பைக் ரைடரை நிறுத்தி மூதாட்டி தவறவிட்ட மருந்து பாட்டிலை கொடுத்து விட்ட போலீஸ்காரர் கிருஷ்ணமூர்த்திக்கு குவியும் பாராட்டு!

0 7297
போலீஸ்காரர் கிருஷ்ணமூர்த்தி

மருந்து பாட்டிலை தவற விட்டு பஸ் ஏறி சென்ற மூதாட்டிக்கு பைக்கில் சென்ற இளைஞர் ஒருவரிடத்தில் மருந்தை கொடுக்க உதவிய போலீஸ் கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்திக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆனி அருண் மூல்யா என்பவர், தன்னுடைய கேடிஎம் இரு சக்கர வாகனத்தில் பாண்டிச்சேரியிலிருந்து தென்காசிக்கு சென்று கொண்டிருந்தார். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் காவலர் ஒருவர் ஆனி அருணை வழிமறித்தார். வாகனப் பதிவுச் சான்றிதழ், இன்சூரன்ஸ் போன்றவற்றைக் கேட்கப் போகிறார் என்று ஆனி நினைத்தார். ஆனால், காவலரோ... அரசுப் பேருந்தைச் சுட்டிக்காட்டி, இது போன்ற அரசு பேருந்து ஒன்று முன்னாடி சென்றுகொண்டிருக்கிறது, அதில் பயணம் செய்யும் வயதான மூதாட்டி மருந்து பாட்டிலைத் தவறவிட்டுவிட்டார். நீங்கள் வேகமாக சென்று பஸ்ஸை மறித்து இந்த மருந்து பாட்டிலை அவரிடத்தில் கொடுத்து விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். வழக்கமாக, போலீஸார் அதட்டலாக பேசுவார்கள். ஆனால், இந்த போலீஸ்காரர் அன்பாகவும் தன்மையாகவும் ஆனியிடத்தில் இந்த உதவியை கேட்டுக் கொண்டார்.

மருந்து பாட்டிலைப் பெற்றுக்கொண்ட ஆனி அருண் , தனது பைக்கை வேகமாக ஓட்டி சென்று பேருந்தை நிறுத்த கூறினார். டிரைவரும் புரிந்து கொண்டு பேருந்தை நிறுத்தினார். தொடர்ந்து, மருந்து பாட்டிலை அந்த மூதாட்டியிடம் ஆனி அருண் கொடுத்தார். இந்த காட்சிகள் அனைத்தும் ஆனி அருண் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. பின்னர், இந்த வீடியோவை தன்னுடைய யுடியூப் சேனலில் பதிவேற்றிய ஆனி அருண் காவலரின் மனிதநேயத்தை வியந்து பாராட்டியிருந்தார். ஆனால், அந்த காவலரின் பெயர் விவரம் எதுவும் ஆனி அருண் கூறவில்லை. ஆனால், தமிழகத்தில் பல பகுதிகளுக்கு தான் சென்றிருந்தாலும் போலீஸ்காரர் இத்தனை மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டதை முதன்முறையாக பார்த்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட காவலர் யார் என்பது தெரிய வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பேராவூரணியில் உள்ள போலீஸ் ரெக்ருட்மென்ட் பள்ளி முதல்வர் அர்ஜுன் சரவணன், தன் ட்விட்டர் பக்கத்தில் அந்த காவலர் புகைப்படத்தை வெளியிட்டு கிருஷ்ணமூர்த்தி என்று பெயரையும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இராமநாதபுரம் ஏர்வாடி பகுதியில் ஒரு பாட்டியம்மா பஸ் ஏறும் போது மருந்தை மறந்துவிட்டு சென்ற நிலையில் பைக் ஓட்டுநர் ஆனி அருண் மூலம் சேர்த்துள்ளார். வாழ்த்துகள் கிருஷ்ணமூர்த்தி என்று தெரிவித்துள்ளார். அதே போல, நெட்டிசன்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆனி அருணின் செயலை வெகுவாக பாராட்டியுள்ளனர். இருவரையும் கடவுள் ஆசிர்வாதிப்பார் என்று நெட்டிசன் மனம் நெகிழ்ந்து வாழ்த்தியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments