இரண்டு மாதமே ஆன மகனிற்காக நிலவில் நிலம் வாங்கி பரிசளித்த தந்தை

0 4776

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.

மறைந்த பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங்க் ராஜ்புட், வானியலில் மிகுந்த ஆர்வம் உடையவர். அதன் காரணமாக, அவர் இறப்பதற்கு சில ஆண்டுகள் முன்பு நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியிருந்தார். அதே போல, நடிகர் ஷாருக்கான் மீது அதீத அன்பு உடைய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ரசிகர்கள் இருவர், அவரது 52 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பெயரில் நிலவில் சிறய இடம் ஒன்றை வாங்கி அவருக்குப் பரிசளித்தனர். பூமியில் நிலம் வாங்குவதே குதிரைக் கொம்பாக இருக்கும் நிலையில், பாலிவுட் நட்சத்திரங்கள் போல, தொழில் அதிபர்கள் சிலரும் நிலவில் நிலம் வாங்க தொடங்கியுள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் விஜய்பாய் கதிரியா((Vijaybhai Kathiriya )). தொழிலதிபரான இவர், இரண்டு மாதமே ஆன தனது மகனிற்குச் சிறந்த பரிசு ஒன்றை அளிக்க ஆசைப்பட்டார். அதன் படி நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்க முடிவு செய்தார் விஜய்பாய் கதிரியா.

அந்த முயற்சியில், அமெரிக்காவில் உள்ள நியூயார்கில் அமைந்துள்ள 'International Lunar Registry' எனப்படும் சர்வதேச சந்திர பதிவகத்திடம் அனுமதி கோரி, இமெயில் ஒன்றை அனுப்பினார். மேலும், நிலம் வாங்குவதற்குத் தேவையான ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து, விஜய்பாய் கதிரியாவின் மகனின் பெயரில் சான்றிதழ் ஒன்று அனுப்பப்பட்டது. அந்த சான்றிதழைப் பெறுவதன் மூலம், விஜய்பாய் கதிரியா தன் மகனின் பெயரில் நிலவில் நிலம் வாங்கியதாகக் கருதப்படும். அதன் மதிப்பு அமெரிக்கா டாலர் 750 என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Outer Space Treaty என்ற விண்வெளி ஒப்பந்தத்தின் படி, நிஜத்தில் நிலவில் இருக்கும் நிலத்தை ஒருவர் சொந்தம் கொண்டாட முடியாது. நிலவில் உள்ள நிலத்தில் வேண்டியதைச் செய்துகொள்ள யாருக்கும் உரிமை கிடையாது . நிலவில் நிலம் வாங்க நினைக்கும் வாடிக்கியர்களுக்கு, சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும். அந்த சான்றிதழ் பெறுவதையே மிகவும் மதிக்கத்தக்க பரிசாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments