நெருங்கும் தேர்தல் திருவிழா..! மின்னல் வேகத்தில் வேட்பாளர்கள் பிரச்சாரம்…

0 4307
நெருங்கும் தேர்தல் திருவிழா..! மின்னல் வேகத்தில் வேட்பாளர்கள் பிரச்சாரம்…

தொகுதிகள் தோறும் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மாவட்டந்தோறும் பெண்கள் பாதுகாப்பிற்காக தனி நீதிமன்றம் - திமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி எம்.பி கனிமொழி வாக்கு சேகரிப்பு

பண்ருட்டியில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை ஆதரித்து கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழக வேலைவாய்ப்புகளை வெளிமாநிலத்தவர்கள் எடுத்துக்கொள்வதாகவும், வங்கிகளில் ஹிந்தி பேசுபவர்கள் தான் வேலையில் உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மாவட்டந்தோறும் பெண்கள் பாதுகாப்பிற்காக தனி நீதிமன்றம் உருவாக்கப்படும் என்றார்.

ஆவடி தொகுதி தேமுதிக வேட்பாளர் சங்கரை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சங்கரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வாக்குச் சேகரித்தார். ஆவடி எம்ஜிஆர் திடலுக்கு வந்த அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கைகளை காட்டி ஆதரவு திரட்டினார்.

அமமுக சார்பில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் சேலத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம்

தமிழக தேர்தலில் அம முக சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சேலம் தாதகாப்பட்டியில் உள்ள மைதானத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகள், 12 ஸ்மார்ட் சிட்டிகள் கொடுத்தவர் மோடி - மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் சி.கே.சரஸ்வதியை ஆதரித்து சி.டி.ரவி பிரச்சாரம்

கோ பேக் மோடி என்று கூறியவர்களுக்கு மத்தியில் தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரிகள் 12 ஸ்மார்ட் சிட்டிகளை கொடுத்தது இதே மோடி அரசு தான் என்றும் இலங்கை தமிழர்களின் உள்கட்டமைப்புக்காக 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான வசதிகளை மத்திய அரசு செய்து கொடுத்துள்ளது என்றும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அதிமுக கூட்டணியான பாஜக வேட்பாளர் சி.கே. சரஸ்வதியை ஆதரித்து சி.டி.ரவி வாக்கு சேகரித்தார். இந்தியாவில் வருமான வரித் துறையினர் சுதந்திரமாக செயல்படுவதாகவும், அவர்களுக்கு கிடைக்கும் தகவல் மூலமே சோதனை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

ஒகேனக்கல் உபரிநீரை தர்மபுரிக்கு கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்றுவேன் - அன்புமணி ராமதாஸ் பரப்புரை

ஒகேனக்கல் உபரி நீரை தர்மபுரி மாவட்டத்திற்கு கொண்டு வரும் திட்டத்தை நிச்சயமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார்.

அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் கூறி அமைச்சர் தங்கமணி வீடு வீடாக சென்று வாக்குச் சேகரிப்பு 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் மின்துறை அமைச்சர் தங்கமணி வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார். பள்ளிபாளையம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட சின்ன வீதி, மசூதி வீதி, தோல் மண்டி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் சென்ற அவர், அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வாக்காளர்களிடம் கூறி பிரச்சாரம் செய்தார்.

வாக்கு கேட்டு வந்த வேட்பாளருக்கு முத்தம் கொடுத்து ஆதரவு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளருக்கு பெண் முத்தம் கொடுத்து ஆதரவு அளித்து உள்ளனர். தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கயல்விழி கோவிந்தாபுரம், சத்திரம், கொட்டாமுத்தாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், பொன்னாடை அணிவித்தும் ஆதரவு அளித்தனர். 

பல்லாவரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்கு 1000 கிலோ ஆப்பிள் மாலையை வழங்கி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு

சென்னை பல்லாவரத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிட்லபாக்கம் ராஜேந்திரன் திறந்த வாகனத்தில் சென்றபடி குரோம்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுக நிர்வாகிகள் அவருக்கு ஆயிரம் கிலோ எடையிலான ராட்சத ஆப்பிள் மாலையை கிரேன் மூலம் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மநீம ஆட்சி மலர்ந்தால் தமிழகத்தில் மாநில சுயாட்சி பாதுகாக்கப்படும் - கமல்ஹாசன்

மக்கள் நீதி மையத்தின் ஆட்சி மலர்ந்தால் தமிழகத்தில் மாநில சுயாட்சி பாதுகாக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். சென்னை மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியாவை ஆதரித்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதிமுக அரசின் 10 ஆண்டுகால சாதனையை கூறி திருமயம் அதிமுக வேட்பாளர் வைரமுத்துவை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம்

தமிழகத்தை சீரிய முறையில் வழி நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி மீண்டும் தொடர திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் வைரமுத்துவுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று நடிகை விந்தியா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புதுகோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர் டிடிவி தினகரன்

தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்தை டி.டி.வி தினகரன் உருவாக்குவார் என்றும் தினகரனுடனான கூட்டணி என்பது தேர்தலோடு நின்று விடாது என்றும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி தெரிவித்து உள்ளார். சிறுபான்மை இன பாதுகாவலர்கள் என்று சொல்லுபவர்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று சென்னையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து ஓவைசி வாக்கு சேகரித்தார்.

2019 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி போல் தற்போதும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போல் தற்போதைய தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். "சுண்டைக்கா கால் பணம், சுமை கூலி முக்காப்பணம்" என்று பெட்ரோல் டீசல் மீதான வரிவிதிப்பு குறித்து பாலகிருஷ்ணன் விமர்சித்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் தினசரி சந்தையில் வியாபாரிகளை சந்தித்து வாக்கு சேகரிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனுமான திருமகன் தினசரி சந்தையில் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். வ உசி பூங்கா அருகே உள்ள தினசரி காய்கறிகள் சந்தைக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்ற திருமகன், வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களது பிரச்சனைகள் கண்டிப்பாக தீர்க்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

ஆரணி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன் திமுக வாக்குறுதிகளை கூறி மக்களிடையே வாக்கு சேகரிப்பு 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆரணி தொகுதிக்கு உட்பட்ட பில்லாந்தாங்கல், மோட்டுகுடிசை, திருமணி, வெங்கடேசன்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆதரவாளர்களுடன் சென்று மக்களை சந்தித்த அவர், திமுக வாக்குறுதிகளை எடுத்துக்கூறி உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

ரிஷிவந்தியம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.கே.டி.சி.ஏ சந்தோஷ் மக்களிடையே பானிபூரி விற்று வாக்கு சேகரிப்பு 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.கே.டி.சி.ஏ சந்தோஷ் பானிபூரி விற்பனை செய்து பிரச்சாரம் மேற்கொண்டார். அத்தொகுதிக்குட்பட்ட கீழ்பாடி, பேரால், சித்தால் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் பாவந்தூர் சென்ற அதிமுக வேட்பாளர் சந்தோஷ், அங்குள்ள ஒரு சாலையோரக் கடையில் பானிபூரி செய்து விற்றவாறு பிரச்சாரம் செய்தார்.

சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமன் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு வீதி வீதியாக பிரச்சாரம்

சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் பரந்தாமன், வீதிவீதியாக நடந்து சென்று வாக்குசேகரித்தார். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், கடை வியாபாரிகள் மற்றும் பூ வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கிய அவர், உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். பிரச்சாரத்திற்கு இடையே திருவீதி அம்மன் கோயிலில் திமுக வேட்பாளர் பரந்தாமன் வழிபாடு நடத்தினார்.

தேமுதிக வேட்பாளரின் பெயரை தவறாகக் கூறி தொண்டர்கள் தவறை சுட்டிக்காட்டியதும் சிரித்து சமாளித்த விஜயபிரபாகரன்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வேட்பாளரின் பெயரை தவறாகக் கூறிய விஜயபிரபாகரன், தொண்டர்கள் சுட்டிக்காட்டியதும் சிரித்துக் கொண்டே சமாளித்தார். நிலக்கோட்டை தொகுதி தேமுதிக வேட்பாளர் ராமசாமியை ஆதரித்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பேச்சைத் தொடங்கும்போது, வேட்பாளரின் பெயரை சிவக்குமார் என அவர் தவறுதலாக குறிப்பிடவே, சம்மந்தப்பட்ட வேட்பாளரும் தொண்டர்களும் அதனை சுட்டிக்காட்டினர். உடனே சுதாரித்து ராமசாமி எனக் குறிப்பிட்ட விஜய பிரபாகரன், “நீங்கள் எல்லோரும் கவனமாக இருக்கிறீர்களா என பரிசோதித்தேன்” என்று கூறி மழுப்பினார்.

செங்கல்பட்டில் திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் ரோஜாப் பூக்களை வழங்கி வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வரலட்சுமி மதுசூதுனன் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு சென்ற அவர், பயணிகளிடம் ரோஜாப் பூக்களை வழங்கியவாறு பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்த அவருடன் திரளான கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

கும்பகோணம் திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன் பள்ளி தீவிபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்திய பின் பிரச்சாரம்

கும்பகோணத்தில் திமுக சார்பில் களமிறங்கும் சாக்கோட்டை அன்பழகன், பள்ளி தீவிபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் படங்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் காசிராமன் தெரு, பக்தபுரிதெரு, பகவத் பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற அவர், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். திறந்த வேனில் வாக்கு கேட்டு வந்த அன்பழகனுக்கு அப்பகுதி பூ வியாபாரிகள் 100 கிலோ ரோஜா மலர்களை தூவி ஆதரவு தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி தொகுதியில்  "மாரியாத்தா சத்தியமா ஓட்டுப் போடுவீங்களா ?" - சத்தியம் கேட்ட திமுக வேட்பாளர் "நீங்க வந்தா மட்டும் விலைவாசி குறைஞ்சிடுமா ?" - கேள்வி கேட்ட பெண்

”மாரியாத்தா சத்தியமா எனக்கு ஓட்டு போடுவீங்களா” என சத்தியம் கேட்ட திமுக வேட்பாளரிடம், ”நீங்க வந்தா மட்டும் விலைவாசி எல்லாம் குறைஞ்சிடுமா” என பெண் ஒருவர் கேட்ட சுவாரசியம் கிருஷ்ணகிரி அருகே அரங்கேறியது. கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக சார்பில் செங்குட்டுவன் என்பவர் போட்டியிடுகிறார். கங்கலேரியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட செங்குட்டுவன், ஒவ்வொரு பொருட்களாகக் குறிப்பிட்டு, திமுக ஆட்சியில் அவற்றின் விலையையும் தற்போது அவற்றின் விலையையும் ஒப்பிட்டுப் பேசினார். அப்போது குறுக்கிட்ட ஒரு பெண், நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டும் விலைவாசியை குறைத்துவிடுவீர்களா ? என கேள்வி எழுப்பினார். அதற்கு நான் என்ன பத்திரமா எழுதித் தர முடியும் எனக் கேட்டு வேட்பாளர் செங்குட்டுவன் சமாளித்தார்.

திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எம்.எல்.ஏ.. வி.ஜி.ராஜேந்திரன், திருவலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னமாப்பேட்டை, தோஜாவூர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திருவள்ளூர் தொகுதி மக்களுக்கு, கழிவுநீர் கால்வாய், தார்சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளதை சுட்டிக்காட்டியதோடு, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். 

பெருந்துறை தொகுதியில் கொ.ம.தே.க வேட்பாளர் கே.கே.சி.பாலு கூட்டணிக் கட்சியினருடன் சென்று வாக்கு சேகரிப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் கே.கே.சி பாலு அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக கூட்டணியில் இத்தொகுதியில் போட்டியிடும் அவர், இன்று தோப்புபாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்த அவருடன், கூட்டணிக் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

தாம்பரம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜாவை ஆதரித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தீவிர வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜாவை ஆதரித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெருங்களத்தூர், பீர்கங்காரனை பகுதிகளில் வீடு, வீடாக சென்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திட்டங்களை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் திமுக வெற்றி பெற்றால் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

பர்கூர் தொகுதி திமுக வேட்பாளர் மதியழகன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி திமுக வேட்பாளர் மதியழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தனது தொகுதிக்கு உட்பட்ட கூரம்பட்டி, கொட்டவூர், பாறையூர், மாரிசெட்டிஹள்ளி, தளிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் அவர் மக்களை சந்தித்து, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

சிங்காநல்லூர் திமுக வேட்பாளர்  நா.கார்த்திக் நடந்தும்,திறந்தவெளி வாகனத்திலும் சென்று வாக்கு சேகரிப்பு

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.கார்த்திக் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். சிங்காநல்லூரில் மீண்டும் போட்டியிடும் நா.கார்த்திக் தொகுதிக்குட்பட்ட ஒண்டிப்புதூர் ,நெசவாளர் காலனி, திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தும், திறந்தவெளி வாகனத்திலும் தொண்டர்களோடு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ராயபுரம் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவினர் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்க நினைப்பதாக  குற்றச்சாட்டு

சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார், வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக அங்குள்ள கோயில்களில் அமைச்சர் ஜெயக்குமார் வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், திமுகவினர் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்க நினைப்பதாக குற்றம்சாட்டினார்.

அரக்கோணம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ். ரவி தீவிர வாக்கு சேகரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர் எஸ்.ரவி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக வேட்பாளரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான எஸ். ரவி, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் தொகுதிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர், ஷா நகர், லட்சுமி நகர், ரயில்வே குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்தார். தொகுதிக்காக செய்த நலத்திட்டங்களை மக்களிடையே கூறி அவர் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் திட்டங்கள் வருகின்றன - நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எல்.ஏ பாஸ்கர்

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் 3 வது முறையாக போட்டியிடும் எம்.எல்.ஏ பாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நவனி, தத்தாத்திரிபுரம், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் பரப்புரையில் ஈடுபட்ட வேட்பாளர் பாஸ்கர், மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.மேலும் அங்கிருந்த மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார்.

மக்களிடையே தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீதி வீதியாக சென்று பிரச்சாரம்

கரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெங்கமேடு, அன்னை சத்யா தெரு, விவிஜி நகர், காமரஜர் நகர், பூங்குயில் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆதரவாளர்களுடன் சென்று மக்களை சந்தித்து இரட்டை இலைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மக்களிடையே அதிமுக அரசின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக்கூறி அவர் வாக்குச் சேகரித்தார்.

மயிலாடுதுறை தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் சம்சுதீன் பிரச்சார வாகனத்தை கயிறு கட்டி இழுத்துச் சென்று பிரச்சாரம்

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சம்சுதீன், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பிரச்சார வாகனத்தை கயிறு கட்டி இழுத்துச் சென்று வாக்கு சேகரித்தார். மயிலாடுதுறை பட்டமங்கலத்தெரு, ஸ்டேட் பேங்க் ரோடு பகுதிகளில் ஆதரவாளர்களுடன் பிரச்சார வாகனத்தை இழுத்து சென்ற அவர், யானை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்போது உடனிருந்த ஒரு பெண் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து விறகு அடுப்பை ஏந்தி வந்தார்.

பவானியில் அதிமுக வேட்பாளர் கே.சி.கருப்பணன் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

பவானி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.சி.கருப்பணன் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கருப்பமூப்பனூர், குறிச்சி காலனி, அக்கரையூர், பாச்சக்காரணுர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக தேர்தல் அறிக்கையின் அம்சங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்த அவருடன், திரளான கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் த.மா.கா வேட்பாளர் யுவராஜா வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பு 

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் யுவராஜா அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக கூட்டணியில் இத்தொகுதியில் போட்டியிடும் அவர், வீரப்பன் சத்திரம், அண்ணா திரையங்கம் சாலை, பவானி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த அவருடன், திரளான கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு எதிராக அதிமுக - பா.ஜ.க.வினர் தர்ணா

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திமுகவினருக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி, அதிமுக - பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள ஆயிரம் விளக்கு தொகுதி தேர்தல் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக - பா.ஜ.க.வினர், தபால் வாக்கு செலுத்தும் நபர்களின் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் அங்கையற்கண்ணி திமுகவினருக்கு மட்டும் முன்கூட்டியே கொடுத்துவிட்டதாகவும், தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் புகார் கூறினர். தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலர் அங்கையற்கண்ணி மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போடி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் டிரம்செட் இசைத்து பிரச்சாரம்

தேனி மாவட்டம் போடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் ட்ரம்செட் இசைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திறந்தவெளி லாரியில் திருநங்கைகள் ஆட்டம் பாட்டத்துடன் பிரச்சாரம் தொடங்கியது. சர்ச் தெரு, கீழதெரு ,கட்டபொம்மன் சிலை ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தங்கதமிழ்ச்செல்வன் பேண்ட் செட் கலைஞர்கள் வாழும் பகுதியில் டிரம்செட் இசைத்து பிரச்சாரத்தில் ஈடுபட ,இசைக்கு ஏற்றவாறு அங்கிருந்த பெண்களும்,சிறுவர்களும் உற்சாகமாக நடனமாடினர்.

கோவை தெற்குத் தொகுதியில் நடிகை நமீதாவுடன் நடனமாடியபடி வாக்கு கேட்ட வானதி சீனிவாசன்

கோவை தெற்குத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன், நடிகை நமீதாவுடன் சேர்ந்து நடனமாடியபடி வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேள தாளத்துக்கு ஏற்ப இருவரும் நடனமாடினர்.

தொடர்ந்து பேசிய நடிகை நமீதா, அதே தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றும் கடவுள் நம்பிக்கையும் கலாச்சாரமும் கொண்ட தமிழக மக்கள் அந்த நம்பிக்கை இல்லாத ஒருவருக்கு எப்படி வாக்களிப்பது என்றும் கேள்வி எழுப்பினார் . சாதாரணமாக பேசி முடித்த நமீதாவிடம் அவரது பிரபலமான வார்த்தையை கூறுமாறு வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுக்கவே, உற்சாகத்துடன் மைக்கை வாங்கி, “தாமரைக்கு ஓட்டு போடுங்க மச்சான்” என்று கேட்டுக்கொண்டார்.

சென்னை அண்ணாநகர் தொகுதியில் மநீம வேட்பாளர் பொன்ராஜுக்கு ஆதரவாக கமல் பிரச்சாரம்

சென்னை அண்ணாநகர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் பொன்ராஜுக்கு ஆதரவாக அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ காலனி உள்ளிட்ட பகுதிகளில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பேப்பர் இல்லாமல் இயங்கும் டிஜிட்டல் கட்சி மக்கள் நீதி மய்யம் என தெரிவித்தார். தேர்தலுக்காக நேர்மையை பற்றி பேசவில்லை என்றும், தலைமை நேர்மையாக இருந்தால் அடிமட்டம் வரையில் நேர்மை இருக்கும் எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கட்சியும்,சின்னமும் புதுசு;யாரையும் ஏமாற்ற மாட்டோம் எனக் கூறி விக்கிரவாண்டி அமமுக வேட்பாளர் அய்யனார் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் அய்யனார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வி.சாலையிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கிய அவர் வி.சாலை, கொங்கராம்பூண்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தார். சாலை , பேருந்து வசதி ஆகியவை செய்து தருவேன் என வாக்குறுதி அளித்த அவர் எங்களது கட்சியும் புதுசு, சின்னமும் புதுசு,நாங்கள் யாரையும் ஏமாற்ற மாட்டோம் என்றார்.

சென்னை வேளச்சேரி அதிமுக வேட்பாளர் அசோக் தரமணி பேருந்து நிலைய பகுதியில் கொம்பு சுற்றி சண்டை போட்டு வாக்கு சேகரிப்பு

சென்னை வேளச்சேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அசோக்,  சிலம்பம் ஆடிய இளைஞருடன் கொம்பு சுற்றி சண்டையிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தரமணி பேருந்து நிலையம், அண்ணா தெரு உள்ளிட்ட பகுதிகளில் தனது ஆதரவாளர்களுடன் சென்ற அசோக், இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பூம்புகாரில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பி.காளியம்மாள் திறந்த வாகனத்தில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பி.காளியம்மாள் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தரங்கம்பாடி, ஒழுகைமங்கலம், அனந்தமங்கலம் உள்ளிட்ட இடங்களில் வீதிவீதியாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த வாகனத்தில் சென்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர், கரும்பு சின்னத்தில் தனக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம் கூட்டணி கட்சியினருடன் திரண்டு சென்று வாக்கு சேகரிப்பு

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம் தொண்டர்களுடன் திரண்டு சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னாள் அமைச்சரான வி.சோமசுந்தரம் , உத்திரமேரூர் கிழக்கு, பினாயூர், வாலாஜாபாத், கலியபேட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு ஆதரவாளர்கள் மற்றும் பாமக, பாஜக கட்சியினருடன் சென்று அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி கூறி வாக்கு சேகரித்தார்.

பென்னாகரம் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி தீவிர தேர்தல் பிரச்சாரம்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக தலைவர் ஜி.கே. மணி தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் பேருந்து நிலையம், வாட்டர் பால்ஸ்,  சத்திரம், இந்திரா நகர் காலனி, ராணிப்பேட்டை, ஊட்டமலை நாடார் கொட்டாய்  உள்ளிட்ட கிராமப் புறங்களில் ஊர்வலமாக சென்றும், திறந்தவெளி வாகனத்தில் சென்றும் வாக்கு சேகரித்தார்.

வில்லிவாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகர் வாக்கு சேகரிப்பு

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜே.சி.டி.பிரபாகர், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றால், வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் வாக்குறுதி அளித்து அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஏமாறுகிற கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றும் கூட்டம் இருக்கும் மாறுதலுக்கான தேர்தலுக்காக எடுத்து கொண்டு எனக்கு வாக்களியுங்கள்- சீமான்

திருப்பூர் தெற்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சண்முகசுந்தரம் மற்றும், வடக்கு தொகுதி வேட்பாளர் ஈஸ்வரன் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஏமாறுகிற கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றும் கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கும் என தெரிவித்தார். தான் ஆட்சிக்கு வந்தால் நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருப்பார்கள் எனக்கூறிய சீமான், இதனை மாறுதலுக்கான தேர்தலாக எடுத்து கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் டி.கே.எம் சின்னையா தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரிப்பு

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டி.கே.எம் சின்னையா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக ஆதரவாளர்களுடன் கிழக்கு தாம்பரம், சேலையூர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மக்களிடையே அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

சென்னை ஆர் கே நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் கேரம் விளையாடி பிரச்சாரம்

சென்னை ஆர் கே நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜே. ஜே. எபினேசர் கேரம் போர்டு விளையாடி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க பிரச்சாரத்தை தொடங்கிய அவர் புதுவண்ணாரப்பேட்டை,வீரராகவன் தெரு, செரியன் நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். மேலும் கேரம் விளையாட்டு கிளப்பில் வேட்பாளர் எபினேசர் கேரம் விளையாடினார்.கூட்டத்தில் வந்த பெண்களும்,சிறுவர்களுக்கு திமுகவினர் வழங்கிய குளிர்பானங்களை முண்டியடித்துக்கொண்டு வாங்கிச்சென்றனர்.

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தீவிர தேர்தல் பிரச்சாரம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து அக்கட்சியின் மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்த அவர், திமுகவின் வெற்றி தற்போதே உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறினார்.

சென்னை தி நகர் தொகுதி திமுக வேட்பாளர் கருணாநிதி  தீவர பிரச்சாரம் 

சென்னை தியாகராய நகர் தொகுதி திமுக வேட்பாளர் கருணாநிதி, தனது ஆதரவாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாண்டி பஜார் ,வெங்கட நாராயண் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு திறந்தவெளி வாகனத்தில் சென்ற அவர், உதயசூரியனுக்கு வாக்கு திரட்டினார்.

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர் கே.பழனி  வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் களம்காணும் அதிமுக வேட்பாளர் கே. பழனி வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சுங்குவார்சத்திரம் பஜாரில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பின், ஈ.பி காலனி, சந்தவேலூர், பாப்பான்குழி, சித்தூர், நந்திமேடு பகுதிகளில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கிய அவர், இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் திறந்தவெளி வாகனத்தில் சென்றவாறு தீவிர வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஜெயசீலன் ஆகியோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். விளவங்கோடு தொகுதிக்குபட்பட்ட பயணம் பகுதியில் உள்ள செண்பகவல்லி ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கிய இருவரும், திறந்தவெளி வாகனத்தில் சென்றவாறு  வாக்கு சேகரித்தனர்.

பரமக்குடியில் தேநீர் தயாரித்து விற்பனை செய்து வாக்கு சேகரித்த  அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சதன் பிரபாகர், சாலையோரக் கடையில் தேநீர் விற்பனை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனையடுத்து கொல்லம் பட்டறைத் தெருவிலுள்ள ஒரு டீக்கடைக்கு சென்ற அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர், தேநீர் தயாரித்து விற்பனை செய்தவாறு வாக்கு சேகரித்தார்.

பழனி திமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து அவரது 13 வயது மகன் பிரச்சாரம் 

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக அவரது 13 வயது மகன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டான்.  அரசியல்வாதியை போன்று கட்சி வேட்டி சட்டை அணிந்து கொண்டு பழனியை அடுத்த ஆயக்குடியில், போடுங்கம்மா ஓட்டு உதய சூரியனை பார்த்து என்று கோஷம் எழுப்பியபடியே வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டான்.

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் பூக்கட்டி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் வரதராஜன்

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வரதராஜன் பூக்கடையில் பூக்கட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்கு உட்பட்ட டீச்சர்ஸ் காலணி, மரப்பட்டை வீதி, தன்னாசி அம்மன் கோவில் வீதி பகுதிகளில் நடந்து சென்ற அவர், மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கி உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பூக்கடை ஒன்றில் திமுக ஆதரவாளர் ஒருவடன் பூக்கட்டி வாக்கு சேகரித்தார்.

முதுகுளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தீவிர பிரச்சாரம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜகண்ணப்பன், பல்வேறு கிராமங்களில் வாக்குசேகரித்தார். பிரச்சாரத்தின்போது பேசிய அவர், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத கூத்தன் கால்வாய் சீரமைக்கப்பட்டு விவசாயிகள் நலன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

பொதுமக்களுக்கு கரும்பு ஜூஸ் போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்த காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் எழிலரசன்

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எழிலரசன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பூக்கடை சத்திரம், பேருந்து நிலையம், பிள்ளையார்பாளையம், புத்தேரி தெரு, ஏகாம்பர நாதர் சன்னதி தெரு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது கரும்பு ஜூஸ் கடைக்கு சென்ற எழிலரசன், பொதுமக்களுக்கு கரும்பு ஜூஸ் போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்தார்.

வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த மதுரவாயல் தொகுதி திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் காரம்பாக்கம் கணபதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இத்தொகுதிக்குட்பட்ட ஆலப்பாக்கம், அயப்பாக்கம், வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த அவருடன், கூட்டணிக் கட்சியினர் இருசக்கர வாகனங்களில் கலந்து கொண்டனர்.

கலசப்பாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புதுப்பாளையம் ஒன்றியம் கல்லரப்பாடி, விஸ்வநாதபுரம், ஆலத்தூர், ஒரவந்தவாடி, காஞ்சி உள்ளிட்ட கிராமங்களில் திறந்தவெளி வாகனத்தில் கிராமம் கிராமமாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது, விவசாய நிலத்தில் நிலக்கடலைக்கு களை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களுடன் இணைந்து, களைகொத்தியால் களைவெட்டி வாக்கு சேகரித்தார்.

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தச்சாம்பாடி, நரசிங்கராயன்பேட்டை, கர்ணாம்பாடி, சித்தாத்துரை, தொழுப்பேடு, குளக்கரைவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த அவர் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அதிமுக வேட்பாளர் ப.குமார் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்‍. நேருஜி நகர், சீனிவாசன் நகர், காமராஜர் நகர், அப்துல் கலாம் ஆசாத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகவும், திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்றும், வாக்கு சேகரித்தார்‍. அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுபிரசுரங்களை மக்களிடம் விநியோகித்த ப.குமார்,எம்எல்ஏவாக பதவியேற்ற 6 மாதத்திற்குள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து ஆதரவு திரட்டினார்.

மக்களவை தேர்தலை போலவே திமுகவை பெற்றி பெற செய்ய வேண்டும்- உதயநிதி

கடந்த மக்களவை தேர்தலில் திமுகவுக்கு தந்த வெற்றியை போலவே இந்த சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகவிற்கு வெற்றியை அளிக்க வேண்டும் என திமுகஇளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பனை ஆதரித்து சிங்கம்புணரி பஸ் நிலையம் முன் திறந்த வேனில் நின்று அவர் பிரசாரம் மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

மலைவாழ் மக்களிடையே வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார், மலைவாழ் மக்ககளிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‍. சமாங்குளி, பெரும்பதி, பெருக்கைபதி, உள்ளிட்ட மலை கிராம மக்களிடம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்‍.

தேநீர் அருந்தியும், துண்டுபிரசுரங்களை விநியோகித்தும் அவர் பரப்புரை மேற்கொண்டார். சாலை மற்றும் பேருந்து வசதிகளை செய்து தருவதாக வாக்குறுதியளித்து அவர் ஆதரவு திரட்டினார்‍.

நன்னிலம் அதிமுக வேட்பாளர் அமைச்சர் காமராஜ் தேர்தல் பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் காமராஜ் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சொரக்குடி கண்ணாயிரமூர்த்தி ஐய்யனார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார்.

கோயிலில் இருந்து வெளியே வந்த அமைச்சரிடம் வாசலில் நின்றிருந்த பெண்கள், வெயிலில் அலைய வேண்டாம், உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள், நாங்கள் இருக்கிறோம் என கூறினார். இதனை பார்த்து நெகிழ்ச்சி அடைந்த அமைச்சர் காமராஜ் கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தார். 

இராசிபுரம் திமுக வேட்பாளர் மதிவேந்தன் தீவிர வாக்குச் சேகரிப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர்.மதிவேந்தன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்‍. முள்ளுக்குறிச்சி, நாரைக்கிணறு, ஒத்தக்கடை, மெட்டாலா, உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட அவர், வாக்காளர் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார். திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை எடுத்துக்கூறி மதிவேந்தன் பரப்புரை மேற்கொண்டார்.

கலசப்பாக்கம் திமுக வேட்பாளர் சரவணன் தேர்தல் பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் களமிறங்கும் திமுக வேட்பாளர் சரவணன் மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரித்தார். நந்திமங்கலம், பனையோலைபாடி, அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆதரவாளர்களுடன் சென்ற அவர், உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாட்டுவண்டியில் சென்றும்  பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திறந்த வேனில் வீதி, வீதியாக சென்று பனையூர் பாபு ஓட்டு வேட்டை

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தனித்தொகுதியில்  திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பனையூர் பாபு, வீதி, வீதியாக சென்று, தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்டபகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்த வேனில் பனையூர் பாபு பிரசாரம் செய்தார். கர்ப்பிணி பெண்களுக்கு வீடு தேடி மருத்துவ வசதி செய்து கொடுக்கப் படும் என  அவர் வாக்குறுதி அளித்தார்.

கிராமம் - கிராமமாக சென்று கே.பி.அன்பழகன் தீவிர வாக்கு சேகரிப்பு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன்,கிராமம் - கிராமமாக சென்று, தீவீர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ரெட்டியூர், நல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று, அதிமுக வேட்பாளர் கே.பி. அன்பழகன், வாக்கு சேகரித்தார்.

விசிக வேட்பாளர் எஸ்.எஸ். பாலாஜி தேர்தல் பிரச்சாரம்

திருப்போரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் எஸ்.எஸ் .பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

காலவாக்கம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்த அவர், பானை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி ஆதரவு திரட்டினார். மேலும் அவருக்கு ஆதரவாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ இதயவர்மனும் வாக்கு சேகரித்தார்.

ஏழைகளை செழிப்பு கோட்டில்  நிறுத்துவதே ம.நீ.ம.வின் நோக்கம்- கமல்

ஏழைகளை ஏழ்மை கோட்டில் இருந்து செழிப்புக் கோட்டில் நிறுத்துவதே மக்கள் நீதி மய்யத்தின்நோக்கம் என அந்த கட்சியின்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்‍. அந்த கட்சியின் சார்பாக அம்பத்தூரில் போட்டியிடும் எஸ்.வைத்தீஸ்வரன் மற்றும் ஆவடி வேட்பாளர் உதயக்குமாரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், தனது சொந்த செலவிலே,ஹெலிகாப்டரில் பிரச்சாரத்திற்கு செல்வதாக விளக்கமளித்தார்‍.

சேலம் தெற்கு அதிமுக வேட்பாளர் பாலசுப்ரமணியன் தேர்தல் பிரச்சாரம்

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாலசுப்ரமணியன் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட கருங்கல்பட்டி பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் சென்றவாறு வாக்கு சேகரித்த அவர், சேலத்தில் ஜவுளி பூங்கா கொண்டுவர முழு முயற்சி மேற்கொள்வேன் என வாக்குறுதி அளித்தார். 

அமைச்சர் சரோஜாவை ஆதரித்து மின்துறை அமைச்சர் தங்கமணி பரப்புரை

அதிமுக அரசின் சாதனை கூறி, முதலமைச்சர் உள்ளிட்டோர் வாக்கு சேகரிப்பதாகவும், ஆனால்,  பிரச்சாரம் என்ற பெயரில் எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களை கூறுவதாகவும், அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான டாக்டர் சரோஜாவை ஆதரித்து, அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் சென்று, இராசிபுரம் கடைவீதி, சிங்களாந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில், அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரித்தார். 

ஒருபுறம் போடுங்கம்மா ஓட்டு உதயசூரியன பார்த்து... மறுபுறம் உங்கள் சின்னம் குக்கர்!

சென்னை அண்ணா நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எம்.கே.மோகனும், அமமுக சார்பில் போட்டியிடும் குணசேகரனும் பள்ளிவாசல் முன் போட்டிப் போட்டுக்கொண்டு வாக்குசேகரித்தனர்.

அண்ணா நகர் மூன்றாவது அவெனியுவில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்து வெளியில் வந்த இஸ்லாமியர்களிடம் வாக்குசேகரிக்க திமுக மற்றும் அமமுக நிர்வாகிகள் ஒரே நேரத்தில் குவிந்தனர்.

ஒரு புறம் போடுகம்மா ஓட்டு உதயசூரியன பார்த்து... என திமுகவினர் கோஷமெழுப்ப மற்றொரு புறம் உங்கள் சின்னம் குக்கர் சின்னம் என அமமுகவினர் கோஷமிட்டனர்.

பெண்களுக்கு தனி நீதிமன்றம் மாவட்டம் தோறும்  உருவாக்கப்படும் - கனிமொழி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து, திமுக எம்பி கனிமொழி பனமலைப்பேட்டை கிராமத்தில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். த

மிழகத்தின் கலாச்சார கொள்கைகளை பாதுகாக்க வேண்டிய தேர்தல் இது என்று குறிப்பிட்ட கனிமொழி, திமுக ஆட்சி வந்தவுடன் பெண்களுக்கு தனி நீதிமன்றம் மாவட்டம் தோறும் உருவாக்கப்படும், விக்ரவாண்டியில் அரசு கலைக் கல்லூரி கட்டப்படும் என உறுதி அளித்தார்.

உருது மொழியிலும் பேசி தீவிர வாக்குசேகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி, உருது மொழியிலும் பேசி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

ஓசூரில், இஸ்லாமியர் அதிக அளவில் வசிக்கக் கூடிய இமாம்பாடா, கும்பார் பேட்டை, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை, உருது மொழியில் சரளமாக எடுத்துக்கூறி, அவர் வாக்கு சேகரித்தார். 

மநீம வேட்பாளர் சுரேஷ் பூக்கட்டி வாக்கு சேகரித்தார் 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சுரேஷ் பூக்கடையில் மாலை கட்டி வாக்கு சேகரித்தார்.

வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்ற அவர், டார்ச் லைட் சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பூக்கடைக்கு சென்ற அவர், மாலை கட்டிக் கொடுத்து ஆதரவு திரட்டினார்.

கோவை தெற்கு காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் பிரச்சாரம்

கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மயூரா ஜெயக்குமார், காவலர் குடியிருப்பில் வாக்குசேகரித்தார்.

பாலசுந்தரம் சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி, காவலர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தன்னுடைய தொலைபேசி எண்ணை வைத்துக்கொள்ளுங்கள், வெற்றிபெற்ற உடன் கோரிக்கைகளை தொலைப்பேசி வாயிலாக கூறினால் உடனடியாக நிறைவேற்றுவேன் என தெரிவித்தார். 

ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 3 கட்சிகள் இஸ்லாமியர்களிடம் தீவிர ஓட்டு வேட்டை

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட ஐஸ் ஹவுஸ் மசூதி வாசலில் திமுக, பாமக, அ.ம.மு.க நிர்வாகிகள், போட்டிப் போட்டுக் கொண்டு,இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தனர். அங்கு திமுக நிர்வாகிகள், துண்டு பிரசுரம் விநியோகித்து, அக்கட்சியின் வேட்பாளர் உதயநிதிக்கு வாக்கு சேகரித்தனர்.

பாமக வேட்பாளர் கசாலி, அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, மசூதி வாசலில் நின்று, இஸ்லாமியர்களிடம் ஆதரவு கோரினார்.

அ.ம.மு.க வேட்பாளர் ராஜேந்திரன், எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்களோடு இணைந்து ஆதரவு திரட்டினார். வாக்கு சேகரிப்பின் போது, பாமக - அமமுக வேட்பாளர்கள் பரஸ்பரம் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

திருத்தணி திமுக வேட்பாளர் சந்திரன் வீதி, வீதியாக ஓட்டு வேட்டை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ். சந்திரன்,வீதி, வீதியாகவும், வீடு, வீடாகவும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவாலங்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் ஓட்டு வேட்டையில் ஈடுபட்ட வேட்பாளர் சந்திரன், தமக்கு வாய்ப்பு வழங்குமாறு, வாக்காளர்களை கேட்டுக்கொண்டார். திமுக வேட்பாளருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடன் சென்று ஆதரவு திரட்டினர்.

தொண்டாமுத்தூரில் எஸ்பி வேலுமணியை ஆதரித்து தொண்டர் நூதன பிரசாரம்

கோவை தொண்டாமுத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் வேலுமணியை ஆதரித்து, ராஜா என்பவர் கண்களையும், முகத்தையும் கருப்பு துணியால் கட்டிக்கொண்டு, சாலையில் ஸ்கூட்டரை ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழுதடைந்து மோசமாக இருந்த சாலைகள், எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மேம்படுத்தபட்டுள்ளதை எடுத்துக்காட்டும் விதமாக இந்த முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

கும்மிடிப்பூண்டி பாமக வேட்பாளர் வி.எம். பிரகாஷ் வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி பாமக வேட்பாளர் வி.எம். பிரகாஷ் கூட்டணிக் கட்சியினருடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சாலைகளில் மாம்பழம் சின்னத்தை கோலமிட்டு பட்டாசு வெடித்து பாமகவினர் வரவேற்பு அளித்தனர். பூரண கும்ப மரியாதை மற்றும் ஆரத்தி எடுத்தும் பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கிராம மக்கள் சால்வை அணிவித்து அவர் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். வேட்பாளருக்கு பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது.

இ.பி.எஸ் ஆட்சி தொடர அரசியல் ஞானிகள் விருப்பம் - கே.சி.வீரமணி

தமிழ்நாட்டில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர வேண்டும் என அரசியல் ஞானிகள் எதிர்பார்ப்பதாக கூறி, அமைச்சர் கே.சி.வீரமணி பரப்புரையில் ஈடுபட்டார்.

ஜோலார்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.சி.வீரமணி, பெத்தகல்லுப்பள்ளி, கேத்தாண்டப்பட்டி, கூத்தாண்டக்குப்பம், சின்னமேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மரத்தடியில் அமர்ந்து மக்களின் குறைகளை கேட்டு வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தருண் மரத்தடியில் அமர்ந்து மக்களின் குறைகளை கேட்டு வாக்கு சேகரித்தார்.அம்மாப்பாளையம், சந்தியூர் ஆட்டையாம்பட்டி, மூக்குத்திப்பாளையம் பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்த அவர் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அதைத்தொடர்ந்து, வாழக்குட்டப்பட்டியில் மரத்தடியில் மக்களுடன் அமர்ந்து பேசிய திமுக வேட்பாளர் தருண் அவர்களது குறைகளை கேட்டு அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதாக உறுதியளித்தார்.

பாமக வேட்பாளர் டி.கே.ராஜா வீதி வீதியாக சென்று வாக்குச் சேகரிப்பு

திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் டி.கே.ராஜா வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்தார்‍.

கலைஞர் நகர், அண்ணா நகர், காமராஜர் நகர், உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட அவர், தொகுதியின்வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதாக உறுதியளித்து ஆதரவு திரட்டினார்‍. மாணவிகள் சிலர் நடனமாடி டி.கே.ராஜாவிற்கு வாக்கு சேகரித்தனர்‍.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஜே.பி. நட்டா பிரச்சாரம்

தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாக கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

திட்டக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் பெரியசாமியை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், யாதும் ஊரே யாவரும் கேளிர் என தமிழில் கூறி தமிழ் மொழி உலகத்திற்கு கிடைத்த கொடை என்றார். பஞ்சமி நிலம் மீட்கப்படும் என்றும் ஜே.பி நட்டா உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டம் திருவையாறு சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து, நடைபெற்ற கூட்டத்தில் நட்டா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், திமுக காங்கிரஸ் கட்சியை தமிழக மக்கள் தேர்தலில் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

வேட்பாளரைப் பார்த்ததும் உற்சாகமாகி சிலம்பம் சுற்றிய முதியவர்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்குச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கீழக்கோட்டை, கொல்லங்கிணறு, ஐயப்பாபுரம், கொடியன்குளம், நாரைக்கிணறு ஆகிய கிராமங்களுக்குச் சென்ற அவர், கூட்டணி கட்சியினருடன் தனக்கு ஆதரவு திரட்டினார்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடையே எடுத்துக் கூறி அவர் வாக்கு சேகரித்தார். வேட்பாளரைப் பார்த்ததும் உற்சாகமடைந்த தொண்டர் ஒருவர் சிலம்பம் எடுத்து சுற்றத் தொடங்கினார்.

கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் பள்ளிவாசலில் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்குமார், இஸ்லாமியர்கள் போன்று தலையில் தொப்பி அணிந்து பள்ளிவாசலில் வாக்குசேகரித்தார்.

கள்ளக்குறிச்சி பேருந்துநிலையம் அருகே உள்ள பெரிய பள்ளிவாசலுக்கு ஆதரவாளர்களுடன் சென்ற அவர், தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் ஆதரவு திரட்டினார்.

மக்களை எதிர்கொள்ள முடியாமல் வாகனத்தில் ஏறிச் சென்ற அதிமுக வேட்பாளர்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏவும் அதிமுக வேட்பாளருமான சண்முகநாதன் வாக்கு கேட்டு சென்றபோது, அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். ச

ண்முகாபுரத்தில் அவரது வருகைக்காக காத்திருந்த மக்கள், எம்.எல்.ஏவின் வாகனம் வந்ததும் சண்முகநாதனை கீழே இறங்கச் சொல்லி சூழ்ந்துகொண்டு கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.

பொதுமக்களின் கேள்விக்கணைகளை எதிர்கொள்ள முடியாமல் அங்கிருந்து நழுவிய வேட்பாளர், அடுத்த ஊருக்குச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மீண்டும் ஆதரவு தருமாறு, இஸ்லாமியர்களிடம் திமுக வேண்டுகோள்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் ஐ. பெரியசாமி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சித்தையன்கோட்டை பெரிய பள்ளி வாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து, வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் ஐ. பெரியசாமி ஆதரவு திரட்டினார்.

தொடர்ந்து ஒரே தொகுதியில் தாம் போட்டியிட்டு வருவதாக தெரிவித்த வேட்பாளர் ஐ. பெரியசாமி, மீண்டும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதும், குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்தபோதும் திமுக எதிர்ப்பு தெரிவித்ததை
நினைவு கூர்ந்த ஐ. பெரியசாமி, இஸ்லாமியர்களுக்கு என்றும் துணை நிற்போம் என உறுதி அளித்தார்.

தமிழக முதலமைச்சர் ராசியான மனிதர், ஆதலால் மழை பொழிந்தது - ஜி.கே.வாசன்

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சைதை துரைசாமியை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழக முதலமைச்சர் ராசியான மனிதர் எனவும், அவருடைய ராசியினால் தான் தமிழகத்தில் மழை பொழிந்து செழிப்புடன் உள்ளது என்றும் தெரிவித்தார். ராசியானவரின் ஆட்சி மீண்டும் அமைய இரட்டை இலைக்கு வாக்களிக்கவேண்டுமெனவும் ஜி.கே. வாசன் கேட்டுக்கொண்டார்.  

கைக்குலுக்கி வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்ட மோதும் வேட்பாளர்கள்

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அமமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி பரஸ்பர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர் எழிலனும், அமமுக வேட்பாளர் வைத்தியநாதனும் வாக்குசேகரிப்பின்போது எதிர்பாராதவிதமாக ஒரே இடத்தில் சந்தித்தனர். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

முல்லைப் பூவை முழும் போட்டு அளந்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

சென்னை விருகம்பாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவி, பூக்கடையில் பூவை முழம் போட்டு அளந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விஜயராகவபுரம் பகுதியில் மேளம் தாளம் முழங்க நடந்து சென்று, துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்த அவர், ஒரு பெண் பூ வியாபாரியிடம் ஆதரவு திரட்டினார். அப்போது, பூக்கடையில் இருந்த முல்லை பூவை கச்சிதமாக அவர் முழம் போட்டதை அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

ஸ்டாலின் குறித்து பாட்டுப்பாடி பேச்சைத் தொடங்கிய லியோனி

திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான வி.ஜி.ராஜேந்திரனை ஆதரித்து பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் மேற்கொண்டார். கனகம்மாசத்திரம் பகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்கிய லியோனி, ஸ்டாலினைப் புகழ்ந்து பாடல் ஒன்றைப் பாடினார்.

தற்போது கருப்பு பேண்ட் அணிந்திருக்கும் தாம், ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் திமுக கரைவேட்டியைக் கட்டுவேன் என்றார்.

சட்டசபைத் தேர்தலையொட்டி 3- வது நாளாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரப்புரை

சட்டசபைத் தேர்தலையொட்டி 3 வது நாளாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார்‍.

பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அனகை முருகேசனை ஆதரித்து, அவர் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்‍. திறந்த வாகனத்தில் நின்றவாறு, திரண்டிருந்த மக்களை நோக்கி வணங்கியும்,வெற்றிக்குறியை காட்டியும், தேமுதிக வேட்பாளருக்கு விஜயகாந்த் ஆதரவு திரட்டினார்‍.

அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது - அன்புமணி

தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதிக்குட்பட்ட கம்பைநல்லூரில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சம்பத்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என்றும் அதனால் மாநிலம் அமைதியாக உள்ளது என்றும் கூறினார்.

பெண்களுக்குப் பயன்படும் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அதிமுக கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் உள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

எடப்பாடியில் முதலமைச்சருக்கு ஆதரவாக அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக, அதிமுகவினர் கிராமம் கிராமமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கொங்கணாபுரம் ஒன்றியம் தங்காயூர் ஊராட்சிக்குட்பட்ட அம்மன்காட்டூர், கோணங்குட்டையூர் ஆகிய பகுதிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பெண்களிடம், அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.

தரையில் பாய் போட்டு அமர்ந்து மக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் 

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் பிரச்சாரத்துக்குச் சென்றபோது, அவரை பாடல் பாடி வரவேற்ற மூதாட்டிக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

கன்னியாகுமரி தொகுதியில் அஞ்சுகிராமம், ஜேம்ஸ்டவுன், ரஸ்தாகாடு, நிலப்பாறை உள்ளிட்ட கிராமங்களில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது மூதாட்டி ஒருவர் முன்னாள் அதிமுகவைப் புகழ்ந்து பாடல் ஒன்றைப் பாடினார்.

தரையில் பாய் போட்டு அமர்ந்து மக்களிடம் அரசின் சாதனைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் தளவாய் சுந்தரம் எடுத்துக் கூறினார். 

இசுலாமியர்களிடையே வாக்கு சேகரித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,இசுலாமியர்களிடையே வாக்கு சேகரித்தார்‍.பெரிய பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இசுலாமியர்களிடம் அவர் ஆதரவு திரட்டினார். சிறுபான்மையினருக்கு எப்போதும் அதிமுக பாதுகாப்பாக இருப்பதாகக் கூறி, அவர் வாக்கு சேகரித்தார்.

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை பெற்றுத்தரப்படும் - கனிமொழி

விழுப்புரம் மாவட்டத்தில், திமுக மகளிரணிச் செயலாளரும், எம்.பி.யுமான மு.க.கனிமொழி பரப்புரை மேற்கொண்டார். விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தி, விழுப்புரம் திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணன், வானூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வி.சி.க வேட்பாளர் வன்னியரசு ஆகியோருக்கு வாக்கு சேகரித்தார்.

கரும்பு விவசாயிகளுக்கு சென்று சேர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நிலுவைத் தொகை, திமுக ஆட்சி அமைந்ததும், உடனடியாக பெற்றுத் தரப்படும் என மு.க.கனிமொழி வாக்குறுதி அளித்தார்.

இலவசங்களால் ஏழ்மையைப் போக்க முடியாது - ம.நீ.ம தலைவர் கமல்

தமிழ்நாட்டில் இலவசங்களால் ஏழ்மையைப் போக்க முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் தங்கள் கட்சியின் வேட்பாளர் டாக்டர் மகேந்திரனை ஆதரித்து, பாப்பநாயக்கன் பாளையம், உப்பிலிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட கமல் இவ்வாறு தெரிவித்தார்.

கோவைத் தெற்கு தொகுதியில் நிச்சயம் வென்று, கோயம்புத்தூரில் குடியேறப் போவதாகவும், கமல் கூறினார். பாதுகாக்கப்பட்ட குடிநீர் கோரினால், அதற்கு மாற்றாக பல்வேறு இலவச பொருட்கள் திட்டங்களை அறிவிப்பதாக கமல் வேதனை தெரிவித்தார்.

பாஜக -த.மா.கா நிர்வாகிகளுடன் வேட்பாளர் பொன் சரஸ்வதி ஓட்டு வேட்டை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொன்.சரஸ்வதி,இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார். இங்குள்ள ஜாமியா மஸ்ஜித்தில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம், அதிமுக அரசின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் விளக்கும் துண்டு பிரசுரங்களை விநியோகித்து, ஆதரவு திரட்டினார்.

அதிமுக வேட்பாளர் பொன் சரஸ்வதியுடன் பாஜக, த.மா.கா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடன் சென்று, பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

டீ கடையில் பொதுமக்களுக்கு டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அச்சரப்பாக்கம் பஜார் வீதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவர், அங்குள்ள ஒரு டீ கடைக்கு சென்று பொதுமக்களுக்கு டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்தார்.

அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு : அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் காஜா என்கிற ராஜேந்திரன்,கிராமம் - கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கருநீலம், வீராபுரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஆதரவு திரட்டிய அதிமுக
வேட்பாளர், தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என வாக்குறுதி அளித்தார்.

மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் ஐரோப்பாவிற்கு நிகராக தமிழகம் மாறும்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பிரகாசை ஆதரித்து, பாமக நிறுவனத் தலைவர் இராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார்.

எளாவூர், தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட பாமக நிறுவனர் இராமதாஸ், இயல்பாகவே விவசாயியாக உள்ள ஒருவர், 4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்திருப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று, மரபணு மாற்றம் பெற்று உருமாறிய வைரசாக பரவுவதால், முகக்கவசம் உள்ளிட்ட நோய் தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என, பொதுமக்களை இராமதாஸ் கேட்டுக் கொண்டார்.

தருமபுரி மாவட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பரப்புரை

தருமபுரி மாவட்டத்தில், அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பாமக இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி இராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும், பாமக தலைவர் ஜி.கே.மணி, தருமபுரி பாமக வேட்பாளர் வெங்கடேஸ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி, அரூர் அதிமுக வேட்பாளர் சம்பத்குமார் ஆகியோருக்காக வாக்கு கோரினார்.

40 ஆண்டுகால பாமக போராட்டத்தை மதித்து, ஆளும் அதிமுக அரசு, வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்கியிருப்பதாக, அன்புமணி குறிப்பிட்டார். 

சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரச்சாரம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ராஜா -வை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை செய்தார்.

வடக்கு ரத வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழக மேடையில் ஏறி உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி அடைவதாக வைகோ தெரிவித்தார்.

மதுரை மேற்கு அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு தீவிர தேர்தல் பிரச்சாரம்

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜு தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்த அவர், மூதாட்டியின் காலை தொட்டு வணங்கி வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது பேட்டியளித்த அவர், தன் மீது ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் பொது வாழ்க்கையில் இருந்து விலக தயார் என திட்டவட்டமாக கூறினார்.

பேருந்துகளில் ஏறி, பயணிகளிடம் ஆதரவு திரட்டிய வேட்பாளர்

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் த.மா.கா வேட்பாளர் ஜூடு தேவ், பேருந்துகளில் ஏறி, பயணிகளிடம் வாக்கு சேகரித்தார்.

கருங்கல் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடமும் ஆதரவு கோரிய வேட்பாளர், சாலைகளில் நடந்து சென்று சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை, வியாபாரிகளிடம் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

மத்திய - மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை விநியோகித்த வேட்பாளர் ஜூடு, கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன் ராதா கிருஷ்ணனுக்கும் வாக்கு சேகரித்தார்.

வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்த காங். வேட்பாளர் ராஜகுமார்

மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அங்குள்ள கழுக்காணி முட்டம் முத்து மாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பிரசாரத்தை துவக்கிய ராஜகுமார்,
கோவிலுக்கு வந்திருந்த பெண்களிடம் ஆதரவு திரட்டினார். திருவிழந்தூர், நீடூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் வீதி, வீதியாக சென்று காங்கிரஸ் வேட்பாளர், தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

வீதி, வீதியாக வலம் வந்து திமுக வேட்பாளர் ஓட்டு வேட்டை

திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி திமுக வேட்பாளர் ஸ்டாலின் குமார், வீதி, வீதியாக வலம் வந்து, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் திறந்த வாகனம் மூலம் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடன் சென்றனர். துறையூர் தொகுதியில் குடிநீர் பிரச்சினை, சாலை வசதி , மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும் என திமுக வேட்பாளர் ஸ்டாலின் குமார் வாக்குறுதி அளித்தார்.

விளாத்திகுளம் தொகுதி சமக வேட்பாளரை ஆதரித்து நடிகை ராதிகா வாக்குச்சேகரிப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி சார்பில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் வில்சனை ஆதரித்து நடிகை ராதிகா சரத்குமார் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். கீழ வைப்பார், குளத்தூர், வேம்பார் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்த அவர், மக்களின் முதல் கூட்டணியான தங்களுக்கு வாக்களித்து பெரும் வெற்றியை தருமாறு கேட்டுக்கொண்டார்.

அந்தியூரில் அமமுக வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வத்துக்கு ஆதரவாக டி.டி.வி. தினகரன் வாக்கு சேகரிப்பு

அந்தியூரில், அமமுக வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வத்தை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகம் 6 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்து கொண்டிருப்பதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் ஆறு குளங்கள் தூர்வாரப்பட்டதோ இல்லையோ கஜானா முற்றிலுமாக தூர்வாரப்பட்டு விட்டதாக தினகரன் குற்றம் சாட்டினார். எஸ்.ஆர்.செல்வம் வெற்றி பெற்றால் தோனி மடுவு திட்டம் நிறைவேற்றப்படுவதுடன், தினமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

திருப்போரூர் தொகுதி விசிக வேட்பாளர் பாலாஜி வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் எஸ்.எஸ். பாலாஜி மாமல்லபுரம் சாலையில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். இள்ளலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சி உறுப்பினர்களுடன் சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments