முதலமைச்சர் பற்றிய ஆ.ராசாவின் பேச்சுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கண்டனம்
முதலமைச்சரையும், அவரது தாயாரையும் இழிவுபடுத்தும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசியதற்குப் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல்களில் ஒவ்வொரு கட்சியும் தங்களின் சாதனைகளையும், எதிர்க்கட்சிகளின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையிலான குறைகளையும் மக்களிடம் எடுத்துரைப்பதுதான் நாகரிகம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சரையும் அவரது தாயாரையும் இழிவுபடுத்தும் வகையில் ஆ.ராசா பேசியது அருவருக்கத் தக்கது, கண்டனத்துக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆ.ராசாவுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்
முதலமைச்சரையும், அவரது தாயாரையும் இழிவுபடுத்தும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசியதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரை நேருக்கு நேர் சந்திக்க தைரியமின்றி, திமுகவினர் இதுபோன்று அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆ.ராசாவின் பேச்சு தமிழ் சமுதாயத்தையே, பெண் குலத்தையே அவமானப்படுத்தும் இழி செயல் எனக் கூறியுள்ள ஜி.கே.வாசன், வாக்கு வங்கிக்காக மற்றவர்களை தரம் தாழ்த்தி பேசக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
Comments