மாஸ்க் போடலைன்னா மர்டர் செய்யலாமா ? ஓடும் காரின் கதவை இழுத்து விபரீதம்..!

0 10785
மாஸ்க் போடலைன்னா மர்டர் செய்யலாமா ? ஓடும் காரின் கதவை இழுத்து விபரீதம்..!

மாஸ்க் அணியாமல் சென்ற கார் ஓட்டுனரிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்பதற்காக ஓடும் காரின் கதவை இழுத்து பா.ஜ.க பிரமுகரை காரில் இருந்து வெளியே விழ வைத்த நகராட்சி ஊழியர் மீது கொலை முயற்சி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த முகக் கவசம் அவசியம் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வரும் நிலையில் குளச்சல் நகராட்சி ஊழியர்கள் முகக் கவசம் அணியாமல் செல்வோரை மறித்து அபராதம் வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் அரசு பேருந்துகளில் முகக் கவசம் அணியாமல் பயணித்ததோடு அபராதம் செலுத்த இயலாதவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டனர். வாகனங்களை மறித்து கட்டாய வசூலில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பிரச்சாரத்துக்கு வந்து சென்ற பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் சென்ற கட்சி பிரமுகரின் காரை மறித்த நகராட்சி ஊழியர் ஒருவர் மாஸ்க் அணியாத கார் ஓட்டுனரை அபராதம் செலுத்திவிட்டு செல்லும் படி கூறினார்.

காரில் உள்ள மற்றவர்கள் மாஸ்க் அணிந்திருந்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் வேட்பாளர் சென்று விட்டதால் தாங்கள் அவருடன் செல்ல வேண்டும் என்று கூறி அங்கிருந்து அவர்கள் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர்.

கார் புறப்பட்டதும், காரை செல்லவிடக்கூடாது என்ற நோக்கத்தில், ஓட்டுனருக்கு அடுத்தபடியாக உள்ள காரின் கதவை பிடித்து நகராட்சி ஊழியர் திடீரென்று இழுத்தார். இதை சற்றும் எதிர்பாராத பா.ஜ.க பிரமுகர் காருக்குள் இருந்து கீழே விழுந்தார்.

அவரது கார் ஓட்டுனர் உடனடியாக காரை நிறுத்தியதால் அவர் சாலையில் விழாமல் காரின் பக்கவாட்டு பகுதியை பிடித்துக் கொண்டு காயமின்றி தப்பினார்

இதையடுத்து காரில் இருந்து இறங்கிய பாஜகவினர் மாஸ்க் போடவில்லை என்றால் கொலை செய்வீர்களா ? எனக்கேட்டு சம்பந்தப்பட்ட அடாவடி நகராட்சி ஊழியரை அடிக்க பாய்ந்தனர்.

உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்ப முயல, நகராட்சி ஊழியர்கள் பதிலுக்கு வாக்குவாதம் செய்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஓடும் காரின் கதவை இழுத்து நகராட்சி ஊழியர் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பா.ஜ.க பிரமுகர் போலீசில் புகார் அளித்தார். பதிலுக்கு நகராட்சி ஊழியர் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.

முகக் கவசம் அணிவது கொரோனாவிடம் இருந்து அவரவருக்கு மட்டுமல்ல அருகில் உள்ளோருக்கும் பாதுகாப்பு என்பதை உணரவேண்டும் அதே நேரத்தில் முகக் கவசம் விவகாரத்தில் போக்குவரத்து போலீசார் போல அபராதம் வசூலிப்பதில் பொதுமக்களிடம் கெடுபிடி காண்பித்தால் என்ன மாதிரியான பின் விளைவுகள் ஏற்ப்படும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments