நீர் மேலாண்மைக்கு சிறப்பு திட்டங்கள்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!
திமுக ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தப்பட உள்ள நீர்மேலாண்மை திட்டங்களை பட்டியலிட்டுள்ள மு.க.ஸ்டாலின், ஏரி, குளங்களை பாதுகாக்க 10ஆயிரம் கோடி ரூபாயில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதி திமுக வேட்பாளர் சாமிநாதன், தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் கயல்விழி, பல்லடம் தொகுதி மதிமுக வேட்பாளர் முத்துரத்தினம் ஆகியோரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திமுகவை வீழ்த்த எத்தனையோ பேர் ஒன்று கூடியுள்ளதாக கூறிய மு.க.ஸ்டாலின், திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோனதுதான் வரலாறு என குறிப்பிட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் நீர்நிலைகளை பாதுகாக்க 10,000 கோடி ரூபாயில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்த மு.க.ஸ்டாலின், இந்திய நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்துவதோடு, தென்னக நதிகளும் இணைக்கப்படும் எனக் கூறினார்.
கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக இருப்பதாக குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என நம்பிக்கை தெரிவித்தார். கருத்துக்கணிப்புகள் எவ்வாறாக இருந்தாலும் கடைசி வரை களப்பணியாற்ற வேண்டும் எனவும் திமுக தொண்டர்களை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.
ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் இது எனக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், நீட் திணிப்பு, இந்தி திணிப்பு, மாநில உரிமைகள், சுயமரியாதை ஆகியவற்றை மீட்டெடுக்க உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, ஈரோடு சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு கோபிசெட்டிபாளையம் திமுக வேட்பாளர் மணிமாறன், பவானி திமுக வேட்பாளர் துரைராஜ், அந்தியூர் திமுக வேட்பாளர் வெங்கடாசலம், பவானிசாகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.எல். சுந்தரம் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
Comments