இரவு பகலாக யாருக்கும் தெரியாமல் தோண்டப்பட்ட 50 அடி குழி ... புதையலை தேடிய மாணவர் உள்ளிட்ட 2 பேர் பலி!

0 77197
புதையல் எடுக்க தோண்டப்பட்ட குழி

நாசரேத்தில் புதையலுக்கு ஆசைப்பட்டு கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்து போனார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள திருவள்ளூர் காலனியை சேர்ந்த முத்தையா என்பவர் வீட்டின் பின்புறத்தில் புதையல் இருப்பதாக நம்பியுள்ளனர். முத்தையாவின் மகன்கள் சிவமாலை மற்றும் சிவவேலன் ஆகியோருடன் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ரகுபதி மற்றும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த நிர்மல் கணபதி ஆகியோர் புதையலை வெளியே எடுக்க திட்டமிட்டுள்ளனர். நிர்மல் கணபதி சென்னையிலுள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். புதையல் இருப்பதாக சொல்லப்பட்ட பகுதியில் பூஜைகள் நடத்தி பல நாள்களாக யாருக்கும் தெரியாமல் குழி தோண்டி வந்துள்ளனர். கடந்த 6 மாதங்களாக இரவு பகலாக பள்ளம் தோண்டியுள்ளனர்.  இந்த நிலையில்,கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த பகுதியில் மழை பெய்துள்ளது. இதனால், குழிக்குள் தண்ணீர் சேர்ந்துள்ளது. தண்ணீரை மோட்டார் வைத்து வெளியேற்றிய பிறகு நான்கு பேரும் மீண்டும் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்றும் குழி தோண்டியுள்ளனர். அப்போது, முத்தையாவின் உறவினர் பெண் ஒருவர் தண்ணீர் கொடுப்பதற்காக குழிக்குள் இறங்கியுள்ளார். குழிக்குள் சிவமாலை, சிவவேலன்,நிர்மல் கணபதி,ர குபதி ஆகியோர் மயங்கிக் கிடந்துள்ளனர். இதை பார்த்த அந்த பெண் அலறியபடி மேலே ஏறி வந்துள்ளார். பின்னர், அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து குழிக்குள் மயங்கிக்கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், ரகுபதியும் நிர்மல் கணபதியும் மருந்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர். சிவமாலை, சிவவேலன் ஆகியோர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். நாசரேத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஷ் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். புதையலுக்கு ஆசைப்பட்டு கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் இறந்தது நாசரேத் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments