சுவர் ஏறிக் குதிக்கும் வாக்குபதிவு அலுவர்கள்..! இது புதுசா இருக்கு ஆபீசர்ஸ்..!
வகுப்புகளுக்கு மட்டம் போட்டுவிட்டு பள்ளிக் கல்லூரி மாணவர்கள் சுவர் ஏறிக்குதித்து தப்பிச்செல்வதை போல, தேர்தல் பயிற்சிக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஆசிரியைகள் சிலர் சுவர் ஏறிகுதித்து தப்பிச்சென்ற சம்பவம் புதுக்கோட்டையில் அரங்கேறியுள்ளது.
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ராணியார் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இந்த பயிற்சி வகுப்பானது காலை 9.30 மணி முதல் தொடங்கி மாலை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மதியம் 1 மணிக்கு உணவு இடைவேளை விடப்பட்ட நிலையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் மதிய உணவு அங்கேயே பொட்டலமாக வழங்கப்பட்டன.
ஆசிரியர்கள் பலர் உணவு பொட்டலங்களை வாங்கிவிட்டு வெளியே செல்ல முயன்றனர். இதனால் பயிற்சி வகுப்பில் இருந்து பாதியில் வெளியேறி செல்வதை தடுக்க நடவடிக்கையாக பள்ளியின் நுழைவு வாயில் இழுத்துப் பூட்டப்பட்டது.
உணவு இடைவேளைக்குபின் மேலும் ஒரு மணி நேரம் பயிற்சி நடைபெறும் என்பதால் பாதியில் செல்லக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதிகாரிகளின் வாகனங்கள் வெளியே செல்வதற்காக நுழைவு வாயில் திறக்கப்பட்ட போது அந்த இடைவெளியில் சிலர் தப்பித்தோம், பிழைத்தோம் என தப்பி ஓடினர்.
சிலர் வேறு வழியில்லாமல் பள்ளியின் பக்கவாட்டு சுவரில் ஏறி குதித்து தாண்டி வெளியே சென்றனர். இதில் ஆசிரியர்களுக்கு இணையாக ஆசிரியைகளும் குதித்து வெளியில் சென்றனர்.
ஒரு வருடமாக பள்ளிக்கு செல்லாமல் சுதந்திரமாக சுற்றிய ஆசிரியைகளை ஒரு வகுப்பறைக்குள் பயிற்சி என அடைத்ததால் அவர்கள் தப்பிச்சென்றதாக கூறப்படுகின்றது.
இந்த சூழ்நிலையில் லட்சக்கணக்கில் செலவழித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வருகிற 3-ந் தேதி 2-ம் கட்ட மறுபயிற்சியும், வருகிற 5-ந் தேதி 3-ம் கட்ட மறு பயிற்சியும் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments