தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் சூறாவளி பரப்புரை..

0 4174

தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் அனைத்து கட்சியினரும், வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் தீவிர வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமாரை ஆதரித்து வீதி வீதியாக சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் வாக்கு சேகரித்தார். பட்டமங்கலம் தெரு, புதிய பேருந்து நிலையம், கச்சேரிரோடு, திருவாரூர் ரோடு, கேணிக்கரை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

மக்கள் நிம்மதி, சம உரிமை, சமூக நீதியுடன் வாழ அமமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்

தமிழக மக்கள் நிம்மதியுடன், சமூக நீதி மற்றும் சம உரிமையுடன் வாழ அம முகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அம முக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசியஅவர், தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தீவிர வாக்கு சேகரிப்பு

தமிழகம் வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் கருணாநிதி என்றும் அதனால் ஸ்டாலினுக்கு வாக்கு அளியுங்கள் என்று கூறி ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வாக்கு சேகரித்தார். வேப்பனஹள்ளி தொகுதி திமுக வேட்பாளர் முருகன், ஓசூர் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ், மற்றும் தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமசந்திரன் ஆகியோரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மக்களுக்கு நல்லது செய்ய மீண்டும் எடப்பாடியாரே முதலமைச்சராக வருவார் - எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ கே செல்வராஜை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பேசிய அவர், மக்களுக்கு நல்லது செய்ய மீண்டும் எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக வருவார் எனக் கூறினார்.

விவசாய உற்பத்தி பொருளுக்கு விவசாயியே விலை நிர்ணயிக்க வேண்டும்

உற்பத்தி செய்த வேளாண் பொருளுக்கு விவசாயியே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், விவசாயி மகன்களுக்கு விவசாயிகளே வாக்களிக்காவிட்டால் வெளிநாட்டில் இருந்து யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.

சமூக நல்லிணக்கத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு மக்கள் இடம் தரக்கூடாது- வைகோ 

தமிழகத்தில் நேர்மையான, பொற்கால ஆட்சி அமைவதற்கு திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லையில் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல்வகாப் மற்றும் நெல்லை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார் . அப்போது பேசிய வைகோ, பேரறிஞர் அண்ணா, காயிதேமில்லத் கட்டி எழுப்பிய சமூக நல்லிணக்கத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு மக்கள் ஒரு போதும் இடம் கொடுக்கக் கூடாது என்றார்.

முதியவர்களின் காலில் விழுந்து ஆதரவு திரட்டினார்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தானேஷ் (எ) முத்துக்குமார் முதியவர்களின் காலில் விழுந்து வாக்குச் சேகரித்தார். புலியூர், உப்பிடமங்கலம் பேரூராட்சி, சணப்பிரட்டி, வீரராக்கியம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் கூட்டணி கட்சியினருடன் சென்று அவர் ஆதரவு திரட்டினார்.

 வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்குச் சேகரிப்பு

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தனி தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் கதிர்வேல் வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். கம்மநல்லூர், திருக்காம்புலியூர், மாயனூர்,முனையனூர், மணவாசி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் அருணாதேவி ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சண்முகபுரம், தாளமுத்து நகர், வெள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தேநீர் போட்டு கொடுத்தும், பாட்டியுடன் வடை சுட்டும் ஆதரவு திரட்டினார்.

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை பன்மடங்கு உயர்ந்ததாக விமர்சனம்

தூத்துகுடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுபினர் பிருந்தா காரத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புதுக்கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதாக விமர்சித்தார். திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு அவர், கேட்டுக்கொண்டார்.

அரக்கோணம் தொகுதி விசிக வேட்பாளர் கௌதம சன்னாவை ஆதரித்து திருமாவளவன் வாக்கு சேகரிப்பு

அரக்கோணம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கௌதம சன்னாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார். அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் தொண்டர்களுடன் வாக்கு சேகரித்த அவர் மக்களிடையே பானை சின்னத்திற்கு ஆதரவாக பேசி அனைவரையும் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்

கிரிக்கெட் விளையாடி ஆதரவு 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் சிலம்பம் சுற்றி வந்த சிறுவர்களுடன் ஊர்வலமாக வந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், கிரிக்கெட் விளையாடி ஆதரவு திரட்டினார். இந்த தொகுதியின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதாகவும் அவர் உறுதி அளித்தார்.

போலி பட்டுப்புடவை சங்கம் மீது நடவடிக்கை-ராமதாஸ்

காஞ்சிபுரம் நகராட்சி மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் மகேஷ்குமார் மற்றும் உத்திரமேரூர் அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம் ஆதரித்து ஆகியோரை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ராமதாஸ், காஞ்சிபுரத்தில் உருவாகி வரும் போலி பட்டுப்புடவை சங்கத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

நடிகை ராதிகா பிரச்சார வாகனத்தில் ஆட்டம் போட்ட தொண்டர்

தென்காசியில் அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவர் சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா சரத்குமார் பிரச்சார வாகனத்தில் தொண்டர் ஒருவர் ஏறி ஆட்டம் போட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. தென்காசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் திருமலை முத்துவை ஆதரித்து நடிகை ராதிகா பிரச்சாரம் செய்தார். அப்போது தொண்டர் ஒருவர் ஆர்வக்கோளாறு மிகுதியில் அவரது வாகனத்தில் ஏறி ஆட்டம் போட்டார்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கை சொக்கத் தங்கத்தை போன்றது - ஜி.கே.வாசன்

சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கை சொக்க தங்கத்தை போன்றது என்றும் திமுகவின் தேர்தல் அறிக்கை பித்தளை போன்றது என்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் தங்கமணியை ஆதரித்து பேசிய அவர்,மின்மிகை மாநிலமான தமிழகத்தில் புதிதாக பல தொழில் நிறுவனங்கள் தொடங்கி இருப்பதால் தொழில் வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக கூறினார்.

முதலமைச்சரை இழிவாக பேசிய ஆ.ராசாவை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.வி. ராமலிங்கம் அதிமுக அரசின் சாதனைகளை கூறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். வெள்ளப்பாறை, முத்தம்பாளையம், பண்ணைக்கோடு, தொட்டிப்பாளையம், பால்பண்ணை நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று ஆதரவு திரட்டினார். முன்னதாக முதலமைச்சரை இழிவாக பேசிய திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவை கைது செய்யக்கோரி அவர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

ரூ.15,000 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். காங்கேயநல்லூர் பிரச்சாரத்தில் பேசிய அவர், தாம் இம்முறை வெற்றி பெற்றால் 15ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பேன் என்றும், 2ஆயிரம் ஏக்கரில் தொழில்பேட்டை அமைப்பேன் என்றும் கூறி ஆதரவு திரட்டினார்.

குதிரை வண்டிகளில் சென்று நூதன வாக்கு சேகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறிப்பிடும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி அமமுக வேட்பாளார் வீரக்குமார் குதிரை வண்டியில் சென்று பிரச்சாரம் செய்தார். பழனி தொகுதிக்குட்பட்ட ஆயக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார்.

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக விவசாயிகள் விருப்பம்-அன்புமணி 

அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் இரா.அருளை ஆதரித்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அன்புமணி, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் முடிவு செய்துவிட்டார்கள் என்றார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 என உறுதி

தேனி மாவட்டம், கம்பம் தொகுதி திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அம்மாபட்டி, குரும்பபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், எம்மதமும் சம்மதம் எனக் கூறி ஆதரவு திரட்டினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.

அண்ணாநகர் தொகுதி அதிமு வேட்பாளர் கோகுல இந்திரா தொகுதி மக்களுடன் இயல்பாக பழகி வாக்கு சேகரிப்பு

சென்னை அண்ணா நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் கோகுல இந்திரா, டி.பி.சத்திரம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். தொகுதி மக்களுடன் நெருக்கத்தை எற்படுத்தும் வகையில் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று அமர்ந்து சிறிது நேரம் அவர் ஓய்வெடுத்தார். அங்குள்ள குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி அவர் ஆதரவு திரட்டினார்.

திருவள்ளூர் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் தீவிர தேர்தல் பிரச்சாரம்

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திருவள்ளூர் நகர பகுதிகளான 22-வது வார்டு பகுதிகள் மற்றும் சேலை கிராமத்தில் திறந்தவெளி வாகனத்தில் வீதி வீதியாக சென்று திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது திமுக தொண்டர் ஒருவர் தனது ஆண் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு அவரிடம் வழங்கிய நிலையில், அந்த குழந்தைக்கு உதயநிதி என பெயர் சூட்டினார்.

கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் தானேஷ் பெரியவர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பு

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தானேஷ் என்கிற முத்துக்குமார் பெரியவர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காந்தி கிராமம் பகுதியிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், தென்றல் நகர், ஈ.பி காலணி உள்ளிட்ட பகுதிகளில் அவர் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது துண்டு பிரசுரங்களை வழங்கியும் பெரியவர்களின் காலில் விழுந்தும் இரட்டை இலை சின்னத்தில் தனக்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரிப்பு

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அம்பத்தூர் டன்லப் தொழிற்சாலை பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு ஆதரவாளர்களுடன் சென்ற அவர் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி உதய சூரியனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். உரிய வசதிகளுடன் புதிய விளையாட்டு மைதானம் அமைத்துத்தரப்படும் என இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

 

துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளர் சேகர்பாபு தையல் மெஷினில் துணி தைத்துக் கொடுத்து வாக்கு சேகரிப்பு

சென்னை துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளர் சேகர்பாபு, தையல் இயந்திரத்தில் துணி தைத்துக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பல்லவன் சாலையில் உள்ள எஸ் எம் நகர், இந்திரா காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சேகர்பாபு, திமுக ஆட்சிக்கு வந்தால் தனது தொகுதிக்குப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன் எனக் கூறினார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், வீடு ஒன்றில் தையல் இயந்திரத்தில் அமர்ந்து துணி தைத்துக் கொடுத்து, ஆதரவு திரட்டினார்.

சைதாப்பேட்டையில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரிப்பு

சென்னை சைதாப்பேட்டையில் திமுக சார்பில் போட்டியிடும் மா.சுப்பிரமணியன், ஜோன்ஸ் சாலை, மசூதி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவு திரட்டினார். சிஐடி நகர் மற்றும் நந்திலூப் தெருக்களில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களிடம் அவர் வாக்கு கேட்டார். தாடண்டர் நகரில் கிரிக்கெட் விளையாட்டு நடந்த போது, அதில் பங்கேற்று கிரிக்கெட் விளையாடியும் மா.சுப்பிரமணியன் வாக்கு சேகரித்தார்.

”திருவண்ணாமலைக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும்” - எ.வ.வேலு பிரச்சாரம்

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நகராட்சிக்குட்பட்ட கீழ்நாத்தூர், அசலியம்மன் கோயில் தெரு, தென்மாதாதி தெரு, அய்யன்குளத் தெரு, சன்னதி தெரு, உட்பட பல்வேறு பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். திருவண்ணாமலை நகரின் குடிநீர் பஞ்சத்தைப் போக்க, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும் என்று கூறிய எ.வ.வேலு, திருப்பதியை போன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நான்கு மாட வீதிகளை சுற்றியும் கான்கிரீட் சாலை அமைக்கப்படும் என்றார்.

பெருந்துறை அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் கோயில் திருவிழாவில் கலந்துகொண்டு பானை உடைத்து வாக்கு சேகரிப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட கைகோலபாளையம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஜெயக்குமார், அங்கு நடைபெற்ற காமாட்சியம்மன் கோயில் திருவிழாவில் கலந்துகொண்டு இளைஞர்களுடன் சேர்ந்து பானை உடைத்து வாக்கு சேகரித்தார்.

”கோவையை இந்தியாவின் நம்பர் ஒன் நகரமாக மாற்றுவதே நோக்கம்” - கமல்

இந்தியாவின் நம்பர் ஒன் நகரமாக கோவை நகரை மாற்றுவதே தன்னுடைய நோக்கம் என மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாகனப் பேரணியாக சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், ஒவ்வொருவரின் வீடுகளிலும் சிறு விளக்காக எரிந்து வெளிச்சத்தை கொடுக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார்.

திமுகவிலிருந்து விலகியது ஏன்? என்பதை தேர்தலுக்கு பிறகு சொல்கிறேன் - குஷ்பு

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு, வள்ளுவர் கோட்டம், ரியாஸ் கார்டன், கங்கைபுரம், அபிபுல்லா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் இருந்த சமயத்தின் தன் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

பட்டாசுக்குப் பயந்து முகத்தை துண்டால் மூடிக்கொண்ட வேட்பாளரால் கலகலப்பு 

சென்னை ஆலத்தூரில் பிரச்சாரத்தின்போது தொண்டர்கள் வெடித்த பட்டாசுக்கு பயந்து அதிமுக வேட்பாளர் முகத்தை துண்டால் மூடிக்கொண்டது கலகலப்பை ஏற்படுத்தியது. மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மூர்த்தி ஆலத்தூரில் தனது ஆதரவாளர்களுடன் பிரச்சாரம் மேற்கொண்டார். மூர்த்திக்கு பூக்களால் ஆன கிரீடம் தரித்து, மாலை அணிவித்து வரவேற்றத் தொண்டர்கள், அவர் ஜீப்பில் ஏறியதும் ஆயிரம் வாலா பட்டாசைக் கொளுத்தினர். படபடவென வெடித்துத் தெறித்த பட்டாசைப் பார்த்து ஆதரவாளர்கள் சலனமே இல்லாமல் நிற்க, வேட்பாளர் மூர்த்தி மட்டும் பயந்துபோய், முகத்தை துண்டால் மூடிக்கொண்டார். பட்டாசுகள் வெடித்து முடித்த பின்னரே அவர், சகஜ நிலைக்குத் திரும்பினார்.

புவனகிரி திமுக வேட்பாளர் துரை சரவணனுக்கு ஆதரவாக மனைவி பிரச்சாரம்

கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரை சரவணனுக்கு ஆதரவாக அவரது மனைவி சுமதி சுமங்கலி பூஜை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் துரை சரவணன் உடல்நலக்குறைவால் ஓய்வு எடுத்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக மனைவி சுமதி சுமங்கலி பூஜை செய்தும், திமுக தேர்தல் அறிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதிமுக தேர்தல் அறிக்கை குடும்ப பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்- எம்.சி.சம்பத்

கடலூர் தொகுதியில் அதிமுக சார்பில் சார்பில் போட்டியிடும் அமைச்சர் எம்சி சம்பத், மீனவ கிராமத்தில் வாக்கு சேகரித்தார். தேவனாம்பட்டினத்துக்கு ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக சென்ற அவர், அதிமுகவின் தேர்தல் அறிக்கை குடும்ப பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனவும் பெண்களின் நலன் காக்கும் அதிமுக அரசு மீண்டும் அமைய இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

அரவக்குறிச்சி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை கிராமம் கிராமமாக சென்று, முதியோர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் அண்ணாமலை, கிராமம் கிராமமாக சென்று முதியோர்கள் காலில் விழுந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பழமாபுரம், ஆலமரத்துமேடு, நடையனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு திறந்தவெளி வாகனத்தில் சென்று முதியோர்கள் காலில் விழுந்து தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

செய்யூரில் விசிக வேட்பாளர் பனையூர் பாபு தீவிர திறந்தவெளி வாகனத்தில் வாக்குசேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் பனையூர் பாபு, இலத்தூர் பகுதியில் வாக்குசேகரித்தார். வடபட்டினம், தென்பட்டினம், முகையுர், பரமன்கேணி, வீரபோகம், பெரும்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு திறந்தவெளி வாகனத்தில் சென்ற அவர், பானை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின் சிறு குறு வியாபாரிகளுடன் கலந்துரையாடி வாக்கு சேகரிப்பு

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் சிறு குறு வியாபாரிகளிடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் அரங்கில் தொகுதிகுட்பட்ட சிறு குறு வியாபாரிகளுடன் கலந்துரையாடிய உதயநிதி ஸ்டாலின், அவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

 தேநீர் கடையில், தேநீர் அருந்தி வாக்கு சேகரித்த அமைச்சர் தங்கமணி 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான தங்கமணி, தேநீர் கடையில் தேநீர் அருந்தியவாறு வாக்கு சேகரித்தார். பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குப்பாண்டபாளையம், சாணார்பாளையம், சீராம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனத்தில் சென்றும், நடந்து சென்றும் அமைச்சர் தங்கமணி ஆதரவு திரட்டினார். காவிரி ஆற்றிங்கரையோர மக்களின் பயன்பாட்டிற்காக அதிகளவில் படித்துறைகளை கட்டிக் கொடுத்திருப்பதாகக் கூறிய அமைச்சர், மீண்டும் வெற்றிபெற்றால் கொண்டுவரவுள்ள திட்டங்களையும் பட்டியலிட்டார். பிரச்சாரத்துக்கு நடுவே சீராம்பாளையத்திலுள்ள தேநீர் கடை ஒன்றில் அமர்ந்து அமைச்சர் தங்கமணி தேநீர் அருந்தினார்.

குடியாத்தம் அதிமுக வேட்பாளர் பரிதா தேங்காய் உரித்தும், மிளகாய் காய வைத்தும் வாக்கு சேகரிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் பரிதா, மாச்சம்பட்டு, கொத்தூர், பாலூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, மாச்சம்பட்டு பகுதியில், தேங்காய் உரித்தும், வரமிளகாய்யை காய வைத்தும், விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார்.

கலசப்பாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் மின்சார தறி மூலம் பட்டுப்புடவை நெய்து வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அணியாளை, காம்பட்டு, சிங்காரவாடி, கடலாடி எர்ணாமங்கலம், விநாயகபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்குசேகரித்தார். கடலாடியிலுள்ள நெசவாளர் வீட்டிற்கு வாக்கு சேகரிக்க சென்ற பன்னீர்செல்வம், மின்சார தறி மூலம் பட்டுப்புடவை நெய்து இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதிமுக வேட்பாளர் வி. சோமசுந்தரம் நெசவாளர்கள் வீட்டில் பட்டு இழைத்து வாக்கு சேகரிப்பு 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வி. சோமசுந்தரம் பல்வேறு கிராமங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்‍. வளத்தோட்டம், குருவிமலை, களக்காட்டூர், ஐயங்கார் குளம் உள்ளிட்ட கிராமங்களில் சக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நெசவாளர் ஒருவர் வீட்டில் பட்டு இழைத்து அவர் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்‍.

கவுண்டம்பாளையத்தில், அதிமுக வேட்பாளர் மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரிப்பு

கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இடையர்பாளையத்தில் உள்ள அம்மன் கோவிலில் வழிபட்டு பிரச்சாரத்தை தொடங்கிய அவர், திறந்த வாகனத்தில் சென்றும், வீதி வீதியாக நடந்தும் பரப்புரையில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாட்டு வண்டியில் சென்றபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பெண்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் வானதி சீனிவாசன் - ஜி.கே.வாசன்

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும் பாஜக பிரமுகருமான சசிகலா புஷ்பா ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். கோவை தெப்பகுளம் மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட தமாகா தலைவர் ஜிகே வாசன், பொதுவாழ்வில் பெண்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் வானதி சீனிவாசன் என தெரிவித்தார்

காட்டுமன்னார்கோவிலில் விசிக வேட்பாளர் சிந்தனை செல்வனுக்கு ஆதரவாக  திமுக கூட்டணியினர் வாக்கு சேகரிப்பு

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சிந்தனை செல்வனுக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். உடையார்குடி மேலவீதி, கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்ற திமுகவினர், மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி பானை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.

கருத்துக்கணிப்புகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு

கருத்துக்கணிப்புகளின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் மக்களுடைய கருத்துதான் தங்களது கருத்து என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கடம்பூர் ராஜு, கடையூர் பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் அதிமுகவையே மீண்டும் தேர்ந்தெடுக்க முடிவு செய்து விட்டனர் என்றார்.

கமல்ஹாசனுக்கு ஆதரவாக நடிகை சுகாசினி பிரச்சாரம்

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக அவரது அண்ணன் மகளும் நடிகையுமான சுகாசினி, வாக்கு சேகரித்தார். பந்தய சாலையில் வாக்கிங் சென்றபடி பிரச்சாரம் மேற்கொண்ட அவர், டார்ச்லைட் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

வீதி, வீதியாக சென்று திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய உதயநிதி 

சட்டப்பேரவைத் தேர்தலில்  200 தொகுதிகள் வரை திமுக வெற்றி பெறும் வகையில் உழைக்க வேண்டுமென தொண்டர்களுக்கு, அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார்.  சென்னை - தியாகராயநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ. கருணாநிதியை ஆதரித்து வட பழனி பகுதியில் உதயநிதி பிரசாரம் செய்தார். திறந்த வேனில், வீதி, வீதியாக சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்ட உதய நிதி, தேர்தல் குறித்து வெளியாகி உள்ள கருத்துக்கணிப்புகளை சுட்டிக் காட்டினார்.

நாட்டிலேயே நம்பர் 1 நகரமாக கோயம்புத்தூர் மாற்றப்போவதாக கமல்ஹாசன் வாக்குறுதி 

எடுத்த பணி முடியும் வரை, கோயம்புத்தூர் மாநகரில் தங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கி உள்ள கமல்ஹாசன், தமக்கு ஆதரவு கோரி, பிரசாரத்தில் ஈடுபட்டார். வாக்காளர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டால் அதிலேயே தங்கி விடுவதே தமது வழக்கம் என்று கூறினார். கோவை தெற்கு தொகுதியில் தாம் வெற்றி பெற்றால், இந்தியாவின் முன் மாதிரி தொகுதியாக மாற்றுவதோடு, நாட்டிலேயே முதன்மை மாநகராக கோயம்புத்தூரை மாற்ற உள்ளதாகவும் கமல்ஹாசன் வாக்குறுதி அளித்துள்ளார்.

போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தீவிர பரப்புரை

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்,தீவிர பரப்புரை மேற்கொண்டார்‍. போடி நகராட்சிக்குட்பட்ட  1-வது வார்டில் உள்ள பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் அவர் பிரச்சாரத்தை துவங்கினார்‍. மேளதாளத்துடன்திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக சென்ற அவர், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்‍.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments