நெருங்கும் தேர்தல்… வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்..!
தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் அனைத்து கட்சியினரும், வேட்பாளர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பு
கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரித்த அவர், கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அதிமுக சிறப்பான திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக கூறினார்.
நடிகை நமீதா ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் குப்புராமை ஆதரித்து பிரச்சாரம்
ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் குப்புராமை ஆதரித்து ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் நடிகை நமீதா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தேவர் சிலை அருகே வணக்கம் மச்சான்ஸ் எனக் கூறி பிரச்சாரத்தை தொடங்கிய நமீதா, தாமரை சின்னத்துக்கு வாக்களித்தால் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவித்தார்.
இசைக்கருவியை கழுத்தில் கட்டியவாறு வாக்கு திரட்டிய சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பாமக வேட்பாளர் கஸாலி
சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பாமக வேட்பாளர் கஸாலி, பொதுமக்களை கவர தண்டோரோ போட்டு வாக்கு சேகரித்தார். டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ஐஸ் ஹவுஸ், நடேசன் சாலை உள்ளிட்ட இடங்களில் துண்டு பிரசுரங்களை வழங்கி அவர் ஆதரவு திரட்டினார். அப்போது டிரம்ஸ் இசைக்கருவியை கழுத்தில் மாட்டிக்கொண்டு தண்டோரா போட்டு தன்னை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களை விளக்கி அவர் வாக்கு சேகரித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி உறுதி
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ பெரியசாமி, தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். ஸ்ரீராமபுரம் பேரூராட்சி, வெள்ளை மரத்து பட்டி, போலியம்மனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்தவெளி வாகனத்தில் சென்ற அவர், திமுகவின் தேர்தல் வாக்குறுதியை எடுத்துரைத்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்தார்.
வீடு வீடாக சென்று வாக்காளர்களின் காலி விழுந்து வாக்கு சேகரித்த திருவிடைமருதூர் திமுக வேட்பாளர் கோவி செழியன்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி திமுக வேட்பாளர் கோவி செழியன், வீடு வீடாக சென்று வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்குசேகரித்தார். திருபுவனம் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர் வீடுகளுக்கு சென்ற அவர், பட்டு நெய்து வாக்கு திரட்டினார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கைத்தறி நெசவாளர்களுக்கு ஜவளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவி செழியன் வாக்குறுதி அளித்தார்.
பெட்ரோல் பங்கில் பொதுமக்களுக்கு பெட்ரோல் நிரப்பி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் எழிலரசன்
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எழிலரசன், பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் நிரப்பி வாக்கு சேகரித்தார். தொகுதிக்குட்பட்ட முருகன் நகர், வரதராஜன் குடியிருப்பு, பவானி நகர் பள்ளத் தெரு, மேட்டுத் தெரு, நடுத்தெரு ஆகிய 15க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என உறுதியளித்தார்.
கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த்தை பிரச்சாரத்திற்கு எந்த பக்கம் அழைத்துச் செல்வது என காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே வாக்குவாதம்
கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த்தை எந்த பக்கம் பிரச்சாரத்திற்கு அழைத்து செல்வது என அக்கட்சியின் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்சார ஊர்வலம் சுசீந்திரம் பாலம் அருகே வரும் போது விஜய் வசந்தை எந்த பக்கம் அழைத்துச் செல்வது என இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், பிரச்சார வாகனத்தை எடுக்கவிடாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி வைத்த காங்கிரஸ் நிர்வாகிகளை, விஜய் வசந்த் பேசி சமாதானப்படுத்தினார்.
கொரோனா பாதிப்புக்குள்ளான குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் : உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவாக அவரது மகன் கதிரவன் தேர்தல் பிரச்சாரம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அவரது மகன் கதிரவன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக அவரது மகன் கதிரவன், குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
சைக்கிள் ரிக் ஷாவில் அமர்ந்து வீதி வீதியாக சென்று ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பு
சென்னை ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் சைக்கிள் ரிக் ஷாவில் அமர்ந்து வீதிவீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, அங்குள்ள பெரிய பாளையத்தம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய அமைச்சர் ஜெயக்குமார், குழந்தை ஒன்றுக்கு ராமசந்திரன் என பெயர் சூட்டினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசா மீது திமுக நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
காங்கேயம் தொகுதி திமுக வேட்பாளர் சாமிநாதனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் காங்கேயம் தொகுதி திமுக வேட்பாளர் சாமிநாதனை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
தான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானால் மத்திய அரசிடம் இருந்து நேரடியாக கேட்டு அனைத்து அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன் - பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலை
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோட்டப்பட்டி விராலிப்பட்டி, கருப்பபிள்ளை புதூர், வெங்கடாபுரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், இந்த தேர்தலில் அனைவரும் மாற்றத்திற்கான வாக்காக தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானால் மத்திய அரசிடம் இருந்து நேரடியாக கேட்டு அனைத்து அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன் என்றார்.
ஆரணி சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு
ஆரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். தச்சூர் சாலை, காந்திநகர், பாரதியார் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அதிமுக மற்றும் பாமக, பாஜக ஆதரவாளர்களுடன் திரண்டு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், அதிமுக வாக்குறுதிகளையும் மக்களிடையே எடுத்துரைத்தார்.
அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பு
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி வேட்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்த அவர், போடிநாயக்கனூர் தொகுதியில் எஞ்சிய பணிகளும் தேர்தல் முடிந்த பிறகு நிறைவேற்றப்படும் என்றார்.
டீக்கடையில் டீக்குடித்து பொதுமக்களிடம் வாக்குசேகரித்த திருவெறும்பூர் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரச்சாரம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திறந்தவெளி வாகனத்தில் சென்றும், வீதி வீதியாக நடந்து சென்றும் பிரச்சாரம் மேற்கொண்டார். பழங்கனாங்குடி, பூலாங்குடி காலனி, நரிக்குறவர் காலனி, துப்பாக்கி நகர், உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்த அவர், உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். பிரச்சாரத்திற்கிடையே பூலாங்குடிகாலனியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீக்குடித்த அன்பில் மகேஷ், அங்குவந்த மக்களிடம் வாக்குசேகரித்தார்.
சென்னை சைதாப்பேட்டை அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி மலர் மழையில் நனைந்தவாறு வீதி வீதியாக பிரச்சாரம்
சென்னை சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி, மலர் மழையில் நனைந்தவாறு வாக்குசேகரித்தார். ஜோதியம்மாள் நகர், நெருப்பு மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்ற அவர், இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
ஆயிரம் விளக்கு தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக வேட்பாளர் குஷ்பு
சென்னை ஆயிரம்விளக்கில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பூ கிரியப்பா சாலை, தாமஸ் சாலை, குடிசை மாற்று வாரியப் பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆதரவு திரட்டினார். அதன்பின்னர் ஆயிரம் விளக்கு தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயிரம் விளக்கு தொகுதி தங்களது கோட்டை என்று சொல்லக்கூடிய திமுகவினர் அங்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கூட தீர்க்கவில்லை என குற்றம் சாட்டினார்.
விழுப்புரம் அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தெரு தெருவாக சென்று வாக்கு சேகரிப்பு
விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சி.வி.சண்முகம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். விழுப்புரம் நகரில் உள்ள ஜி.ஆர்.பி. தெரு, வழுதரெட்டி, அருந்ததியர் தெரு, நந்தனர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக அரசு செய்த நலத்திட்டங்களை எடுத்துக்கூறியும், தேர்தல் அறிக்கைகளை விளக்கி கூறியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வேளச்சேரியில் காங்.வேட்பாளர் அசன் மவுலானா வாக்குப் பதிவு இயந்திர மாதிரியை கையில் வைத்துக் கொண்டு வாக்கு சேகரிப்பு
சென்னை வேளச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா வாக்குப்பதிவு இயந்திர மாதிரியை கையில் வைத்துக் கொண்டவாறு தமக்கு ஆதரவு திரட்டினார். இந்திரா நகர், சாஸ்திரி நகர் உள்ளிட்ட தொகுதியின் மையப்பகுதிகளில் வீதி வீதியாக சென்று அவர் வாக்கு சேகரித்தார். வாக்குப் பதிவு இயந்திரத்தில் தமது பெயர்தான் முதலில் உள்ளது எனவும், கை சின்னத்தில் வாக்களிக்குமாறும் அவர் பிரச்சாரம் செய்தார்.
பெண்கள் சிறு தொழில் செய்வதற்கு வங்கி கடன் வழங்கப்படும் : பொள்ளாச்சி திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜன்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜன், வீதி வீதியாக நடந்து சென்று வாக்குசேகரித்தார். அன்னபூரணி லே-அவுட், பத்ரகாளி அம்மன் கோவில் வீதி, அமைதி காலனி உள்ளிட்ட பகுதிகளில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு திரட்டினார். பத்ரகாளியம்மன் கோவில் வீதியிலுள்ள பின்னலாடை நிறுவனத்துக்கு சென்று அங்கு பணிபுரியும் பெண்களை சந்தித்த அவர், பெண்கள் சிறு தொழில் செய்வதற்கு எளிய முறையில் வங்கி கடன் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
தேர்தல் செலவுக்கு வைத்துக்கொள்ளும்படி வேட்பாளருக்கு பணம் கொடுத்த முதியவர்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா, அணைப்பட்டி, கோட்டூர், ஆவாரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வாக்கு திரட்டினார் பாப்பனம்பட்டிக்கு வாக்குசேகரிக்க சென்ற திலகபாமாவுக்கு, அப்பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்ற முதியவர் தன் கையில் இருந்த நூறு ரூபாயை வழங்கி பிரச்சார செலவுக்கு வைத்துக்கொள்ளுமாறு கூறினார். இதனை சற்றும் எதிர்பார்த்திடாத திலகபாமா கண்கலங்கியதுடன், வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வரும் சூழலில், இந்த முதியவர் தனக்கு வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.
ராமநாதபுரம், முதுகுளத்தூர் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பனை ஆதரித்து திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் முதல்வர் ஆனால் 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்த படும் என்றும் பேரூராட்சிகளிலும் அந்த திட்டம் செயல்படுத்த படும் என்றும் உறுதி அளித்தார். எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்க படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக திருப்புல்லாணி பகுதியில் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் ஆதரித்தும் கனிமொழி பிரச்சாரம் செய்தார்.
குடியாத்தம் திமுக வேட்பாளரிடம் தேர்தல் வாக்குறுதிக்கு விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்த இளைஞர்கள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் திமுக வேட்பாளர் அமலு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு விளக்கம் கேட்டு இளைஞர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ராமச்சந்திராபுரம் பகுதியில் அமலு வாக்கு சேகரித்த போது அவரை வழிமறித்த இளைஞர்கள், கலப்பு திருமணத்திற்கு ஊக்கத்தொகையாக 60 ஆயிரம் ரூபாயும் 1 சவரன் தங்க நகையும் வழங்கப்படுவதாக திமுக அறிவித்துள்ள வாக்குறுதிக்கு விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் இளைஞர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனிடையே கைது செய்த இளைஞர்களை விடுவிக்க கோரி ஒரு பெண் பிரச்சார வாகனத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் கதிரவன், தாடையம்பட்டி, உலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார். தொண்டர்களுடன் வீதி வீதியாகச் சென்று, திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் திண்டுக்கல் - பழனி சாலையில் நடந்து சென்று ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் சக்கரபாணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டினார். கடை உரிமையாளர்கள், பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி பிரச்சாரம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி பிரச்சாரம் மேற்கொண்டார். அங்குள்ள கோயிலில் வழிபாடு நடத்திய அவர், வாகனத்திலும், நடந்து சென்றும் வாக்கு சேகரித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பழனி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வல்லக்கோட்டை, மாத்தூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்த அவர், அதிமுக அரசு செய்துள்ள நலத்திட்டங்கள் குறித்து விளக்கி கூறி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்தோஷுக்கு ஆதரவாக நடிகை விந்தியா வாக்கு சேகரித்தார். தற்போது 29 வயதாகும் சந்தோஷ் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடிப்பதாகத் தெரிவித்த விந்தியா, அவர் வெற்றி பெற்றால் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து நலத்திட்டங்களும் ஒவ்வொன்றாக வீடு தேடி வரும் என்றார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தூசி மோகன் நகர் பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக்கடன் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட மேல்பாலை,மருதங்கோடு, பரகுன்று உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அவர், அங்குள்ள ஒரு மளிகை கடைக்கு சென்று விலைவாசியை கேட்டறிந்தார். பிரச்சாரத்தின் போது ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சிய விஜயதாரணி, அந்த குழந்தைக்கு காங்கிரஸ் கட்சியின் துண்டை அணிவித்து காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டதாக கூறினார்.
சென்னை திருவிக நகர் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கல்யாணி, வீதி வீதியாக நடந்து சென்று வாக்குசேகரித்தார். பட்டாளம் பகுதியில் உள்ள அப்பாசாமி தெரு, பரசுராமன் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை சந்தித்த அவர், வயதானவர்களின் காலில் விழுந்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜோதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செய்யாறு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி ஆதரவாளர்களுடன் சென்று மக்களை சந்தித்த அவர் திமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குனியமுத்தூர், நரசிம்மபுரம், எஸ்.எஸ் கார்னர் உள்ளிட்ட பகுதிகளில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் நடந்து சென்றும், வாகனத்தில் சென்றும், எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரித்தார். குனியமுத்தூர் இடையார்பாளையம் பகுதியில், சிலம்ப கலையை முறைப்படி பயின்றுள்ள சிறுவர்கள், இளையோர் சிலம்பாட்டம் ஆடி எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
புதுச்சேரி ஊசுடு தொகுதிக்கு உட்பட்ட கூடப்பாக்கம் கிராமத்தில் பாஜக வேட்பாளர் சாய் சரவணன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அவரைப்போலவே மண்ணாடிபட்டு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் நமசிவாயம் சுத்துக்கேணி கிராமத்தில் வாக்கு சேகரித்தார். இந்திரா நகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கண்ணன் டீக்கடையில் வாடிக்கையாளர்களுக்கு டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
செங்கல்பட்டு திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன், திறந்த வாகனத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கூடுவாஞ்சேரி பகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீதி, வீதியாக சென்று ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர், தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் அடங்கிய துண்டு பிகரங்களை விநியோகித்து, ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, பீர்க்கன்காரணை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். தொண்டர்களுடன் வீதி வீதியாகச் சென்று அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து அவர் வாக்கு சேகரித்தார்.
திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இலுப்பூர், போலிவாக்கம், வலசைவெட்டிகடு புது கண்டிகை, ஆத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா நிவாரணமாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 4ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றார். மேலும், குடும்பதலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை உயர்வு உள்ளிட்ட திமுகவின் வாக்குறுதிகளை பட்டியலிட்டும் வி.ஜி.ராஜேந்திரன் வாக்கு சேகரித்தார்.
காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச் ராஜா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டணி கட்சியினருடன் இணைந்து VAO காலனி, தாசில்தார் நகர், பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் மத்திய மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் காரப்பட்டு கிராமத்திலுள்ள ஜாமியா மஸ்ஜிதில் இஸ்லாமியர்களை சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து வாக்கு சேகரித்தார்.அதிமுகவின் தேர்தல் அறிக்கைகளை எடுத்து கூறி அவர் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார், காரப்பட்டு பேருந்து நிலையம் அருகே உள்ள கரும்பு ஜூஸ் கடையில் தானே தன் கையால் கரும்பு எடுத்து ஜூஸ் போட்டு அனைவருக்கும் கொடுத்து பன்னீர்செல்வம் வாக்கு கேட்டார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் கணேசராஜா, வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். மேல புத்தநேரி, கீழ புத்தநேரி, அரியகுளம், மேல குளம்,வேலங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற அவர், அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல் வகாப், வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். மேலப்பாளையம், கொட்டி பஜார், அண்ணா வீதி, சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆதரவாளர்களுடன் சென்ற அவர், திமுக தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து உதயசூரியனுக்கு ஆதரவு திரட்டினார்.
சென்னை R.K. நகர் அதிமுக வேட்பாளர் R.S. ராஜேஷ், ஆட்டம் பாட்டத்துடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாகூரார் தோட்டம், புது வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக நடந்து சென்று, வீடு, வீடாக அதிமுக வேட்பாளர் ஆதரவு திரட்டினார். பிரசாரத்தின்போது, இளம்பெண்கள் வற்புறுத்தியதால், உற்சாகத்தில் அதிமுக வேட்பாளர் R.S. ராஜேஷ், நடனம் ஆடி, ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அழகாபுரி, அண்ணாநகர், மாலையாபுரம், தென்றல்நகர், திருவள்ளுவர் நகர், தாட்கோ காலனி உள்ளிட்ட இடங்களில், மக்களை திரட்டி, ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார். அண்ணாநகர் பகுதியில், வாக்கு சேகரிப்பின்போது, புதுமண தம்பதியர், ராஜேந்திர பாலாஜியிடம் ஆசி பெற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.பி மரகதம் குமரவேல் அச்சரபாக்கத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பெண்களின் பணிச்சுமையை குறைக்க வாஷிங்மெஷின், வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள், என பெண்களுக்கு அதிகம் பயன் தரக் கூடியத் திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாதவரம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் சுதர்சனம், பாடியநல்லூர் பகுதியில் திறந்த வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இந்தப் பகுதியில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து பேருந்து நிறுத்தம், சாலை வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துள்ளதால் தமக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் அப்போது கேட்டுக் கொண்டார்.
ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் கூட்டணி கட்சி ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட சங்கு நகர்,சித்தாந்தம் காலனி, பழையபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற அவர், அதிமுக தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வாக்காளர்களிடம் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் துரை.சந்திரசேகரை ஆதரித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு பிரச்சாரம் செய்தார். மீஞ்சூரில், திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், காங்கிரசும், திமுகவும், ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் காக்கும் இயக்கங்கள் என கூறி, கை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
சென்னை அம்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜோசப் சாமுவேலை ஆதரித்து, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அம்பத்தூர் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு கொரோனா பெருந்தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகிறார். அவரால் பிரச்சாரம் செய்ய முடியாததால், முகப்பேர், ஜெ.ஜெ.நகர், பாடிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அம்பத்தூர் திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கே.சி.வீரமணி, மேட்டுசக்கரகுப்பம், வக்கணம்பட்டி, புதூர், சோலையூர் உள்ளிட்ட நகர பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார் என பிரதமர் மோடியே பாராட்டு தெரிவித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சேலம் தெற்கு தொகுதியில் களமிறங்கி உள்ள அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் வாக்கு சேகரித்தார். மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து பிரசாரத்தை துவக்கிய வேட்பாளர், முக்கிய வீதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று, ஆதரவு திரட்டினார். தங்கள் ஆட்சி நீடித்தால், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என அவர் உறுதி அளித்தார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சபா.ராஜேந்திரனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய திருமாவளவன் திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரனை 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பண்ணாரி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு தொண்டர்களுடன் வீதி வீதியாக சென்ற அவர் அதிமுக வாக்குறுதிகளை கூறி இரட்டை இலைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மதிவேந்தன், வெண்ணந்தூருக்கு உட்பட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார். திமுக ஆட்சி அமைத்ததும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பியில் போட்டியிடும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், நகர பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று அவர் ஆதரவு திரட்டினார்.
பல்லடத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் முத்துரத்தினத்தை ஆதரித்து, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். பல்லடம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பரப்புரையில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கூறியும், பொதுமக்களோடு கலந்துரையாடல் நிகழ்த்தியும் வாக்கு கோரினார்.
திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், வீதி வீதியாக நடந்து சென்றும், திறந்தவெளி வாகனத்தில் சென்றும் வாக்குசேகரித்தார். மானூர், எட்டான்குளம், கீழ பிள்ளையார் குளம், மேல பிள்ளையார் குளம், வல்லவன் கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அச்சிறுப்பாக்கம் பகுதியில் இரு சக்கர வாகனங்களில் கூட்டணி கட்சி தொண்டர்கள் முன்னேசெல்ல, திறந்த ஜீப்பில் வாக்கு சேகரித்த மல்லை சத்யா,ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு தருமாறு, வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம்
நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழில் வணக்கம் சொல்லி பிரச்சாரத்தை தொடங்கிய அவர், உதகையை சர்வதேச சுற்றுலா தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், தேயிலைக்கு குறைந்தபட்சம் 30 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்படும் என்றார். இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழியான தமிழ் மொழியில் பேச முடியாததை நினைத்து வருந்துவதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
மதுரை திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தக்காளி பறித்து கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட பெருமாள்பட்டி, செட்டிகுளம், கரடிக்கல், குன்னம்பட்டி, கிண்ணிமங்கலம், செக்கானூரணி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், தமது மகளுடன் சென்று, ஆர்.பி.உதயகுமார் வாக்கு கோரினார்.கரடிக்கல் பகுதியில் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து, தக்காளி பழங்களை பறித்து கொடுத்து வாக்கு கோரிய ஆர்.பி.உதயகுமார், அருள்மிகு கரும்பாறை முத்தையா திருக்கோவிலில் வழிபாடு நடத்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அதிமுக வேட்பாளர் அய்யப்பன் கிராமம், கிராமமாக சென்று, ஆதரவு திரட்டினார். தேர்தலில் வெற்றி பெற வேண்டி, நடுமுதலைக்குளம் என்ற கிராமத்தில் கருப்ப சாமி கோவிலில் அவர் வழிபாடு செய்தார். அப்பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களை சந்தித்து, அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து, அதிமுக வேட்பராளர் அய்யப்பன் வாக்கு சேகரித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் அதிமுக சார்பில் நான்காவது முறையாக போட்டியிடும் எம்.எல்.ஏ. சு.ரவி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். புளியமங்கலம், ஸ்ரீராம் நகர், விண்டர்பேட்டை, கண்ணன் நகர், புதுபேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்த அவர், ராணிப்பேட்டையிலிருந்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் தனது முயற்சியினாலேயே அரக்கோணத்திற்கு மாற்றப்பட்டது எனக் கூறி வாக்குசேகரித்தார்.
பெண்களை, திமுக மதிப்பதில்லை என பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்ட குற்றச்சாட்டை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
K.S.அழகிரி மறுத்துள்ளார். மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், பெண்களை உயர் பதவியில் வைத்து, அழகு பார்த்தது காங்கிரஸ் கட்சி என்றார்.
மதுரவாயில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பெஞ்சமின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான பெஞ்சமின் தொகுதிக்குட்பட்ட ராமாபுரம், போரூர், லட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடையே கூறி அவர் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காப்பாரப்பட்டி, கண்ணமங்களபட்டி, மேல்மலைகுண்டு, விழுப்புனிக்களம், பாரதிநகர், அணைக்கரைப்பட்டி, கிருங்காக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். கிருங்காக்கோட்டையில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்ற மருது அழகுராஜ், அங்கிருந்த இஸ்லாமியர்களிடமும் வாக்கு சேகரித்தார்.
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முத்துராஜா தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட ராஜவீதி, கீழ ராஜவீதி, தெற்கு ராஜ வீதி, வடக்கு ராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் வீதி வீதியாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
டிடிவி தினகரன் பிரசாரம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி அமமுக வேட்பாளர் முருகனை ஆதரவாக டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். கமுதி பேருந்து நிலையம் அருகே, பேசிய அவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி நீடித்திருந்தால் நீட் தேர்வு வந்திருக்குமா எனக் கேள்வி எழுப்பினார். அங்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன், மே இரண்டாம் தேதிக்குள் வேறு கட்சிக்கு போனாலும் போய் விடுவார் என தினகரன் விமர்சித்தார்.
நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜோதிராமன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்கு உட்பட்ட குடவாசல், இரவாஞ்சேரி, விஷ்ணுபுரம், உள்ளிட்ட ஊர்களில் ஆதரவாளர்களுடன் சென்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர், டீக்கடையில் அமர்ந்து வாக்கு சேகரித்தார். அப்போது, முதிய தம்பதிக்கு மரியாதை செலுத்திய அவர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வைரமுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட நகரப்பட்டி, அம்மன் குறிச்சி, மறவா மதுரை, கல்லம்பட்டி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தான் வெற்றி பெற்றால் தமது மாத ஊதியத்தை ஏழை மாணவர்களின் கல்வி செலவுக்கு வழங்க உள்ளதாக அவர் வாக்குறுதி அளித்தார்.
அமைச்சர் காமராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் காமராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நன்னிலத்தில் 3வது முறையாக போட்டியிடும் அமைச்சர் காமராஜ், வலங்கைமான், கீழவிடையல், மேல விடையல், கருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் தொண்டர்களுடன் சென்று அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி கூறியும், அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்தும் இரட்டை இலைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
கடலூர் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் எம்.சி சம்பத்துக்கு ஆதரவாக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பெண்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதிமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி வீதி வீதியாகச் சென்று அவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கட்டி பூண்டி, செங்குணம், விலங்குப்பம், கல்வாசல் உள்ளிட்ட ஊர்களில் பிரசாரம் மேற்கொண்டார். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் பின்தொடர திறந்த வாகனத்தில் சென்றபடி அதிமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சென்னை - சைதாப்பேட்டை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் சினேகா மோகன்தாஸ்,. ஆட்டோ ஒட்டி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பேருந்து நிலையம் பகுதியில் ஆட்டோ ஓட்டிய அவர் தமக்கு ஆதரவு தருமாறு, கேட்டுக்கொண்டார்.
ஆண்களைப்போல, பெண்களாலும் அனைத்து துறைகளிலும் சாதித்க முடியும் என்பதை வாக்காளர்களுக்கு உணர்த்துவதற்காக ஆட்டோ ஓட்டி, பிரசாரத்தில் ஈடுபட்டதாக சினேகா மோகன்தாஸ் தெரிவித்தார்.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பள்ளம் பங்கு தந்தையிடம் ஆசி பெற்று பிரச்சாரத்தை தொடங்கிய அவர், கோவாளம், சங்குதுறை ,பள்ளம், அன்னை நகர் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது மீனவ மக்களிடம் பேசிய அவர், கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது என வாக்குறுதி அளித்தார்.
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சேத்துப்பட்டில் பிரசாரம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சேகரனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சேத்துப்பட்டில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது சாத்தியமில்லை என்றார். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊர்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். போடிமெட்டு, குரங்கணி, முதுவாக்குடி உள்ளிட்ட ஊர்களில் வசிக்கும் பழங்குடியின மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது பேசிய அவர், அதிமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்த பின்னர் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
அமைச்சர் செங்கோட்டையன் தீவிர தேர்தல் பிரச்சாரம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் செங்கோட்டையன் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட காந்திநகர், சீனிவாசாவீதி, பாரதிதாசன் வீதி, கம்பர் வீதி, மின்நகர், ஆஞ்சிநேயாநகர்,வேலுமணிநகர் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ரா திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனான இவர், தாம் வெற்றி பெற்றால் அப்பகுதி மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து ஈரோட்டின் பெருமையை மீட்டுத் தருவதாக வாக்குறுதி அளித்தார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ராமநாதபுரம் மருதூரில் தொடங்கி, சூரியன் வீதி, பாலாஜி நகர் வழியாக சுங்கம், திருச்சி சாலை ஆகிய பகுதிகளில், மகள் அக்சரா ஹாசனுடன் சென்ற கமல்ஹாசன், வாகனத்தில் இருந்தவாறு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ராமநாதபுரம் மருதூரில் தொடங்கி, சூரியன் வீதி, பாலாஜி நகர் வழியாக சுங்கம், திருச்சி சாலை ஆகிய பகுதிகளில், மகள் அக்சரா ஹாசனுடன் சென்ற கமல்ஹாசன், வாகனத்தில் இருந்தவாறு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார்.
வைகோ பிரச்சாரம்
மதுரை தெற்குத் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் பூமிநாதனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை முனிச்சாலை பகுதியில் திறந்தவேனில் பரப்புரை மேற்கொண்ட வைகோ, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார். முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு இரண்டு முறை மதுரையில் இருந்து நடைபயணம் சென்றதை நினைவுகூர்ந்த வைகோ, தூங்கா நகரமான மதுரை ஒரு தியாக சரித்திர பூமி என புகழாரம் சூட்டினார்.
தருமபுரி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடும் தடங்கம் சுப்பிரமணி, வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டார். திமுக ஆட்சிக்கு வந்தால், பஞ்சபள்ளி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, திமுக மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட காரப்பட்டு, பனைஓலைப்பாடி, முத்தனூர், முடியனூர், உண்ணாமலைபாளையம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக நடந்து சென்று திமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவு திரட்டினார்.
இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில், திமுக மகளிரணிச் செயலாளர் மு.க.கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என மு.க.கனிமொழி வாக்குறுதி அளித்தார்.
எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சம்பத்குமார் , டீ கடையில் டீ போட்டு கொடுத்து, நூதன முறையில் ஆதரவு திரட்டினார். நங்கவள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட கடை வீதி, பழக்காரனூர், கரட்டுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்த சம்பத்குமார், பின்னர், பேருந்து நிலையத்தில் ஒரு தேநீர் கடையில் வாக்கு சேகரித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நஜர் முகமது தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட வடசேரி, வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த அவர், அங்குள்ள டீ கடை ஒன்றில் டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஈஸ்வரப்பன் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட திமிரி பேரூராட்சியில் நரிக்குறவர் காலனியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த அவர், அங்குள்ள மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரவி மனோகரன் கொடைக்கானல் பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை,பழம்புத்தூர்,குண்டுபட்டி,கூக்கால் ,மன்னவனூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட பெரியகொல்லபட்டி, நீராவி பட்டி, அய்யம்பட்டி, சடையம்பட்டி, சத்திரப்பட்டி, மேட்டுப்பட்டி கண்மாய், சூரங்குடி, மேலப்புதூர், ஸ்ரீரங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சென்னை - ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் D. ஜெயக்குமார், மேளம் அடித்து, வாக்கு சேகரித்தார். காலையில் வாக்கு சேகரிக்க சென்ற அவர், துணி தேய்ப்பகத்திற்கு சென்று துணிகளை தேய்த்து கொடுத்து ஆதரவு திரட்டினார். மாலையில் ராயபுரம் பால் பூத் அருகே குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அவர் வாக்கு சேகரித்தார். அதிமுக பெண் நிர்வாகி ஒருவரின் மகள், ஜெயலலிதா போல வேடமிட்டு வந்து, அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சரோஜா தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ராசிபுரத்தை அடுத்த பல்லவநாயக்கம்பட்டி, பி. மேட்டூர், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அவர், தொகுதியில் வீடு இல்லாத அனைவருக்கும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இலவச வீடு கட்டித்தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், புள்ளம் பாக்கம், மலையாங்குளம், வெங்கசேரி உள்பட 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது புள்ளம் பாக்கம் கிராமத்தில், செடியில் இருந்து வேர்கடலைகளை பிரித்து கொண்டிருந்த விவசாயிகளுக்காக வேர்கடலையை அடித்துக் கொடுத்து அவர் வாக்கு சேகரித்தார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தமிழக - கேரள எல்லைப்பகுதியிலும், கடலோர கிராமங்களிலும் பொன் ராதாகிருஷ்ணன் ஆதரவு திரட்டியபோது, அவருடன் கிள்ளியூர் த.மா.கா வேட்பாளர் ஜூட் தேவ்வும் இணைந்து, வாக்கு சேகரித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் இராமதாஸ் பரப்புரை
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிடும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் இராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார். எடப்பாடி பேருந்து நிலையத்தில் பரப்புரை மேற்கொண்ட இராமதாஸ், இயல்பாகவே விவசாயியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைப்பார் எனக் கூறினார். அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை பட்டியலிட்டு பரப்புரை மேற்கொண்ட பாமக நிறுவனர் இராமதாஸ், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்ததும், அவையனைத்தும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார்.
வரும் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று அந்த கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி உறுதி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் தருணுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அவர் இதனை கூறினார். கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மாதம் 3 ஆம் தேதி, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ், அதிமுக, பாமக வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்டார். சங்கராபுரம் பாமக வேட்பாளர் டாக்டர் ராஜா, ரிஷிவந்தியம் அதிமுக வேட்பாளர் SKTC சந்தோஷ், விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட, அதிமுக, பாமக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, அன்புமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அரியணையில் அமர, விவசாயி என்ற ஒற்றை தகுதியே போதுமானது என்றுக்கூறி அன்புமணி இராமதாஸ் வாக்கு சேகரித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வாக்கு சேகரித்தார். விஜயகாந்தை காண அங்கு திரண்டிருந்த ஆண்களும், பெண்களும் அவரது திரைப்பட பாடல்களுக்கு உற்சாக நடனமாடினர். அங்கு வந்த விஜயகாந்த் வாகனத்தில் இருந்த படியே இரு கரங்களை உயர்த்தி காட்டியும், முரசு சின்னப் பதாகையை தூக்கிப் பிடித்தும் ஆதரவு திரட்டினார்.
Comments