இழந்த உரிமையை மீட்டெடுக்கும் நேரமிது.! அனைவரும் ஓரணியில் திரள மு.க.ஸ்டாலின் அழைப்பு

0 3304
இழந்த உரிமையை மீட்டெடுக்கும் நேரமிது.! அனைவரும் ஓரணியில் திரள மு.க.ஸ்டாலின் அழைப்பு

தமிழகமும், தமிழர்களும் இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்கான தேர்தல் இது என்ற குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சரம் உள்ளிட்டவற்றின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்றது. இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாலகிருஷ்ணன், கொங்கு நாடுமக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் ஒரே மேடையில் பங்கேற்றனர்.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, எடப்பாடி, சங்ககிரி, கெங்கவல்லி, ஓமலூர், ஏற்காடு, ஆத்தூர், வீரபாண்டி, மேட்டூர் ஆகிய தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த தேர்தலை ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலாக கருதாமல், இழந்த மாநில உரிமைகளை, சுயமரியாதையை மீட்டெடுக்குகின்ற, தமிழகத்தை காப்பாற்றுகிற தேர்தலாக கருத வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வர்தா, ஒக்கி, நிவர், புரவி புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின் போது தமிழகம் கேட்ட நிவாரண தொகையை மத்திய அரசு வழங்கவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். ஜி.எஸ்.டி நிலுவை தொகை, கொரோனா நிவாரண தொகை என எந்த நிதியுதவியும் மத்திய அரசு தமிழகத்திற்கு முழுமையாக வழங்கவில்லை எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த தமிழகம் போல் மற்ற மாநிலங்களிலும் பலமான கூட்டணியை அமைக்க வேண்டும் என மேடையில் ராகுல் காந்திக்கு வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம், பல்லடம், கோபிசெட்டிபாளையம், பவானி, அந்தியூர், பவானிசாகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், எடப்பாடி திமுக வேட்பாளர் சம்பத்குமாரை ஆதரித்து, நடந்து சென்றும், தேநீர் அருந்தியும், மு.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கொங்கணாபுரம் பேருந்து நிலையம் அருகே, திமுக வேட்பாளர், மற்றும் நிர்வாகிகளுடன் நடந்து சென்று, பொதுமக்களை சந்தித்து வாக்கு கோரினார்.

இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பேருந்து நிலையத்தில், உள்ள பேக்கரியுடன் கூடிய தேநீர் கடைக்குச் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி திமுக வேட்பாளர் மற்றும் நிர்வாகிகளுடன் அமர்ந்து தேநீர் அருந்தினார்.

எடப்பாடியைத் தொடர்ந்து, செட்டிமாங்குறிச்சி பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கத்திநாயக்கன்பட்டி பகுதியில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று, எடப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் சம்பத்குமாருக்கு ஆதரவு திரட்டினார். அப்போது, பொதுமக்கள், இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி, புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments