ஓட்டுக்கு ஒரு சேலை அதை தடுப்பதே வேலை..! அதிமுக – திமுக யுத்தம்
திருச்செங்கோடு தொகுதிக்குட்பட்ட மல்லசமுத்திரம் அருகே ஓட்டுக் கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட சேலைகளை, கையும் களவுமாக பிடித்து திமுக கூட்டணி கட்சியினர் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதிக்குட்பட்ட மல்லசமுத்திரம் அடுத்த பள்ளிக்குளி ஊராட்சியில் அதிமுக ஊராட்சி தலைவர் காந்திமதி செல்வக்குமார் வீட்டில், வாக்காளர்களுக்கு கொடுக்க சேலை பண்டல்கள் வந்திறங்குவதாக திமுகவினருக்கு தகவல் கிடைத்தது.
அங்கி குவிந்த திமுகவினர் அந்த சேலை பண்டல்களை பிடித்து வைத்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தப்பிக்க முயன்ற ஆம்னி வேனின் சாவியை பறிக்க முயன்ற போது திமுக கூட்டணி கட்சி பிரமுகருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு தேர்தல் அதிகாரிகள் வர தாமதமான நிலையில் அங்கிருந்து சேலை பண்டல்களை பக்கத்து இடத்துக்கு மாற்றம் செய்ய அதிமுகவினர் முயன்றதாக கூறப்படுகின்றது.
அப்போது அங்கு வந்த கொ.ம.தே.க எம்.பி ஓ.கே.சின்னராஜ் ஊராட்சி தலைவர் வீட்டிற்குள் ஆதரவாளர்களுடன் நுழைந்தார். அங்கு சிலர் சேலை பண்டல்களை தூக்கிச்செல்வதை பார்த்ததும் அவரது ஆதரவாளர்கள் விரட்டி தடுத்து பிடித்ததால் இரு தரப்புக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதனால் பெண் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த புத்தம் புது சேலைகள் கேட்பாரற்று வீதியில் கிடந்தது. இரு கட்சியினரும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
இதையடுத்து அங்கு வந்த வட்ட வழங்கல் அதிகாரியிடம் மொத்த சேலை பண்டல்களும் ஒப்படைக்கப்பட்டன.
Comments