அதிமுகவா? திமுகவா? ஓட்டுக்கு மல்லுக்கட்டும் விஜய் மக்கள் இயக்கம்..! திகிலில் திருச்செந்தூர்

0 5985

திருச்செந்தூரில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜய் மக்கள் இயக்கத்தினர் இரு பிரிவாக  நின்று தேர்தல் வேலை செய்து வரும் நிலையில், இரு தரப்பிலும் கொலை மிரட்டல் விடுத்துக் கொள்ளும் விபரீதம் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளராக கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணனும், திமுக சார்பில் தொடர்ந்து 20 வருடங்களாக எம்.எல்.ஏவாக உள்ள அனிதா ராதாகிருஷ்ணனும் வேட்பாளராக களம் இறங்கியுள்ளனர்.

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பில்லாஜெகன் மணப்பாட்டில் களப்பணியாற்றி வருகிறார். அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக திருச்செந்தூர் ஒன்றிய விஜய் மக்கள் இயக்க தலைவர் முத்துவேல் பாண்டி என்கிற குட்டி தனது ஆதரவாளர்களுடன் வீரபாண்டியன் பட்டினத்தில் களப்பணியாற்றி வருகிறார்.

அந்த தொகுதியில் இரு கட்சியின் வேட்பாளருக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், தனது கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக திருச்செந்தூர் ஒன்றிய விஜய் மக்கள் இயக்க தலைவரான குட்டியை, செல்போனில் அழைத்த பில்லா ஜெகன், அதிமுகவுக்கு வேலை செய்யக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகின்றது. அப்போது வருகிற 3 ந்தேதிக்குள் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணனின் கார் மீது லாரியை விட்டு மோதி கொல்லப்போவதாகவும், பாம் அடிக்க போவதாகவும் கூறி பில்லா ஜெகன் கடுமையாக மிரட்டியதாக திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் பில்லா ஜெகன் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி 506 (2) உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே தனது உறவினரான குட்டியை, பில்லா ஜெகன் மிரட்டிய தகவல் அறிந்து, பனங்காட்டு மக்கள் கழக தலைவர் சுபாஷ் பண்ணையார் , பில்லாஜெகனை செல்போனில் அழைத்து எச்சரித்ததாக கூறப்படுகின்றது.

அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட, சுபாஷ் பண்ணையார் மீது பில்லாஜெகன் தூத்துக்குடி காவல் கண்காளிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளியூர் ரவுடிகள் திருச்செந்தூர் தொகுதிக்குள் களமிறக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய வெங்கடேஷ்பண்ணையார் நற்பணி மன்றத்தினர் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர் தொகுதியில் புகுந்து சாதிய மோதலை தூண்டும் வகையில் செயல்படும், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பில்லாஜெகன், உமரி சங்கர், ரவி, தாடி தங்கம் உள்ளிட்டவர்களை அப்புறப்படுத்த கோரி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர்.

தென்மாவட்டத்தில் பதற்றமான தொகுதியாக மாறியுள்ள திருச்செந்தூர் தொகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்க கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments