பறக்கும் படையால் கோடியை தெருவில் வீசிச்சென்ற கேடிகள்..! வெளியே வந்த பூனைக் குட்டி

0 8284
பறக்கும் படையால் கோடியை தெருவில் வீசிச்சென்ற கேடிகள்..! வெளியே வந்த பூனைக் குட்டி

திருச்சி மாவட்டம் முசிறி தொகுதி அதிமுகவினர் வாகனத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்ததாக தேர்தல் பறக்கும் படையினர் அறிவித்த நிலையில், 3 கோடி ரூபாயை பறித்துச் சென்ற கொள்ளையர்கள் காருடன் விட்டுச்சென்ற பணத்தை எடுத்து வைத்து பறிமுதல் நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருச்சியை அடுத்த பெட்டவாய்த்தலையில் கடந்த மாதம் 23 ம் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் முசிறி அதிமுக எம்.எல்.ஏவும் அதிமுக வேட்பாளருமான செல்வராசு மகன் ராமமூர்த்திக்கு சொந்தமான காரில் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரவிச்சந்திரன், சத்யராஜ், ஜெயசீலன், சிவகுமார் ஆகியோர் தங்களுக்கும்
பணத்திற்கும் தொடர்பில்லை என எழுதி கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டதாகவும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து வருமான வரித் துறையினர் நடத்திய விரிவான விசாரணையில், கீழே கிடந்து எடுத்த பணம் என்றும் யாரும் உரிமை கோராத பணம் எனவும் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்திருப்பது தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, எஸ்பி ராஜன் ஆகியோரின் தலையீட்டின் பேரில் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்திற்கு உரிய நேரத்தில் சரியான தகவல் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

புதிய கலெக்டராக நியமிக்கப்பட்ட திவ்யதர்ஷினி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட மயில்வாகனன் ஆகியோரின் நேரடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கோயம்புத்தூரிலிருந்து முசிறி எம்.எல்.ஏ செல்வராசுக்கு தேர்தல் செலவுக்கு 3 கோடி ரூபாய் கொண்டு செல்லப்படும் தகவல் அதிமுக பிரமுகர் ஒருவர் மூலம் பிரபல ரவுடி ஒருவருக்கு கிடைத்துள்ளது.

இதையடுத்து அவரது தூண்டுதலின் பேரில் ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த திலீப்குமார், சுரேஷ், ராஜ்குமார், சிவா மணிகண்டன், பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து அந்த வாகனத்துடன் 3 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

கொள்ளையர்களை மடக்க தேர்தல் பறக்கும் படை என்ற பெயரில் காவல்துறையினரை பயன்படுத்தி உள்ளனர்.

வாகன சோதனையில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக ஒரு மூட்டையில் இருந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை மட்டும் எம்.எல்.ஏவின் மகன் ராமமூர்த்தியின் காரில் விட்டு விட்டு கொள்ளையர்கள் வேறு காரில் 2 கோடி ரூபாயுடன் தப்பியுள்ளனர்.

3 கோடி ரூபாய்க்கு முறையான கணக்கு இல்லாததால், இந்த கொள்ளை சம்பவத்தை மறைத்து, தேர்தல் சோதனை நாடகமாடியது வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து கொள்ளை சம்பவம் தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, 6 கொள்ளையர்களையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை. கொள்ளையர்களை ஏவிய அந்த பிரபல ரவுடியை ரகசியமாக தேடிவருகின்றனர்.

லால்குடி குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்ட 6 பேரையும் முசிறி கிளைச் சிறைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது செய்தியாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து விடக்கூடாது என்பதற்காக ஜீயபுரம் காவலர்கள் கொள்ளை சம்பவத்தில் கைதான 6 பேரையும், வீடியோ எடுத்திடாத வகையில் நீதிமன்ற வளாக லிப்ட் அருகே வேனைக் கொண்டு வந்து ஏற்றிச் சென்றனர்.

அதே நேரத்தில் 5 வருடங்களாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்குள்ளான, சில அரசு அதிகாரிகள், தேர்தல் பணிகளுக்கான அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட பின் நேர்மையாக நடந்து கொள்வார்கள் என்று தேர்தல் ஆணையம் அவர்களை எப்படி நம்புகின்றது என்பதே சாமானியர்களின் கேள்வியாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments