அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்திக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் மேலும் ரூ.2 கோடி பறிமுதல்
அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்திக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் மேலும் 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 11 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கத்தை கைப்பற்றி வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்தியும் தொழிலதிபருமான டிஎன்சி இளங்கோவனுக்கு தருமபுரி மற்றும் ஓசூர் பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் உள்ளன. மேலும், டி.என்.சி. சிட்பண்ட் என்ற பெயரில் சென்னை, மதுரை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நிதி நிறுவனக் கிளைகள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் சம்பத்தோடு தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் சிலரது வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து டிஎன்சி இளங்கோவன் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சனிக்கிழமை வருமான வரி சோதனை தொடங்கியது.
சென்னை தியாகராயநகரில் டிஎன்சி சிட்பண்ட் கார்ப்பரேட் அலுவலகத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் முதல் நாளில் 6 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. டிஎன்சி நிதி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் மேலும் 3 கோடி ரூபாய் பணம் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மேலும் 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 நாள் ரெய்டில் கணக்கில் வராத ரொக்கமாக மொத்தம் 11 கோடி ரூபாயை பறிமுதல் செய்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments