வாக்குப் பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் உச்சக்கட்டப் பிரச்சாரம்

0 3891
வாக்குப் பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் உச்சக்கட்டப் பிரச்சாரம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அனைத்து கட்சியினரும், வேட்பாளர்களும் உச்சக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை கூறி அமைச்சர் சரோஜா வீதி வீதியாக சென்று பிரச்சாரம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான சரோஜா வீதி வீதியாக நடந்து சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்கு உட்பட்ட ராசிபுரம் நகர் பகுதிகளில் ஆதரவாளர்களுடன் நடந்து சென்ற அவர் மக்களிடையே வாக்கு சேகரித்தார். அப்போது, அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை அவர் விளக்கி கூறினார்.

குடிசைகள் இல்லாத மயிலாப்பூரை உருவாக்குவதே லட்சியம் - திமுக வேட்பாளர் த.வேலு

சென்னை மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் த.வேலு, காலை முதலே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மயிலாப்பூர், மந்தைவெளி, பசுமை வழி சாலை உள்ளிட்ட இடங்களில் திறந்தவெளி ஆட்டோவில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், உதய சூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

பாஸ்ட் புட் கடையில் முட்டை பொடி மாஸ் செய்து கொடுத்து வாக்கு சேகரித்தார் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார், தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது பாஸ்ட் புட் கடை ஒன்றிற்கு சென்ற ஜெயக்குமார் முட்டை பொடி மாஸ் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டதாகவும், இதில் பழிவாங்கும் நோக்கம் எதுவுமில்லை என்றும் கூறினார்.

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை ஆதரித்து கர்நாடகாவை சேர்ந்தவரும் பாஜக இளைஞர் அணியின் தேசியத் தலைவரும் பெங்களூரு தெற்கு தொகுதியின் எம்பியுமான தேஜஸ்வி சூர்யா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவை பந்தய சாலை பகுதியில் ஆதரவாளர்களுடன் நடந்து சென்ற அவர் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் ஆதரவு திரட்டினார்.

இருகரம் கூப்பியும், தம்ஸ் அப் முத்திரை காட்டியும் வாக்கு சேகரித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்

பெரம்பலூர் தேதிமுக வேட்பாளர் இராஜேந்திரன் மற்றும் குன்னம் அமமுக வேட்பாளர் கார்த்திகேயன் ஆகியோரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரவு 11 மணிக்கு மேல்  பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், இரவு 7 மணிக்கு பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் இரவு 11 மணியாகியும் அவர் வராததால், 4 மணிநேரத்திற்கும் மேலாக தொண்டர்கள் கால்கடுக்க காத்திருந்தனர். பிரச்சார களத்திற்கு 11.15 மணிக்கு வந்த விஜயகாந்த், இருகரம் கூப்பியும், தம்ஸ் அப் முத்திரை காட்டியும் வாக்கு சேகரித்தார்.

சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி, தூய்மை பணியாளருக்கு உதவி செய்து வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளர்

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி அமமுக வேட்பாளர், ராஜேந்திரன் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்தார். மெரினா கடற்கரையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்களிடம் கலந்துரையாடி ஆதரவு திரட்டிய அவர், துண்டு பிரசுரங்களை வழங்கி குக்கர் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியதோடு, பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளருக்கும் உதவி செய்தார்.

செஞ்சி தொகுதியில் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்தும்,டீக்கடையில் டீ போட்டு கொடுத்தும் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் கே.எஸ். மஸ்தான்

செஞ்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.எஸ். மஸ்தான் வாரச்சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு ஆதரவாளர்களுடன் சென்ற அவர், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் திமுக வாக்குறுதிகளை எடுத்துக்கூறி பிரச்சாரம் செய்தார். அப்போது, அங்கு காய்கறி கடையில் வியாபாரம் செய்தும், டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்தும் அவர் உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

அதிமுக அரசின் 10 ஆண்டு கால சாதனைகளையும், தொகுதிக்கு செய்த நலத்திட்டங்களையும் கூறி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பு

கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை, தென்றல் நகர், வடக்குப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனத்தில் சென்ற அவர் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மக்களிடையே பேசிய அவர், அதிமுக அரசின் 10 ஆண்டு கால சாதனைகளையும், தொகுதிக்கு செய்த நலத்திட்டங்களையும் கூறி வாக்கு சேகரித்தார்.

திருவள்ளூர் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர்

திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். திருவள்ளூர் தொகுதியில் மீண்டும் களமிறங்கும் வி.ஜி.ராஜேந்திரன் தொகுதி முழுக்க தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், மடத்துக்குப்பம், வேப்பஞ்செட்டி, விநாயகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள், வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

நூற்றுக்கணக்கான பெண்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று வேளச்சேரி அதிமுக வேட்பாளர் அசோக் பிரச்சாரம்

சென்னை வேளச்சேரி அதிமுக வேட்பாளர் அசோக், வாகன பேரணி மூலம் பிரச்சாரம் மேற்கொண்டர். நூற்றுக்கணக்கான பெண்களுடன் கஸ்தூரிபாய் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்ற அவர், இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

காய்கறிகளை எடைபோட்டு விற்று வாக்கு சேகரித்த உத்திரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம் காய்கறிகளை விற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாலாஜாபாத் பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதியில் ஒவ்வொரு கடையாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஒரு கடையில் காய்கறிகளை எடைபோட்டு விற்பனை செய்தவாறு அவர் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வின் போது ஏராளமான கூட்டணிக் கட்சியினர் அவருடன் திரளாக கலந்து கொண்டனர்.

விவசாயிகளிடையே குறைகளைக் கேட்டறிந்து ஆதரவு திரட்டிய அமைச்சர் காமராஜ் 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் காமராஜ் விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார். சித்தன் வாழுர் கிராமத்திற்கு சென்ற அவர், அங்கு கல் அறுக்கும் தொழிலாளர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அதேபோல் இனாம் கிளியூரில் வாழைத்தோப்பு விவசாயிகளிடம் வாக்கு சேகரித்த அவர், பிரச்சினைகளைக் கேட்டறிந்து வெற்றி பெற்றவுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தார்.

தொண்டர்களுடன் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்த கும்பகோணம் திமுக வேட்பாளர்

கும்பகோணம் திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று அவர் ஆதரவு திரட்டினார்.

ஆயிரக்கணக்கான திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று சேகரித்த பர்கூர் திமுக வேட்பாளர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் திமுக வேட்பாளர் மதியழகன், இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார். ஆயிரக்கணக்கான திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்ற அவர், உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். பர்கூர் புதிய பேருந்து நிலையம் முன்பு தொடங்கிய பிரமாண்ட இருசக்கர வாகன பேரணி சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

மருத்துவமும், கல்வியும் சந்தை பொருளாக மாறிவிட்டது - சீமான் வேதனை

சென்னை மயிலாப்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மருத்துவமும், கல்வியும் சந்தை பொருளாக மாறிவிட்டதாக வேதனை தெரிவித்தார். மீண்டும் இரட்டை இலைகும், உதயசூரியனுக்கும் தான் வாக்களிப்பீர்கள் என்றால், எங்களை சுடுகாட்டில் போடுங்கள் என்று ஆவேசம் காட்டிய சீமான், 50 ஆண்டுளாக ஒன்னும் செய்யாத திராவிட கட்சிகள் இனி என்ன செய்வார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

தேநீர் கடையில் தேநீர் அருந்தி பிரச்சாரத்தைத் தொடர்ந்த பிரேமலதா விஜயகாந்த்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி தேமுதிக வேட்பாளரும் அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், கடைவீதியில் வாக்கு சேகரித்தார். அங்குள்ள உழவர் சந்தை, பஜார் வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆதரவாளர்களுடன் சென்ற அவர், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து அங்குள்ள தேநீர் கடை ஒன்றில் பிரேமலதா விஜயகாந்த் தேநீர் அருந்தினார்.

