்யூர் தொகுதியில் இருந்து தமிழக சட்டப்பேரவைக்கு தம்மை தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
10 மற்றும் 12 - வது வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும்10 மாணவ - மாணவிகளின் உயர் கல்விச்செலவை தாம் முழுமையாக ஏற்றுக்
கொள்வதாக வாக்குறுதி அளித்து, பனையூர் பாபு தீவிர, ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

முழு நேரமும் தொகுதியில் தங்கி பணியாற்றுவேன் -விளவங்கோடு தொகுதி பாஜக வேட்பாளர் வாக்குறுதி

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி பாஜக வேட்பாளர் ஜெயசீலன், வீதி, வீதியாக சென்று, ஆதரவு திரட்டினார். மார்த்தாண்டம், குழித்துறை உள்ளிட்ட இடங்களில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, பிரசாரம் செய்த வேட்பாளர் ஜெயசீலன், மத்திய - மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கி கூறி, வாக்கு சேகரித்தார். விளவங்கோடு தொகுதியில் தாம் தேர்ந்தெடுக்கப் பட்டால், முழு நேரமும் தங்கி, பணியாற்றுவேன் என வேட்பாளர் ஜெயசீலன் உறுதி அளித்தார்.

ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநர்களிடம் கலந்துரையாடிய கமல் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ரயில்நிலைய ஆட்டோ ஓட்டுநர்களிடம் வாக்கு சேகரித்தார். இன்று கோவை ரயில் நிலையம் சென்று பார்வையிட்ட கமல், அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டிற்குச் சென்று ஆட்டோ ஓட்டுநர்களிடம் கலந்துரையாடினார். தங்களது குறைகளை அவர்கள் தெரிவித்த நிலையில், வெற்றி பெற்று வந்ததும் கண்டிப்பாக அதற்கான தீர்வுகளைப் பெற்று தருவதாக உறுதியளித்த கமல், மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

திருவாரூரில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணனை ஆதரித்து 500க்கும் மேற்பட்டோர் பேரணி

திருவாரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனர். வடபாதிமங்கலம் பகுதியிலுள்ள திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பாலகுறிச்சி, திருநாட்டியத்தான்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக சென்று ஆதரவு திரட்டினர்.

20 ரூபாய் போல அச்சடிக்கப்பட்ட காகிதத்துடன் பிரச்சாரம் செய்த மநீம வேட்பாளர்

சென்னை ஆர்கே நகரில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பாசில், வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார். எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற விழிப்புணர்வு வாசகம் அடங்கிய, 20 ரூபாய் நோட்டை போல அச்சடிக்கப்பட்ட பேப்பர்களை வழங்கி அவர் வாக்கு சேகரித்தார். 2018 ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் ஆர் கே நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டு ஃபார்முலா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை குறிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பாமக வேட்பாளர் கசாலி மீன்பாடி வண்டி ஓட்டி பிரச்சாரம்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் கசாலி மீன்பாடி வண்டியினை ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பார்டர் தோட்டம், ஜாம்பஜார் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கிருந்த ஒரு டயர் கடைக்கு சென்று டயர்களின் தரம் குறித்து கேட்டறிந்தும், மீன்பாடி வண்டியினை ஓட்டியும் அவர் ஆதரவு திரட்டினார்.

டீ கடையில் டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபாரதி தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட கரம்பக்குடி கடைவீதிகளில் ஒவ்வொரு கடை கடையாக ஏறி இறங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அவர், அங்குள்ள ஒரு டீ கடையில் டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்தார்.

”திமுக கூட்டணியால் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஆபத்து” - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

திமுக கூட்டணியால் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஆபத்து என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடனான தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அதிமுவின் 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் வரலாறு காணாத தொழில் வளர்ச்சியடைந்துள்ளதாக கூறினார்.

பா.ஜ.க. வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து, நடிகை நமீதா பிரச்சாரம் 

உதகை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து, நடிகை நமீதா பிரச்சாரம் மேற்கொண்டார்‍. இலவச சிலிண்டர், வாஷிங்மெஷின் உள்ளிட்ட அதிமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி அவர், பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்‍.

சிபிஎம் வேட்பாளரை ஆதரித்து நடிகை ரோகிணி பரப்புரை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து நடிகை ரோகிணி பிரச்சாரம் மேற்கொண்டார். கோவில்பட்டி மற்றும் கயத்தாரில் வீதி வீதியாக பரப்புரை செய்தும், வணிகர்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் அவர் ஆதரவு திரட்டினார்‍. அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என அவர், கேட்டுக்கொண்டார்

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு

தமிழ்நாட்டில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும், 10 லட்சம் இளையோருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். சென்னை திருவொற்றியூர், இராயபுரம், எழும்பூர், துறைமுகம், வில்லிவாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

திருவொற்றியூர் வடிவுடையம்மன் திருக்கோவில் தேரடி சந்திப்பில் நடைபெற்ற பரப்புரையில், புறா, பலூன்களை பறக்கவிட்ட உதயநிதிக்கு, வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது. அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார்.

ஓ.பி.எஸ் வெற்றிபெற பாடுபடுமாறு நிர்வாகிகளுக்கு சிடி.ரவி வேண்டுகோள்

தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற அதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேர்தல் பொறுப்பாளர் சிடி ரவி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில்,பேசிய சிடி.ரவி, தமிழகத்துக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ், மக்களில் ஒருவனாக இருந்து சேவை செய்யக் காத்திருப்பதாக கூறினார்.

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன் தீவிர வாக்கு சேகரிப்பு 

கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வாக்குறுதி அளித்துள்ளார்.

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அவர், கடம்பூர், கரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

தாம் வெற்றிப்பெற்றால், கடம்பூர் ரயில்வே நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும், பெருந்தலைவர் காமராஜர் அடிக்கல் நாட்டிய கல்லூரி கட்டித் தரப்படும் என்றும் தினகரன் வாக்குறுதி அளித்தார். 

விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம் 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளரும் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்களைப் பட்டியலிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், தேர்தல் வாக்குறுதிகளையும் சுட்டிக்காட்டி, அவை அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ பிரச்சாரம்

திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன், பாண்டூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டணிக் கட்சியினருடன் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த அவர், பாண்டூர் பகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளதாகக் கூறினார்.

திமுக ஆட்சி அமைந்ததும் மேலும் பல நல்ல திட்டங்களை தொகுதிக்காக கொண்டு வர உள்ளதாக கூறிய வி.ஜி.ராஜேந்திரன், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

வயல் வெளியில் இறங்கி, விவசாயிகளிடம் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்

மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

மரப்படுகை, அகர மணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் ஆதரவு திரட்டிய வேட்பாளர், மணக்குடி கிராமத்தில் வயல் வெளியில் இறங்கி, விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார்.

தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து பாமக வேட்பாளர் பழனிசாமி, தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

அமைச்சர் காமராஜ் வீதி,வீதியாக நடந்து சென்று வாக்குச் சேகரிப்பு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் களமிறங்கியுள்ள அமைச்சர் காமராஜ் வீதி வீதியாக நடந்து சென்று பல்வேறு தரப்பினரிடத்தில் வாக்குச் சேகரித்தார்‍.

பேருந்து பயணிகள்,ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்டோரிடம் அவர் ஆதரவு திரட்டினார். தொகுதியின் வளர்ச்சிக்கு தான் செய்த பணிகளை பட்டியலிட்டும், அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறியும் அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரித்தார்‍.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments