நான் மேயராக இருந்தபோது 135 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது - மு.க.ஸ்டாலின்
மாநகராட்சிகள் சார்பில் மேம்பாலங்கள் கட்டப்பட்டதாக வரலாறு இல்லை என்றும், தாம் மேயராக இருந்தபோதுதான் சென்னையில் 9 பாலங்கள் கட்டப்பட்டதாகவும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர், ஆயிரம்விளக்கு, தியாகராயநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். மயிலாப்பூரில் பேசிய அவர், சென்னை மாநகராட்சி மேயராக தாம் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்தார். 135 கிலோ மீட்டருக்கு புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டதாகவும், 9 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியதாகவும், அதையடுத்து தமிழக அரசு 1,000 ரூபாய் வழங்கியதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நவம்பர் மாதம் வரை ரேசன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்க தமிழக அரசு முதலில் மறுத்ததாகவும், பின்னர் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
சென்னையில் பாதாள சாக்கடை வசதி இல்லாத அனைத்துப் பகுதிகளிலும் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். மேலும் சென்னைப் பெருநகரில் ரயில்வே பாதைகள் குறுக்கிடும் இடங்களிலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், தேவையான இடங்கள் அனைத்திலும் மேம்பாலங்கள் கட்டப்படும் என்றும் மு.க. ஸ்டாலின் உறுதி கூறினார்.
சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்றும், சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சாலையோரம் உள்ள கடைகளுக்கு மாற்றாக அரசு வணிக வளாகங்கள் கட்டித் தரப்படும் என்றும் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.
Comments