அதிமுக மீண்டும் வெற்றிபெற வேண்டி குடியாத்தம் அதிமுக வேட்பாளர் பரிதா சிறப்பு யாக பூஜை 

சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற வேண்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. கடாம்பூரில் உள்ள நெமிலி அம்மன் ஆலயத்தில் அதிமுகவினர் சார்பில் இந்த யாகம் நடத்தப்பட்டது. இதில் குடியாத்தம் அதிமுக வேட்பாளர் பரிதா மற்றும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முதியவர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்த தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர்

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் களம் கானும் அதிமுக வேட்பாளர்
டி.கே.எம் சின்னையா முதியவர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார். தாம்பரம் கிழக்கு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் வீடு வீடாக சென்று அதிமுகவிற்கு ஆதரவு திரட்டினார். அப்போது, அங்கிருந்த மூதாட்டி காலில் விழுந்து மரியாதை செலுத்திய அவர் இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பிரச்சாரத்தின்போது சிறுமிகளுடன் செல்பி எடுத்துகொண்ட அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அதிமுக வேட்பாளரான அமைச்சர் தங்கமணி, வீடு வீடாக நடந்து சென்றும், திறந்தவெளி வாகனத்தில் சென்றும் வாக்குசேகரித்தார். ஆண்டிகாடு, அலமேடு, வெடியரசம்பாளையம், பழனியப்பன் தோட்டம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்ற அவர், அதிமுக வாக்குறுதிகளை எடுத்துக்கூறி இரட்டை இலைக்கு வாக்கு திரட்டினார். பிரச்சாரத்தின்போது சிறுமிகள் புகைப்படம் எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதையடுத்து அவர்களுடன் அமைச்சர் தங்கமணி செல்பி எடுத்துக்கொண்டார்.

மூதாட்டி ஒருவருக்கு சால்வை அணிவித்து வாக்கு கேட்ட ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர்

சென்னை ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் ராஜேஷ், புதுவண்ணாரப்பேட்டை அம்மணியம்மாள் தோட்டம், அன்னை சத்யா நகர், ஒற்றைவாடை தெரு, சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது மூதாட்டி ஒருவர்  எம். ஜி. ஆர். மற்றும் ஜெயலலிதா புகைப்படத்தை அவரிடம் காண்பித்து கண்  கலங்கினார்அவருக்கு ஆறுதல் கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்கும் படி சால்வை அணிவித்து ராஜேஷ் கேட்டு கொண்டார். 

இலைகளை உடையாக அணிந்து வாக்கு சேகரித்த ஐ.ஜே.கே வேட்பாளர் பெரியசாமி

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பெரியசாமி இலைகளை உடையாக அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இத்தொகுதியில் போட்டியிடும் அவர், வீரகனூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது உடல் முழுவதும் இலைகளை கட்டிக் கொண்டு வீதிவீதியாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கியும் கட்சி நிர்வாகிகளுடன் நடனமாடியும் அவர் வாக்கு சேகரித்தார்.

ஆலங்குளம் திமுக வேட்பாளர் பூங்கோதை தங்கள் பகுதிக்குள் பிரச்சாரத்திற்கு வர எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்

திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவை ஊருக்குள் வர விடாமல் குறிப்பிட்ட ஒரு அமைப்பைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் போலீஸ் பாதுகாப்புடன் பிரச்சாரம் செய்தார். கடையம் கல்யாணிபுரம் மற்றும் பாரதி நகருக்கு ஆதரவு திரட்ட சென்ற அவருக்கு எதிராக அங்கிருந்த சிலர் முழக்கங்களை எழுப்பினர்.

தாம் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பேசுபவர் ராஜேந்திரபாலாஜி - கனிமொழி 

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் தங்கபாண்டியனை ஆதரித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். செட்டியார்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்த அவர் அதே தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தாம் என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் என்பதே தெரியாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுபவர் என்று விமர்சித்தார்.

தொடர்ந்து தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவுக்கு ஆதரவாகவும் சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஈ.ராஜாவுக்கு ஆதரவாகவும் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அனைத்து வீடுகளுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்க நடவடிக்கை - பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை வாக்குறுதி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பரமத்தி வடக்கு ஒன்றிய பகுதிகளில் தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரித்த அவர், தேர்தலில் வெற்றி பெற்றால், அரவக்குறிச்சி தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் காவேரி கூட்டுக் குடிநீர் கிடைக்க வழி வகை செய்வேன் என வாக்குறுதி அளித்து ஆதரவு திரட்டினார். 

திமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு - டி.ஆர்.பாலு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகையை ஆதரித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட சுங்குவார்சத்திரம், திருமங்கலம்,வடமங்கலம், பிள்ளைச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் செல்வப்பெருந்தகைக்கு ஆதரவு திரட்டிய டி.ஆர்.பாலு, திமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்றார்.

காக்கிச் சீருடை அணிந்து ஆட்டோ ஓட்டிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரித்தார். அத்தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெல் தொமுச அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவர்களில் ஒருவரது ஆட்டோவை, ஓட்டுநருக்கான காக்கிச் சீருடை அணிந்து ஓட்டிச் சென்றார். பெல் கணேசா ரவுண்டானா முதல் ட்ரெய்னிங் சென்டர் வரை சென்று மீண்டும் கணேசா ரவுண்டானா திரும்பிய அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணியாகச் சென்றனர்.

டீக்கடையில் டீ போட்டும் , உணவகத்தில் பூரி சுட்டு கொடுத்தும் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மகேஷ் குமார் உணவகத்தில் பூரி சுட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.தொகுதிக்கு உட்பட்ட 51வது வார்டு பகுதிகளில் ஆதரவாளர்களுடன் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மக்கள் மற்றும் வியாபாரிகளிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது, அங்கிருந்த டீக்கடையில் டீ போட்டு கொடுத்தும், உணவகத்தில் பூரி சுட்டு கொடுத்தும் அவர் பிரச்சாரம் செய்தார்.

செய்யூர் தொகுதி விசிக வேட்பாளர் பனையூர் பாபு மீனவர்களுடன் கலந்துரையாடி வாக்கு சேகரிப்பு

செய்யூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர் பாபு மீனவர்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்கு உட்பட்ட திருக்கழுகுன்றம், வசுவசமூத்திரம், புதுப்பட்டினம், பெரியார் நகர் பகுதிகளுக்கு ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்ற அவர் வாக்கு சேகரித்தார். அதைத்தொடர்ந்து, மீனவர்களை சந்தித்த அவர் அவர்களுடன் கலந்துரையாடி ஆதரவு திரட்டினார்.

கோபி தொகுதியில் பள்ளிவாசல்களுக்குச் சென்று அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பு

ஈரோடு மாவட்டம் கொபிச்செட்டிப்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான செங்கோட்டையன், பள்ளிவாசல்களில் சென்று வாக்கு சேகரித்தார். அத்தொகுதியில் 9வது முறையாகப் போட்டியிடும் அமைச்சர் செங்கோட்டையன், கோபிச்செட்டிப்பாளையத்திலுள்ள பள்ளிவாசலுக்கும் நல்லகவுண்டன்பாளையத்திலுள்ள பள்ளிவாசலுக்கும் சென்று தொழுகை முடிந்து வெளியே வந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

மாதவரம் திமுக வேட்பாளர் சுதர்சனம் ஸ்கூட்டரில் சென்று வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சுதர்சனம், ஸ்கூட்டரில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெருமாள் கோயில் தெரு, பாரதியார் தெரு ஆகிய பகுதிகளில் ஸ்கூட்டரில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், தொடர்ந்து ரோஜா நகர், பஜார் நகர், ராஜாஜி நகர் ஆகிய பகுதிகளில் திறந்தவெளி வேனில் சென்று வாக்கு சேகரித்தார்.

சேலம் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரனை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரனை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆத்தூர் டவுன் ராணிப்பேட்டை பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜெயசங்கரனுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார்.

நாகை தொகுதி விசிக வேட்பாளர் ஆளூர் ஷானாவாஸ் திறந்தவெளி வாகனத்தில் ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பு

நாகப்பட்டினம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளூர் ஷானாவாஸ், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரித்தார். பெரிய கடைவீதி, அபிராமி திருவாசல், புதுத்தெரு, யாகுசன் பள்ளி தெரு, செம்மரக் கடைத்தெரு, ஊசி மாதா கோயில் தெரு என நகரின் முக்கியப் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார்.

வேடசந்தூர் திமுக வேட்பாளர் காந்திராஜனை ஆதரித்து திண்டுக்கல் லியோனி தேர்தல் பிரச்சாரம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக வேட்பாளர் காந்திராஜனை ஆதரித்து, கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரும் பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி வாக்கு சேகரித்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்குப் பேருந்து பயணம் இலவசம் என்ற அறிவிப்பை சுட்டிக்காட்டி, நகைச்சுவையாகப் பேசிய லியோனி, மற்ற வாக்குறுதிகள் குறித்தும் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.

இடது காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை: ஊன்றுகோலுடன் சென்று கமல் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்குத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரும் அக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கல்லுக்குழி பகுதியிலுள்ள மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதாகக் கூறுகின்றனர். இந்த நிலையில் அங்கு சென்ற கமல்ஹாசன், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அண்மையில் அவரது இடது காலில் அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், ஊன்று கோலுடனேயே கமல் அங்கு வருகை தந்தார்.

திருத்தணி தொகுதி திமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டி, திருத்தணி மலையில் முட்டிபோட்டு படியேறிய திமுகவினர்

திருத்தணி தொகுதி திமுக வேட்பாளர் சந்திரன் வெற்றி பெற வேண்டி, திருத்தணி மலை அடிவாரத்திலிருந்து முட்டிப்போட்டு படியேறி திமுகவினர் வழிபாடு நடத்தினர். திருத்தணி மலையின் அடிவாரத்திலிருந்து மலை மேல் உள்ள கோயில் வரை 365 படிகளிலும் திமுக தொண்டர்கள் 9 பேர் முட்டி போட்டு படிக்கட்டில் ஏறி வேண்டிக்கொண்டனர்.

தருமபுரி திமுக வேட்பாளர் தடங்கம் சுப்பிரமணி இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரிப்பு

தருமபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தடங்கம் சுப்பிரமணி இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்தார். தருமபுரி நகர் வார்டு 20 மற்றும் 21 பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அப்பகுதி இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடியவாறு அவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

மு.க.ஸ்டாலினைப் போல் வேடம் அணிந்தவருடன் சென்று மல்லை சத்யா தேர்தல் பிரச்சாரம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுகவின் மாநில துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‍.திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப் போல் வேடம் அணிந்தவருடன் சென்று, மசூதியில் தொழுகை நடத்த வந்தவர்களிடம் அவர் ஆதரவு திரட்டினார்.

வந்தவாசி திமுக வேட்பாளர் அம்பேத்குமார் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அம்பேத்குமார் இருச்சக்கர வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வந்தவாசியை அடுத்த ஓசூர், நெல்லியாங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் வீதி வீதியாக இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று அவர் வாக்கு சேகரித்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பு

மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜூ,தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‍.பெத்தானியாபுரம் பகுதியில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் வீதி வீதியாக நடந்து சென்றும்,வாகனத்தில் சென்றும் அவர் பரப்புரை மேற்கொண்டார்‍. கடைக்காரர்கள், வாகனஓட்டிகள் உள்ளிட்டோரிடம் ஆதரவு திரட்டிய அவர், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்,இத்தொகுதியில் தான் நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட்டும் பிரச்சாரம் செய்தார்‍.

உத்திரமேரூரில் சமக வேட்பாளர் சூசையப்பரை ஆதரித்து நடிகை ராதிகா சரத்குமார் தேர்தல் பிரச்சாரம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் சூசையப்பரை ஆதரித்து அக்கட்சியின் மகளிரணி செயலாளர் ராதிகா சரத்குமார் வாக்கு சேகரித்தார். தொகுதிக்குட்பட்ட மிலிட்டரி ரோட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்கு செலுத்துவதற்கு முன்பு சிறிது நேரம் யோசித்து நமது வளர்ச்சிக்காக வாக்களிக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

கோவையை மீடியா மையமாக மாற்றுவேன் -கமல்ஹாசன் வாக்குறுதி

அரசியல்வாதிகள் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக செயல்பட உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்‍. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அவர், தொகுதிக்குட்பட்ட, டவுன் ஹால், மரக்கடை பகுதி, அசோக்நகர்,காந்திபார்க் உள்ளிட்ட இடங்களில் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டார் . இத்தொகுதியின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை, வெற்றி பெற்ற 100 நாட்களில் நிறைவேற்ற உள்ளதாக உறுதியளித்து கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments