பூமழையாலும் பூமாலையாலும்... மிரளும் வேட்பாளர்கள்..!
தமிழகத்தில் வேட்பாளர்களை மகிழ்விப்பதற்காக தார்ச்சாலையை பூச்சாலையாக்கியும், மண் அள்ளும் எந்திரத்தால் பூக்களை மழையாகப் பொழிந்தும் வரவேற்கும் நிர்வாகிகள், ராட்சத மாலையைக் கொண்டு வந்து வேட்பாளர்களை மலைக்க வைத்து வருகின்றனர்.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ் ராஜன் ஆகிய இருவரையும் உண்மையிலேயே பூமிதிக்கவைத்து அசர வைத்தனர் அவர்களது கட்சியினர்..!
செங்கல்பட்டு திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் என்பவரை வரவேற்பதற்கு அக்கட்சியின் பகுதிச் செயலாளர் ஒருவர் மண் அள்ளும் எந்திரத்தை கொண்டு வந்திருந்தார். சற்றும் எதிர்பாராத நிலையில் அதில் இருந்த உதிர்ந்த 50 கிலோ எடையுள்ள பூவிதழ்களை மழை போல தூவி வரவேற்றார்.
காஞ்சிபுரம் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் மகேஷ்குமாரை வரவேற்க சுமார் 30 அடி நீளமுள்ள பிரமாண்ட ரோசாப்பூ மாலை கிரேன் மூலம் கொண்டு வரப்பட்டது. பிரச்சார வாகனத்தில் பாதுகாப்பாக நின்றவரை சற்று மேலே ஏறி நிற்க வைத்து தலைக்கு மேலாக மாலையை கொண்டு வந்தனர். போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே, கிரேன் டிரைவர் மாலையை சற்று நெருக்கமாக கொண்டு வந்ததால் வேட்பாளர் சற்று மிரண்டு போனார்
Comments