அதிமுக-பாஜக கூட்டணி வளர்ச்சி கூட்டணி.! பிரதமர் மோடி பரப்புரை.!
அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, வளர்ச்சிக்கான கூட்டணி என்றும், இதனையே ஒற்றை நோக்கமாக கொண்டிருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை இராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் முருகன், கோயம்புத்தூர் தெற்கு தொகுதி வானதி சீனிவாசன், அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, உட்பட, அதிமுக-பாஜக கூட்டணியின் 13 வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொண்டார்.
வெற்றி வேல்.. வீர வேல்.. என்று கூறி, தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றுக்கு வந்திருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார்.
கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன், கொங்கு மண்டல மாமன்னரும், சுதந்திர போராட்ட வீரருமான தீரன் சின்னமலை, இவரது நம்பிக்கைக்குரிய போர்ப்படைத் தளபதி பொல்லான், 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாமனிதன் காலிங்கராயன் போன்றோரை கொடுத்த மண், இந்த கொங்கு மண்டல மண் என பிரதமர் புகழாரம் சூட்டினார்.
அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை வளர்ச்சி மட்டுமே தங்கள் நோக்கம் என்று கூறிய பிரதமர், ஆனால், காங்கிரஸ் மற்றும் திமுகவை பொறுத்தவரை வாரிசு அரசியல் தான் நோக்கம் என விமர்சித்தார்.
திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பெண்களை அவமதிப்பதை மக்கள் கவனித்து வருவதாக கூறிய பிரதமர், ஆ.ராசாவை 2ஜி ஏவுகணை என மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.
ஆண்டாள் மற்றும் ஔவையார் காட்டிய வழிப்படி நடப்பது தேசிய ஜனநாயக கூட்டணி என்று கூறிய பிரதமர் மோடி, பெண்களின் கண்ணியத்தை காக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.
கொங்கு பகுதி மக்கள், தொழில் முனைவோர் எப்போதும் நாட்டிற்கு செல்வத்தையும், மரியாதையையும் சேர்ப்பவர்கள் என்று குறிப்பிட்ட மோடி, நாட்டின் எல்லையை காக்கும் ஆயுத தளவாடங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுவதாக, புகழாரம் சூட்டினார்.
உலகம் முழுவதுக்குமான பொம்மை உற்பத்தி கேந்திரமாக தமிழ்நாட்டை மாற்ற திட்டம் உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், சுமார் எட்டு லட்சம் சிறுகுறு நிறுவனங்கள் மத்திய அரசின் கடன் வட்டி தள்ளுபடி திட்டத்தால் பலன் அடைந்துள்ளதாக கூறினார்.
Comments