ஒரே ஒரு குருக்கள் வர்ரார்.. சுயேட்சை டெக்னிக்..!
தூத்துக்குடியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர், லேகியம் விற்பவர் போல முச்சந்தியில் நின்று தன்னந்தனியாக வாக்கு சேகரித்த நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் ஓட்டுப்போட வேண்டாம் என்று பாரதீய ஜனதா கட்சியினர், பெண்களின் கால்களில் விழுந்து மேற்கொண்ட பிரச்சாரத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
உச்சி வெயிலில் லேகிய வியாபாரி போல முச்சந்தியில் நின்று மைக்கை கையில் பிடித்துக் கொண்டு ஓங்கி குரல் கொடுக்கும் இவர் தூத்துக்குடி தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கியுள்ள சிவனேஸ்வரன்..!
தான் 10 படங்களில் நடித்து சிலரது முகத்தில் குத்து விட்டிருந்தால், தன்னை க்ரீன் ஸ்டார், யெல்லோ ஸ்டார் என பார்ப்பதற்கு 4 பேர் கூடியிருப்பார்கள் என்று ஆதங்கப்பட்டார் சிவனேஸ்வரன்..!
தான் வெற்றி பெற்றால் அலுவலகத்திற்கு செல்வது போல தினமும் காலை முதல் மாலை வரை தனியார் நிறுவன ஊழியர் போல மக்கள் பணியாற்றுவதாகவும் வாக்குறுதி அளித்த சிவனேஸ்வரன், மட்டக்கடை பகுதியில் நின்றிருந்தவர்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு சேகரித்தார்
பட்டபகலில் ஓட்டுபோடச்சொல்லி சுயேட்சை ஒருவர் உரக்க கத்திக் கொண்டிருக்க, ஸ்ரீவைகுண்டத்தில் இரவு நேர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சியினர் இந்து விரோத சக்திகளுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூறி வீடு வீடாக சென்று பெண்களின் காலில் விழுந்து பதறவைத்தனர்
ஸ்ரீவை குண்டம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜுக்கு எதிராக இந்த வேலையில் பா.ஜ.கவினர் இறங்கியுள்ளனர்.
Comments