தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பகல் நேரத்தில் அனல் காற்று வீசும் - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பகல் நேரத்தில் அனல் காற்று வீசும் என்பதால் நண்பகலில் தேர்தல் பிரசாரம் ஊர்வலத்தை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீசுவதால் வருகிற 4 ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும், பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் வரை உயரக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
வருகிற 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் 7 டிகிரி பாரன்ஹீட் வரை உயரக்கூடுமென கூறப்பட்டுள்ளது.
இதே போல கரூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் 9 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் உயரக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பகல் 12 மணி முதல் 4 மணி வரை திறந்த வெளியில் தேர்தல் பிரசாரம், ஊர்வலம் மற்றும் பணி செய்வதை தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
Comments