கரூரில் ம.நீ.ம பொருளாளரோடு வர்த்தக தொடர்புடைய நிறுவனங்களில் ஐடி ரெய்டு: 5 இடங்களில் நடைபெறும் சோதனையில் 5 கோடி ரூபாய் பறிமுதல்
கரூரில் ஏற்றுமதி மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்புடைய 5 இடங்களில் வருமான வரித்துறை சோதனை 2ஆவது நாளாக நடைபெற்று வரும் நிலையில், கணக்கில் வராத ரொக்கம் 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூரில் டெக்ஸ் யார்டு, யூனிட்டி எக்ஸ்போர்ட், குளோபல் நிதி நிறுவனம் மற்றும் பிரகாஷ், மாரியப்பன் எனும் 2 ஃபைனான்சியர்கள் தொடர்புடைய இடங்களில் நேற்று முதல் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை, கோவை, மதுரை, சேலம், ஈரோடு மாவட்டங்களைச் சார்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 7 குழுக்களாகப் பிரிந்து நேற்று மதியம் சோதனையைத் தொடங்கினர். 2ஆவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் குளோபல் நிதி நிறுவனத்தில், கணக்கில் வராத ரொக்கம் 5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் திருப்பூரில் மக்கள் நீதி மய்யத்தின் மாநில பொருளாளரும் தொழிலதிபருமான சந்திரசேகர் வீடு மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவரோடு பணப்பரிவர்த்தனை மற்றும் தொழில்-வர்த்தக தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில், கரூரில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments