10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா? -மு.க.ஸ்டாலின் கேள்வி
திமுக ஆட்சிக்கு வந்தால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களிலும், நகரங்களிலும் சொந்தமாக ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு அரசுத் தரப்பில் 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆலந்தூர், பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 10 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் தொழிற்சாலைகளை உருவாக்கினார்களா? வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா என கேள்வி எழுப்பினார்.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பாக மத்திய அரசை விமர்சித்த ஸ்டாலின், தான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் உருவாக்கிய தொழிற்சாலைகள் பற்றிக் குறிப்பிட்டார். தொழில்முனைவோருக்கு நம்பிக்கை இல்லாததால்தான் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. காப்பியடித்துவிட்டதாக புகார் தெரிவித்த ஸ்டாலின், சென்னையில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த வெள்ளத்தடுப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்படும் என்றும், நகரின் அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
சென்னையில் ஏரிகள் தூர்வாரப்படும், நன்மங்கலம் ஏரியில் படகுசவாரி, ஓ.எம்.ஆர். சாலையில் அரசுப் பொது மருத்துவமனை, கண்ணகி நகரில் பாலிடெக்னிக் கல்லூரி, சோழிங்கநல்லூரில் இருந்து ஒக்கியம் மடுவுவரை மழைநீர் கால்வாய் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் என ஸ்டாலின் உறுதி அளித்தார்.
Comments