மும்பையில் வணிகக் கட்டடத்தில் செயல்பட்டு வந்த கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து - 10 பேர் உயிரிழப்பு
மும்பையில் வணிகக் கட்டடத்தில் செயல்பட்டு வந்த கொரோனா மருத்துவமனையில் தீப்பிடித்ததில் நோயாளிகள் பத்துப் பேர் உயிரிழந்தனர்.
மும்பை பாண்டூப்பில் டிரீம்ஸ் வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் தனியார் மருத்துவமனை சார்பில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டிருந்தது.
இதில் கொரோனா நோயாளிகள் 76 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கட்டடத்தின் முதல் தளத்தில் இரவு பன்னிரண்டரை மணியளவில் தீப்பற்றி மளமளவென மேல் தளங்களுக்குப் பரவியது.
தகவல் அறிந்து 22 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மருத்துவமனைப் பணியாளர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்தோரை மீட்டுப் பிற மருத்துவமனைகளில் சேர்த்தனர். இந்தத் தீ விபத்தில் கொரோனா நோயாளிகள் பத்துப் பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பையில் தீவிபத்து நேர்ந்த பாண்டூப் மருத்துவனையைப் பார்வையிட்ட முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, விபத்துக்குக் காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட நோயாளிகளே உயிரிழந்ததாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவால் விபத்து நேர்ந்துள்ளதாக மாநகரக் காவல் ஆணையர் தெரிவித்தார்.
Comments